

தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு ஆராய்ச்சி விருதுக்கு தேர்வு செய்யப்படும் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், மாற்றுப் பணிக்கு ஆள் இல்லாததால் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படாமல் தவிக்கின்றனர். இதனால் ஆராய்ச்சிகளை உடனடி யாக தொடங்க முடிவதில்லை என அவர்கள் வேதனை தெரிவித் துள்ளனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் காலத்தில் சலுகைகளை இழக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரி யும் நூறு உதவிப் பேராசிரியர்களை ஆராய்ச்சி விருது பெற 2 ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்வு செய்து வருகிறது. இந்த விருதுக்கு தேர்வு பெறும் உதவிப் பேராசிரியர்கள், 2 ஆண்டுகள் குறிப்பிட்ட தலைப்பில் ஆராய்ச்சி செய்வார்கள். ஆராய்ச்சி யில் ஈடுபடும் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்களுக்கு, ஊதியத்துடன் ரூ.3 லட்சமும், கலைப் பிரிவு உதவிப் பேராசிரியர் களுக்கு ரூ.2 லட்சமும் பல்கலைக் கழக மானியக் குழு வழங்குகிறது.
2012-14ம் ஆண்டில் பல்கலைக் கழக மானியக் குழு, இந்த ஆராய்ச்சி விருதுக்கு தேர்வு செய்த 100 பேரில் 22 பேரும், 2014-16ம் ஆண்டில் 17 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தேர்வான 45 நாளில் மாற்றுப்பணி எனக்கூறி பணியில் இருந்து இவர்களை விடுவித்து ஆராய்ச்சிக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
கலை, அறிவியல் கல்லூரிகள்
பல்கலைக்கழகங்களில் பணிபுரி யும் உதவிப் பேராசிரியர்களை, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாற்றுப்பணி எனக்கூறி அனுப்பி விடுவதால், அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர் களை, தமிழக அரசு பணியில் இருந்து உடனே விடுவிப்பதில்லை.
சில கல்லூரிகளே, முயற்சி எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கின்றன. அப்படியே விடுவித் தாலும், அவர்களை ஊதியமில்லா விடுப்புடன் அனுப்புகின்றனர். அவர்களுக்கு 2 ஆண்டு ஆராய்ச்சி கால விடுப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்குவதில்லை என உதவிப் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
அனுமதி கிடைப்பதில் தாமதம்
இதுகுறித்து ஆராய்ச்சி விரு துக்கு தேர்வான கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் கூறியதாவது:
ஆராய்ச்சிக்கு செல்லும் உதவிப் பேராசிரியர்களுக்கு பதிலாக, மாற்றுப் பணிக்கு தற்காலிக ஊதியத்தில் உதவிப் பேராசிரியர் கள் நியமிக்கப்படுவதில்லை. முன்பு ஆராய்ச்சிக்கு செல்வதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதும். தற்போது உயர் கல்வித் துறை இயக்குநர், நிதித் துறை செயலர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகளை பெறுவதற்கு உதவிப் பேராசிரி யர்கள் அவஸ்தைப்படும் நிலை உள்ளது. இதனால், ஆராய்ச்சிகளை உடனடியாக தொடங்க முடியாமல் போகிறது.
அதனாலேயே, பல்கலைக் கழகப் பேராசிரியர்களைப் போல, கல்லூரிப் பேராசிரியர்களால் ஆராய்ச்சிகளில் ஈடுபட முடிவ தில்லை. ஆசிரியர் பணியோடு நிற்க வேண்டிய நிலை உள்ளது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்லூரி கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, அரசு நடைமுறைகளை மாற்ற முடியாது. முறையாக விண்ணப்பித்தால் உடனடியா கப் பணியில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். எந்த சிக்கலும் ஏற் படுவதில்லை என்றனர்.