சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?
Updated on
1 min read

திரும்பிய திசையெங்கும் நான்கே வாரங்களில் சிவப்பழகு பெறுவது எப்படி என்பதைப் பற்றித்தான் பலரும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்பாடுபட்டாவது சிவப்பு நிறத்துக்கு மாறிவிட வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெண்கள் மனதில் அந்த விளம்பரங்கள் விதைத்தபடி இருக்கின்றன. அதைப் பற்றிப் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

அழகு க்ரீம் விளம்பரத்தில் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியவை:

அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்தில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அப்படி இருக்கும் நிலையில் பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்? இந்த வாய்ப்பை மறுத்ததற்கு எவ்விதக் கவலையும் இல்லை. ஒரு பொதுமனுஷியாக எனக்கு பொறுப்புகள் உள்ளன.

என் சகோதரி மாநிறம் கொண்டவள், ஆனாலும் அழகானவள். இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்யமுடியும்?

இது என் மதிப்பீடுகள் தொடர்புடையது. மற்ற நட்சத்திரங்கள் இதைச் செய்கிறார்கள் என்றால், அது பொறுப்பற்ற நடத்தை. அவர்கள் அதைச் சரியென்று கருதினால் அவர்களது அபிப்ராயத்தை என்னால் மாற்றமுடியாது. அவரவர் நடவடிக்கைக்கு அவரவரே பொறுப்பு.

நந்திதா தாஸ், நடிகை:

குழந்தை வெள்ளையாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் காலையில் பால் குடிக்கும் தாய்மார்கள் இருக்கின்றனர். என் நண்பர் ஒருவர் தன் குழந்தைப் பருவம் முழுவதும் தன் சகோதரனைப் போல சிவப்பாக பிறக்காமல் போனதற்கு உற்றார் உறவினரிடம் சங்கடத்தை அனுபவித்துள்ளார். நம் எல்லாரிடமும் இதைப் போன்ற ஏராளமான கதைகள் உள்ளன.

'உறங்கும் அழகி' போன்ற தேவதைக் கதைகள் யார் அழகு என்பது குறித்துப் பேசுகின்றன. ஸ்நோ வொயிட் மற்றும் பார்பி பொம்மைகள் இளம்பெண்களின் லட்சிய உருவங்களாக மாறுகின்றன. நமது குழந்தைப் பருவத்திலிருந்தே தெளிவாக ஒரு கருத்து நம்மிடம் திணிக்கப்படுகிறது.

"கறுப்பான உருவத்துக்குள் நல்ல இதயம் இருக்கிறது" என்ற அர்த்தத்தில் திரைப்படப் பாடல்கள் உள்ளன. உங்களைச் சுற்றிப் பாருங்கள், சிவப்புதான் அழகானது என்ற கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பிரபலங்கள் கருத்து சொல்லியாகி விட்டது.

இதுபோன்ற சிவப்பழகு விளம்பரங்கள் குறித்தும், பெண்களை அலங்காரப் பொருட்களாகவே அறிமுகப்படுத்துவது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விவாதிக்கலாம் வாங்க...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in