ஏழாவது உலகம்: ஜெனித்திற்கு ஏன் பதில் அனுப்பினீர்கள்?

ஏழாவது உலகம்: ஜெனித்திற்கு ஏன் பதில் அனுப்பினீர்கள்?
Updated on
2 min read

“என் பெயர் ஜெனித் கஸாலா. பார்ப்பதற்கு அழகாக கவர்ச்சியாக இருப்பேன். உங்களுடைய புரஃபைலைத் தற்செயலாகப் பார்த்தேன். கடவுள் எனக்காக உங்களை அனுப்பியிருக்கிறார் என தோன்றியது. என் அப்பா எனக்காக 100 கோடி ரூபாய் சம்பாதித்து என்னுடைய பெயரில் சொத்துகளாக வாங்கி வைத்திருக்கிறார். என் அம்மாவின் இரண்டாவது கணவர் அதை அபகரிக்க நினைக்கிறார். உங்களுக்கு என் மீது விருப்பம் இருப்பின் எனக்கு மெயில் அனுப்புங்கள். எப்போதும் உங்கள் நினைப்புடன் இருக்கும்…”

இது போன்ற ஒரு கடிதம் உங்களுக்கு கிடைத்து, நீங்கள் அதற்கு பதிலும் அனுப்பினால் என்ன நடக்கும்? ஜெனித் உங்களுக்கு தொடர்ந்து மெயில் அனுப்புவார். அவரது அழகான புகைப்படத்தை யும் அனுப்பிவைப்பார். வீடியோ வில் தோன்றி உங்களுடன் பேசுவார். இடையில் அவருடைய அம்மா வந்து தன் இரண்டாவது கணவரிடம் தான் படும் அவஸ் தைகளை விவரித்துவிட்டு எப்படியாவது ஜெனித்தை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று கண்ணீர் வடிப்பார். இது ஒரு கதை.

இன்னொரு கதையை கேளுங்கள். நீங்கள் வீட்டுக் கடன் வாங்கு வதற்கான முஸ்தீபுகளில் இருக்கும் போது உங்களுக்கு இலவசமாக கிரெடிட் கார்டு கொடுப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அந்த அழைப்பின் வழியாக உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் கிரெடிட் கார்டு குறித்த எல்லா விவரங்களையும் வங்கியில் இருந்து அழைத்து கேட்கும் தொனியிலேயே கேட்பார்கள். உங்களது வீட்டுக்கு கூரியர் பையன் வருவார். அவர் பணம் கேட்டால் கொடுத்து விடாதீர்கள். நாங்கள் அனுப்பும் ஒரு குறுஞ்செய்தியில் வரும் நம்பரை மட்டும் அவரிடம் கொடுங் கள் என்பார்கள். அதன்படி கூரியர் பையனும் வருவார். அவர் வந்த 5 நிமிடங்களில் ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வரும். அந்த எண்ணை எடுத்து கொடுப்பீர்கள்.

என்ன நடக்கும் தெரியுமா? உங்களது கிரெடிட் கார்டை ‘ஹேக்’ செய்து, அதில் ஏதாவதொரு பொருளையோ பணத்தையோ ’ஸ்வைப்’ செய்துவிட்டு காத்திருப் பார்கள். 20 ஆயிரம் ரூபாயோ 30 ஆயிரம் ரூபாயோ உங்களது கிரெடிட் கார்டிலிருந்து காணாமல் போயிருக்கும்.

‘நைஜீரியன் 419’ என்று உலகம் முழுக்க அழைக்கப்படும் இது போன்ற மோசடி வேலைகள் இப்போதுதான் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். தபால் காலத்தில் உங்களுக்கு ‘யூகே’ லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கடிதம் வரும். இமெயில் காலத்தில் ரிசர்வ் வங்கியில் முடங்கியிருக் கிற பணத்தை மீட்பதாக அதிகார பூர்வமான கடிதங்கள்போல வடிவமைத்த ஆவணங்களை இணைத்து மெயில்கள் வருகின்றன.

எல்லாம் நம்புகிற மாதிரியே இருக்கும். அவர்கள் இழுக்கும் வலைக்குள் சிக்கி நீங்கள் கடலின் அடியாழத்துக்கு சென்றுகொண்டே இருப்பீர்கள். உங்களை ஒரு முட்டு சந்தில் நிறுத்தி, கோடிக்கணக் கான ரூபாய் பரிசு பணத்தை பெறு வதற்காக தவணை தவணையாக பணத்தைக் கட்டச் சொல்வார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகுதான் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியவரும்.

இந்த மாதிரியான ஏமாற்று வேலைகள் எப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்பதை விளக்க சினிமா, புத்தகம், ஆவணப் படங்கள் வந்தபடியே இருக்கின்றன என்றாலும் ஏமாறுவோரின் எண் ணிக்கையும் பெருகியபடியே இருக்கிறது. இவர்கள் நோக்கம் லட்சக்கணக்கில் பணத்தை கறப் பது அல்ல. ஒரு சிலரை தவிர மற்ற வர்கள் தர மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரி யும். அவர்களின் குறி ஒரு சிறு தொகைதான். சிறு துளி பெரு வெள்ளம்.

அப்புறம் ஜெனித் என்ன செய்வார்? அவர் கிளம்பி விமான நிலையத்துக்கு வந்துவிடுவார். விமானத்துக்கு டிக்கெட் எடுப்ப தற்கு கையில் காசு எடுத்து வர முடியாத இக்கட்டான நிலை. கையறு நிலையில் அவர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் ஆபத்பாந்தவராக ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்துவீர்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக ஆகப்போகிறோம் என்கிற நினைப்பில் நீங்கள் மிதந்துகொண்டிருக்கும்போது, ஜெனித்துடனான இமெயில் தொடர்பு அறுந்து போயிருக்கும்.

இதுமாதிரியான ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிப்பது எப்படி? இதுபோன்ற மெயில் கள் வந்தால் உடனடியாக அதை குப்பைக்கு அனுப்பிவிடுங்கள். இல்லாவிட் டால் மேற்கொண்டு உரையாடலை தொடர்வதற்கு பத்தாயிரம் ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கில் போடச் சொல்லுங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பாருங்கள்!

கட்டுரையாளர்: சரவணன் சந்திரன், பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு. saravanamcc@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in