Published : 21 May 2014 00:00 am

Updated : 21 May 2014 15:59 pm

 

Published : 21 May 2014 12:00 AM
Last Updated : 21 May 2014 03:59 PM

5 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 5 லட்சத்திற்கு வளர்ந்த சேவை- வியக்கவைக்கும் விவேகானந்தா டிரஸ்ட் இளைஞர்கள்

5-5

“ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி ஒரு பத்திரிகை முகவர். 7 வருடங்களுக்கு முன்பு இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘விவேகானந்தர் சேவா டிரஸ்ட்’டை தொடங்கினார்கள். இப்போது இதில் மெக்கானிக், கொத்தனார் என 30 பேர் உறுப்பினர்கள். 5 ரூபாய்க்கு மரக் கன்றுகளை வாங்கி நடுவதில் தொடங்கிய இவர்களின் சேவை இப்போது 5 லட்சம் ரூபாய் பங்களிப்பில் பொதுக்குளத்தை தூர்வாரும் பணியில் வந்து நிற்கிறது. இந்த இலக்கை எப்படி எட்டிப் பிடித்தார்கள் இந்த இளைஞர்கள்?


அதுகுறித்து பெரியசாமி பேசுகிறார். “பழனியில் பொது சேவை எதுவாக இருந்தாலும் அதில் எங்களையும் வலியப் போய் இணைத்துக் கொள்வோம். 30 பேரும் மாதம் 100 ரூபாய் சந்தா சேர்ப்போம். அத்துடன், நல்லவர்களிடம் இன்னும் கொஞ்சம் நிதி திரட்டி பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். பழனியில் திரியும் பரதேசிகளுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும். ஆனால், மனநிலை சரியில்லாமல் ரோட்டோரம் முடங்கிக் கிடக்கும் ஜீவன்களுக்கு அது சாத்தியமில்லை. தினமும் அவர்களில் பத்துப் பேருக்கு எங்கள் டிரஸ்ட் மூலமாக ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறோம். எங்களிடம் உள்ள இருப்புக்கு இவ்வளவுதான் செய்யமுடியும்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைப் பற்றி கவலைப்படாமல், பாலித்தீன் பொருட்களையும் காலி மதுபாட்டில்களையும் கொடைக் கானல் மலைச் சாலையில் கண்டபடி வீசிவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசன் முடிந்ததும் என்.சி.சி. மாணவர்கள் துணையோடு அந்த நச்சுக் கழிவுகளை எல்லாம் சேகரித்து நகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்ப்பது எங்கள் வேலை. 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணியை மேற்கொள்வோம்.

மலர் கண்காட்சி சமயத்தில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அவர்கள் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகளை வாங்கிக் கொண்டு துணிப் பைகளை கொடுப்போம். அத்துடன் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது எப்படி என விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கொடுப்போம்.பழனி அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டை ரெண்டு வருஷமா நாங்கள் தத்தெடுத்திருக்கிறோம். அந்த வார்டுக்கு வெள்ளையடித்து, மின் விசிறிகள் மாட்டி, ஜன்னல்களில் கொசு வலை அடித்து படுக்கை விரிப்புகள் வாங்கிக் கொடுத்து, பூந்தொட்டிகள் வைத்து சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறோம். அடிக்கடி நாங்களே அங்கு சென்று பினாயில் தெளித்து சுத்தம் செய்கிறோம்.

அடுத்த கட்டமா பழனியில் உள்ள வையாபுரி குளத்தை தூர்வாரும் பணியில் பொதுநல அமைப்புகளுடன் கைகோத்து இறங்கி இருக்கிறோம். இதற்கு 10 லட்சம் தேவை. இதில் பாதித் தொகையை செலுத்திவிட்டால் நமக்கு நாமே திட்டத்தில் மீதித் தொகையை பெற்று பணிகளை முடித்துவிடலாம்.

இந்தத் திட்டத்துடன் இதுவரை ரெண்டரை லட்சம் நிதி திரட்டி இருக்கிறோம். எஞ்சிய தொகையையும் திரட்டி வையாபுரி குளத்தை அழகுறவைப்போம்’’ என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் பெரியசாமி.

“நூறு இளைஞர்களை என்னிடத்தில் தாருங்கள்.. இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’’ என்று தெரியாமலா சொன்னார் விவேகானந்தர்!


விவேகானந்தா டிரஸ்ட் இளைஞர்கள்வையாபுரி குளம்சேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x