நம்மைச் சுற்றி... | நாய் படுத்தும் பாடு!

நம்மைச் சுற்றி... | நாய் படுத்தும் பாடு!
Updated on
2 min read

நாய் படுத்தும் பாடு!

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவமனையில் மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் தலைவரும் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான நிர்மல் மஜியின் வளர்ப்பு நாய்க்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யான் இதைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையில், நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அந்த மருத்துவமனையின் இயக்குநர் பிரதீப் மித்ரா, தான் பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். பிரச்சினை பெரிதானதால் நாய்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும், இவ்விவகாரம் திரிணமுல் காங்கிரஸுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

அறை கொடுத்த மகன்

நெருக்கடிநிலைப் பிரகடனத்துக்குச் சிறிது காலம் முன்பு, பலர் முன்னிலையில் இந்திரா காந்தியின் கன்னத்தில் சஞ்சய் காந்தி ஆறுமுறை அறைந்ததாகக் கூறியிருக்கிறார் புலிட்சர் விருது பெற்ற பத்திரிகையாளரான லெவிஸ் எம்.சைமன்ஸ். நெருக்கடிநிலையின்போது வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளராக நியமிக்கப்பட்டவர் இவர். இந்திரா அரசால் இந்தியாவிலிருந்து அப்போது வெளியேற்றப்பட்டார். பின்னர், மொரார்ஜி தேசாய் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்தார். சம்பவத்தை நேரில் பார்க்காவிட்டாலும் நம்பத் தகுந்த இருவர் கொடுத்த தகவல் அது என்று சைமன்ஸ் கூறியிருக்கிறார். வெடித்திருக்கிறது சர்ச்சை.

கருணை கொண்ட நீதி

அமெரிக்காவின் மியாமி டேட் நீதிமன்ற நீதிபதி மிண்டி கிளேசர் வழங்கிய தண்டனை குற்றவாளி ஆர்த்தர் பூத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டவரான பூத், தன்னுடன் பள்ளியில் படித்தவர் என்று தெரிந்ததும் நீதிபதி மிண்டி வேதனை அடைந்தார். இளம் வயதில் பூத், நற்பண்புகள் கொண்டவராக இருந்தவர்; தன்னுடன் கால்பந்து விளையாடியவர் என்பதை நினைவுகூர்ந்தார். இதைக் கேட்ட பூத் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவருக்கு 44,000 டாலர் அபராதம் வழங்கிய நீதிபதி மிண்டி, தன் நண்பருக்காக அந்தத் தொகையைத் தானே கட்டினார். நட்பின் வலிமையையும் அறத்தையும் தனது நண்பருக்கு உணர்த்தியிருக்கிறார் நீதிபதி மிண்டி!

‘தலைமறை’வான நிதியமைச்சர்

கிரேக்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டின் நிதியமைச்சர் யானிஸ் வரோபாகிஸ் இடம்பெறக் கூடாது என்று அந்நாட்டுக்குக் கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கெடுபிடி காட்டியதைத் தொடர்ந்து, அரசுக்குச் சங்கடம் ஏற்படுவதை விரும்பாத யானிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பதவி விலகிய பின்னர், நிதியமைச்சகக் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்த அவர், மோட்டார் பைக்கில் தனது மனைவியுடன் கிளம்பிச் சென்றுவிட்டார். முக்கியமாக ‘ஹெல்மெட்’அணிய மறக்கவில்லை மனிதர்!

‘வாரி வழங்கும்’ தம்பதி!

உத்தரப் பிரதேச அமைச்சர் ஆசம் கானின் எருமை மாடுகள் ‘கடத்தப்பட்ட’ சம்பவத்தையும் அவற்றைக் கண்டுபிடிக்க குற்றப்பிரிவு போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் அலைந்ததையும் மறக்க முடியுமா? இதைவிட வேடிக்கையான விஷயம் இதில் உண்டு. எருமைகளைக் கடத்தியவர்களைக் கையும் கயிறுமாகப் பிடித்தவர் ரவிந்திர தோமர் எனும் காவல் துறை அதிகாரி. அவரது சேவையைப் பாராட்டி ரூ. 100-க்கான (நூறேதான்!) காசோலையை வழங்கியிருக்கிறார் சமூக ஆர்வலர் நூதன் தாகூர். கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதைப் ‘பாராட்டி’ அணியின் தலைவர் தோனிக்கு ரூ. 1,000 காசோலை அனுப்பிய அமிதாப் தாகூரை நினை விருக்கும்தானே. அவரது மனைவிதான் நூதன்!

குத்தகைக்கு விட்ட அதிகாரிகள்

உத்தரப் பிரதேசம், நொய்டா பகுதியில் மீன்வள மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 100 தொழிற்சாலைகள் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளன. ரூ.300 கோடி அபராதம் செலுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் 10 நாட்களுக்குள் மூடும்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த 90 ஆண்டுகளாக இந்த நிலத்தைத் தங்களுக்குக் குத்தகைக்கு விட்டது நொய்டா அரசு அதிகாரிகள்தான் என்று புலம்புகிறார் நொய்டா தொழிலதிபர்கள் சங்கத்தின் தலைவர் விபின் மால்ஹன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in