Published : 23 May 2014 10:00 AM
Last Updated : 23 May 2014 10:00 AM

முன்னுதாரணமாக வாழ்ந்தவர் உமாநாத்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் புகழஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத் திருச்சியில் புதன்கிழமை மறைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகமாக வெண்மணி இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு வியாழக்கிழமை கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவரது மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியது: “மறைந்த உமாநாத் பன்முகத்தன்மை ஆற்றல் கொண்ட தலைவர். 74 ஆண்டுகள் புரட்சிக்காகவும், சோசலிசத்திற்காக வும், தொழிலாளர் கள் நலனுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை மேற்கொண்டவர். சாதியம் குறித்தும், பெண்களின் நிலை குறித்தும் காத்திரமான பங்கு வகித்தார். சிறந்த கம்யூனிஸ்ட் என்ற அடிப்படையில் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் முன்னுதாரணமான வாழ்க்கையை மேற்கொண்டார்” என்றார்.

அடுத்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில செயலர் பிமன் போஸ், “தமது வாழ்நாளில் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் உமாநாத். 1960-களில் நாடாளுமன்றத்தில் தொழிலாளர்களுக்காகவும், விவசாயி களுக்காகவும், உழைப்பாளி வர்க்கத் துக்காகவும் அவர் எழுப்பிய குரல் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியபோது, “ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர். அவர் விட்டுச்சென்ற பணியை நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் பேசுகையில், “உமாநாத் பிறந்த இடமும் தாய்மொழியும் வேறாகவும் இருந்தாலும், தமிழ் மக்களின் மொழியை அறிந்து அவர்களுக்காக போராடி குரல் கொடுத்தவர்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, “சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவார்கள். சில காலத்திற்குப் பிறகு கட்சியிலிருந்து விலகி அந்நியப்பட்டு நிற்பார்கள். ஆனால், உமாநாத் தான் வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு அர்ப்பணிப்புள்ள கம்யூனிஸ்ட்டாக விளங்கியவர்.

தான் மட்டுமல்லாது தனது வாரிசுகளான வாசுகி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவைத்து ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்” என்றார்.

உமாநாத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, சிஐடியு அகில இந்திய செயலர் ஏ.கே.பத்மநாபன், திமுக திருச்சி மாவட்டச் செயலர் கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ், எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

உமாநாத்தின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு உமாநாத்தின் உடல் செங்கொடி போர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x