

சென்னையைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தெரிவித்த புகாரில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த 2011-ல் அஞ்சலகங்கள் வாயிலாக ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது பின்பற்றப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைந்து ஆதார் அட்டை வழங்கும் முறை அப்போது இல்லை.
எனவே, அஞ்சலகங்களில் மக்கள்தொகை பதிவேட் டில் இணைப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆதார் நிரந்தர மையங்களில் வழங்கினால், தற்போது ஆதார் எண் பதிவு மட்டுமே நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பது தொடர்பாக பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பணியாளர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது ஆதார் எண் பெறுவதற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் பதிவுக்காக லட்சக்கணக்கில் மையங்களில் உள்ளன. இதற்கிடையில் ஆதார் எண்ணை மக்கள்தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஆதார் பதிவை முடித்த பிறகே, ஆதார் எண்ணை மக்கள்தொகை பதிவேட்டில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அதுவரை அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டையை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.