சிறிய சலூன்களில் தலைகாட்டும் 4 நிமிட ‘அடியாள்’: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் மசாஜ்

சிறிய சலூன்களில் தலைகாட்டும் 4 நிமிட ‘அடியாள்’: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் மசாஜ்
Updated on
1 min read

முப்பது ரூபாய் கொடுத்தால் 4 நிமிடம் உடலின் பின்பகுதி முழுவதும் மசாஜ் செய்யும் நவீன இயந்திரம், சென்னையில் உள்ள சிறிய சலூன் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

முன்பெல்லாம் சலூன் கடைக்காரரே வாடிக்கையாளருக்கு கட்டிங், ஷேவிங் முடிந்ததும் கை, கழுத்தில் சுளுக்கு எடுத்துவிட்டு இதமாக மசாஜ் செய்வார். அதற்கு தனியாக கட்டணம் வாங்கமாட்டார். ஆனால், இப்போது கடை வாடகை முதல் அனைத்துமே விலை அதிகரித்துவிட்டதால், சலூன்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது தவிர, போட்டியைச் சமாளிக்க புதுப்புது வசதிகளையும் அறிமுகம் செய்துவருகிறார்கள்.

நட்சத்திர ஓட்டல் சலூன்களில் கட்டிங், ஷேவிங், பேசியல், பிளிச்சீங் ஆகியவற்றுடன் புதிய உபகரணங்களைக் கொண்டு வெளிநாடுகளில் உள்ளதுபோல், பல்வேறு வகை மசாஜ்கள் செய்யப்படுகின்றன. ஆனால், சிறிய வகைக் கடைகளில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இப்போது சிறிய கடை களிலும் வாடிக்கையாளர்களைக் கவர மசாஜ் கருவிகளை பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இதனால், அதிக செலவின்றி இதமான மசாஜை சாதாரண வாடிக்கையாளரும் பெறமுடிகிறது. 4 நிமிடங்களில் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால் இக்கருவிக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த வசதியை புதிதாக பொருத்தி யிருக்கும் சலூன் கடையின் உரிமையாளர் எஸ்.மணி கூறுகையில், “சிங்கப்பூரில் இருந்து சுமார் ரூ.1.50 லட்சம் செலவில் மசாஜ் இயந்திரத்தை இறக்குமதி செய்தேன். பெரிய மால்களில்தான் இதுபோன்ற இயந்திரத்தை வைத்து 5 நிமிடத்துக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை வசூலிப்பார்கள். நாங்கள் 4 நிமிடங்களுக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கிறோம். இந்த மசாஜ் இயந்திரத்தில் 4 நிமிடம் உட்கார்ந்து எழுந்தால் உடலின் பின்பகுதி முழுவதும் நன்றாக அழுத்திவிட்டது போல அலுப்பு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in