

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டும் என வலியுறுத்தி, சேலத்தில் அதிமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இதுபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இன்னும் சில நாட்களில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் நிலையில், ‘தனக்காக அதிமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது’ என்று நேற்று முன்தினம் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சேலம் பெரமனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக தொண்டர் பாலகிருஷ்ணன். இவர் நேற்று காலை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணன் கைப்பட எழுதிய 3 பக்க கடிதத்தை கைப்பற்றினர். கடிதத்தில், ‘ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும், கடந்த 30 ஆண்டுக்கு மேலாக அதிமுக தொண்டராக இருந்து வருவதாகவும்’ குறிப்பிட்டு இருந்தார். பாலகிருஷ்ணனுக்கு அஞ்சலி தேவி என்ற மனைவியும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.