Published : 27 Jun 2015 04:55 PM
Last Updated : 27 Jun 2015 04:55 PM

சாதனைகள் படைத்த சின்னப்பா தேவர்: வடுவூரான்

நேர்காணல்:>ஆட்டுக்கும் அவார்டு கொடுத்தவர்- இயக்குநர் ஆர். தியாகராஜன் சிறப்பு பேட்டி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வடுவூரான் கருத்து:

தமிழர்கள் என்றாலே ஏதோ ஆதிவாசிகள் என்ற நினைப்பில் அலட்சியமாக நடத்தும் பாலிவுட் நடிகர்களை வைத்து வெள்ளி விழா படங்களை எடுத்தது சாதாரண சாதனை அல்ல- ராஜேஷ் கன்னா, சத்ருகன் சின்ஹா, தர்மேந்தர், சஷி கபூர், மிதுன் சக்கரபர்த்தி என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு!

இதில் கோமாதா என் குலமாதாவின் ஹிந்தி பதிப்பை காய் அவுர் கவுரி என்ற பெயரில் சத்ருகன் சின்ஹா மற்றும் ஜெயா பச்சன் அவர்களை வைத்து எடுத்தார். பெரிய ஓட்டலில் ரூம் போட்டு நட்சத்திரங்களை தங்க வைத்து படப்பிடிப்பு சென்னை வாகினி ஸ்டூடியோவில் நடந்தது.

சாயங்காலம் அன்றைய படப்பிடிப்பு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த மேனேஜருக்கு அதிர்ச்சி- தினம் மூவாயிரம் ரூபாய் வரை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மது அருந்தியதற்கான பில்கள்!

அரண்டு போய் சின்னப்பா தேவரிடம் சொல்ல, வெற்றுடம்பும் சந்தனமுமாக அவரே நேரே ஹீரோவிடம் போய் தனது அரை குறை ஆங்கிலத்தில் இதெல்லாம் சென்னையில் வழக்கம் கிடையாது; பம்பாயோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! அப்படி குடிப்பது அவசியம் என்றால் உங்கள் செலவில் செய்து கொள்ளுங்கள் என்று சத்தம் போட்டதில் சத்ருகன் அரண்டு போய் அந்த செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்.

தமிழில் தயாரித்த "தெய்வச்செயல்' (மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், பாரதி நடித்தது) ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து கதையில் சில மாற்றங்களை செய்து ராஜேஷ் கன்னா-தன்னுஜாவை வைத்து தயாரித்து ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டார்.

அதுதான் "ஹாத்தி மேரே சாத்தி" என்ற தேவர் பிலிம்சின் முதல் ஹிந்தி படம்; வெள்ளி விழா படமும் கூட! அதன் பிறகு சில வருடங்கள் கழிந்த பின்னர் ஹாத்தி மேரே சாத்தியை எம்ஜீயார்-கே. ஆர் விஜயா நடிக்க நல்ல நேரமாக திரும்ப கொண்டு வந்தார்.

அட இது முன்னமே வந்த "தெய்வச்செயல்' தானே என்று யாரும் நினைக்கவில்லை. மீண்டும் மிகப் பெரிய வெற்றிப் படமாக செய்தனர் தமிழ் மக்கள்! இது போல யானைகளை வைத்து இந்தியிலும், தமிழிலும் மாற்றி மாற்றி மா, அன்னை ஒரு ஆலயம், ராம்-லக்ஷ்மண் என்று சலிக்காது படமெடுத்தார்; சலிக்காது மக்கள் வெற்றி அடைய செய்தனர்.

பெரிய பட நிறுவனங்களில் ஒன்றாக திழ்ந்ததொடு பேசிய சம்பளத்தை பைசா குறைக்காமல் கொடுக்கும் நாணயம் மிக்க நிறுவனமாகவும் திகழ்ந்தது தேவர் பிலிம்ஸ். இன்றைக்கு கோவையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவரது மகன் சி, தண்டாயுதபாணி அவர்களின் பேட்டியையும் எதிர்நோக்குகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x