

ஹெல்மெட் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் ஹெல்மெட் கட்டாயத்தை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனரர்.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது கடந்த 1-ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் ஹெல்மெட் போதுமான அளவுக்கு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து 'தி இந்து' வாசகர் குரலில் பேசிய பொதுமக்கள், "ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதற்கான எந்த வசதியையும் அரசு செய்யாமல் இருப்பது நியாயமில்லை. நாங்கள் ஹெல்மெட் வாங்க கடைக்கு சென்றால் ஸ்டாக் இல்லை என்கிறார்கள். பல கடைகளுக்கு ஏறி இறங்கிய பின்னர் ஒருசில கடைகளில் கிடைக்கும் ஹெல்மெட் தரமானதாக இருப்பதில்லை. ஆனால் அதில் ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. விலையும் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
ஹெல்மெட் வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது நியாயமாக கிடைப்பதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை.
ஹெல்மெட் கட்டாயத்துக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம், விற்பனையை முறைப்படுத்துவதையும் கவனிக்க வேண்டும். அதிக விலை, தரமானதாக இல்லை, நாம் விரும்புவது கிடைப்பதில்லை, பல இடங்களில் ஹெல்மெட்டே இல்லை. இத்தனை குறைகளையும் வைத்து விட்டு, நாங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பது நியாயமற்றது. ஹெல்மெட் கட்டாயத்தை அமல்படுத்த சில நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.