Published : 17 Jun 2015 10:34 AM
Last Updated : 17 Jun 2015 10:34 AM

நம்மைச் சுற்றி... | பாஜக ஆட்சியிலும் கோல்கேட்

* சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜஸ்தான் அரசுக்குச் சொந்தமான பார்ஸா கிழக்கு மற்றும் கன்டா பஸன் நிலக்கரிச் சுரங்கங்களில், மோடிக்கு நெருக்கமான அதானி குழுமம் நிலக்கரியை வெட்டியெடுத்துச் செல்வதாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் புபேஷ் பாகேல் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், தங்களிடம் இதற்கான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக அதானி குழுமம் கூறுகிறது. இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துப் போராட காங்கிரஸ் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது.

* இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 2,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்கா தடை விதித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, ஹல்திராம் போன்ற நிறுவனங்கள் தயாரித்து அனுப்பும் நொறுக்குத் தீனி வகைகளுக்குப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (யு.எஸ்.எஃப்.டி.ஏ.) தடை விதித்திருக்கிறது. ஆனால், மூன்றாம் நிலைத் தரகர்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்குத்தான் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய நிறுவனங்கள் விளக்கம் அளித்திருக்கின்றன.

* போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆறு மாதச் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார் ஜாக்கி சானின் மகன் ஜேய்சி சான். அவரது பெயர் சீன அரசின் ‘தடை செய்யப்பட்டோர் பட்டியலில்’ இருந்துவந்தது. சென் கேய்க் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘மான்க் கம்ஸ் டவுன் தி மவுன்டேன்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், அவரது பெயரை அப்பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது சீன அரசு. படத்தில் அவர் இடம்பெறும் காட்சிகள் அதிகம் என்பதால், அந்தக் காட்சிகளை நீக்கிப் படத்தை வெளியிடுவது சிரமம் என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து, இறங்கி வந்திருக்கிறது சீன அரசு.

* ‘தி சிட்டி பியூட்டிஃபுல்’ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் சண்டிகர் நகரத்தில் நிலத்தடி நீர் கடுமையாகக் குறைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மத்திய நிலத்தடி வாரியம் (சி.ஜி.டபுள்யூ.பி.) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அந்நகரின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2001 முதல் 2011 வரை 28% உயர்ந்திருக்கிறது. நிலத்தடி நீரின் பயன்பாடும் அதிகரித்திருப்பதால், கணிசமான அளவுக்கு நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ‘நிலைமை இப்படியே நீடித்தால், 2026 வாக்கில் நாளொன்றுக்கு 52.30 கோடி லிட்டர் நீர் தேவைப்படும்’ என்கிறது அந்த அறிக்கை.

* பஞ்சாபில் நாய்க் கடியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் என்பதால், பொது மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்பட்டன. ஆனால், இனி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ‘லார்டு மகாவீரா’ பொது மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் ரூ. 20 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைதான் காரணம். “நிதி இல்லை என்பதால், ரேபிஸ் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று இனி காரணம் சொல்ல முடியாது” என்கிறார் உள்ளூர்வாசி ஒருவர்.

* பிஹார் மாநிலத்தின் பேத்தியா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பாவ்புரியில் உள்ள வர்தமான் ஆயுர்விஞ்ஞான் சன்ஸ்தான் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில், 350 இடங்களை நீக்க இந்திய மருத்துவ கவுன்சில் முடிவெடுத்திருந்தது. பேராசிரியர்கள் பற்றாக்குறை முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. எனினும், இந்த முடிவை மாற்றிக்கொள்வதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் குறிப்பிட்டிருக்கிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறை 10%-க்கும் குறைவாகக் குறைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x