

யுனெஸ்கோவும், விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்-ஸும் இணைந்து நடத்திய சர்வதேச போட்டியில் இந்திய அறிவியல் கழக மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர்.
இது குறித்து பரிசு பெற்ற குழு அளித்த தகவல்கள்:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ''ஏர்பஸ் ஃப்ளை யுவர் ஐடியாஸ்'' (Airbus Fly your Ideas) எனும் இப்போட்டியில் 104 நாடுகளில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது.
இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹரூர்சம்பத் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த சதிஷ்குமார் அனுசுயா பொன்னுசாமி, தாமோதரன் வீராசாமி உள்ளிட்டோர் அடங்கிய 'மல்டிஃபன்' (MULTIFUN) என்ற இந்திய குழுவினர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, சர்வதேச அளவில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய குழுவுக்கு கேடயமும், ரூ.22 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் நடுவர்களாக நாசா விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய உயரதிகாரிகள், யுனெஸ்கோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களின் இயக்குனர்கள் செயல்பட்டனர்.
மல்டிஃபன் குழுவினர், விமான இறக்கைகளில் உண்டாகும் அதிர்வினில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் யுக்தியை முன்னெடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, விமானத்தில் பயன்படும் ஒளி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முழுமையாக பயன்படுத்தலாம் எனவும், விமானத்திற்கு தேவையான எரிவாயுவையும் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வெற்றியைக் குறித்து குழுத் தலைவர் சதிஸ்குமார் கூறும்போது, "பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) விமான தொழில்நுட்ப துறையின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹரூர்சம்பத்தின் அறிவுரைப்படி, மல்டிஃபன் என்ற குழு அமைக்கப்பட்டது. இப்போட்டிக்கான மூலச் சிந்தனை NMCAD -IISc ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
எங்கள் குழுவில் உள்ளோர் உலகில் வெவ்வேறு மூலைகளில் இருந்தாலும் நேர வித்தியாசங்கள் போன்ற சிரமங்களை எல்லாம் தாண்டி, எங்களது புதிய யோசனையை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக ஈடுபட்டோம். இந்த புதிய சிந்தனையானது, அடுத்த தலைமுறை விமான தொழில்நுட்பத்திலும் மற்றும் பலதுறைகளிலும் பயனளிக்கும்" என்றார்.
இக்குழுவின் மற்றொரு மாணவர் தாமோதரன், “இவ்வகையான போட்டிகள் இந்திய விமானத் தொழில் துறைகளில் நடத்தப்பட்டால் இந்திய மாணவர்கள் மிகவும் பயனடைவர். அத்தோடு இந்திய விமானத்துறையின் வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
வெற்றி பெற்ற இந்தக் குழு, பிரான்சின் பாரிஸ் மாநகரில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். மேலும் பெங்களூருவில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைமையகத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்போட்டியில் பங்குபெற்ற சதிஷ்குமார், தாமோதரன், அஜித் மோசஸ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவின் வழிகாட்டியான பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத்தும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்.