Last Updated : 08 May, 2014 09:34 PM

 

Published : 08 May 2014 09:34 PM
Last Updated : 08 May 2014 09:34 PM

சாதனையையும் சேவையையும் அடையாளமாகக் கொண்ட 75 வயது இளைஞர்!

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. அந்த விழா செய்தி சேகரிக்க சென்றபோது தோளில் சால்வையும், கையில் சான்றிதழுமாக துள்ளலோடு இருந்தார் ஒருவர்.

அவரிடம் சிறிய புன்முறுவலுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "என்ன சார் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களா?" என கேள்வி எழுப்பினேன்.

"நான் ஓய்வு பெற்று 17 ஆண்டுளாகிவிட்டன. தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் குண்டெறிதல் பிரிவில் பங்கேற்று 3ம் இடம் பிடித்துள்ளேன். அதற்காக சங்கத்தில் பாராட்டி பரிசு வழங்கினர்" எனக் கூறி ஆச்சரியத்திற்குள்ளாகினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''நாமக்கல் ஏ.எஸ். பேட்டையில் வசித்து வருகிறேன். என் பெயர் எஸ். என். கொளந்தன். நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து, கடந்த 1997ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். பள்ளி காலம் தொட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகம். குறிப்பாக ஹாக்கி, தடகள போட்டியில் ஆர்வம் அதிகம். பணியில் இருக்கும் போது துறை சார்பில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளேன். ஓய்வு பெற்ற பின், அதற்கான வாய்ப்புகள் குறைந்தது.

எனினும், நாள்தோறும் உடற்பயிற்சி உள்ளிட்டவை மேற்கொள்ள தவறுவதில்லை. இச்சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மாஸ்டர்ஸ் அத்தலெட்டிக் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடத்தப்படுவதை அறிந்தேன். அந்தப் போட்டியில் 40 வயதைக் கடந்த நபர்கள் பங்கேற்கலாம்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. அனைத்து தரப்பினரும் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்தப் போட்டிக்கான விளம்பரம் நாளிதழ்களில் வெளியானது. அதையடுத்து அப்போட்டியில் கலந்து கொண்டேன். குறிப்பாக குண்டெறிதல், ஈட்டி மற்றும் வட்டெறிதல் போட்டியில் கலந்து கொள்வேன். இந்தாண்டு தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி கோவையில் சென்ற பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

அந்தப் போட்டியில் குண்டெறிதல் பிரிவில் கலந்து கொண்டேன். அதில் 9.17 மீட்டர் குண்டெறிந்து தேசிய அளவில் 3ம் இடம் பிடித்தேன். 2ம் இடம் பிடித்திருந்ததால் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். எனினும், 3ம் இடம் பிடித்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என உற்சாகத்துடன் கூறினார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பலர் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் பெறுவதற்கு வழிமுறை தெரியாமல் தடுமாறுவர். அவர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளிலும் எஸ். என். கொளந்தன் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்தி வருகிறார். அவரது நற்செயலை பாராட்டி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பட்டயப் பொறியாளர் பெருமன்றத்தினர் பவழ விழா மலர் வெளியிட்டு பாராட்டியுள்ளனர்.

ஓய்வு பெற்று 17 ஆண்டுகளை கடந்து 75 வயதைத் தொட்டபோதும் 20 வயது இளைஞருக்கு உண்டான சுறுசுறுப்புடன் காணப்படும் கொளந்தன், அவர் வயதுடையவர்களுக்கு மட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் என்றால், அதில் மாற்றுக் கருத்தில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x