உ.பி.யில் யானைகளை பொது விழாக்களில் பயன்படுத்த தடை

உ.பி.யில் யானைகளை பொது விழாக்களில் பயன்படுத்த தடை
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பொது இடங்களில் யானைகளை பயன்படுத்த, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தடை விதித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சக மானியக் கோரிக்கையின் போது முதல்வர் அகிலேஷ் பேசுகையில், "பொது இடங்களில் யானை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த விலங்கை திருமணங்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்த மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும்.

வனவிலங்கு பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய விலங்கான யானையை பாதுகாக்கும் பொருட்டு சம்பல் மற்றும் எட்டவா பகுதியில் மீட்பு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களுக்காக நம் அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்று விட்டது" என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் தனிமெஜாரிட்டியுடன் ஆளும் கட்சியாக இருக்கும் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சியின் முக்கிய எதிர்கட்சியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. இதன் சின்னமாக யானை இருப்பதால், வனவிலங்குப் பாதுகாப்பு எனும் பெயரில் அம்மாநில அரசு யானைக்கு இந்த தடை விதித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து உபி மாநில எதிர்கட்சித் தலைவரான சுவாமி பிரசாத் மௌரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக சமாஜ்வாடி அரசு ஒன்றுமே செய்யவில்லை. எங்கள் ஆட்சியில் ஆக்ராவில் யானை மற்றும் கரடிக்காக இரு மீட்பு மையங்கள் ஆக்ராவில் அமைக்கப்பட்டன. முதல்வரின் இந்த தடை அறிவிப்பு அவரது தடித்த மனதைக் காட்டுகிறது" என நேரடியாகக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து சமாஜ்வாடியின் நிறுவனரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆசம்கான் கூறுகையில், "முதல்வர் அறிவித்துள்ள மீட்பு மையங்களில் எட்டவாவில் ஆண் யானைக்கும், எனது தொகுதியான ராம்பூரில் பெண் யானைக்கும் அமைக்கப்பட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

அகிலேஷுக்கு முன்பாக உபியில் முதல் அமைச்சராக இருந்த மாயாவதி, லக்னோ மற்றும் நொய்டாவில் கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு சார்பில் செலவழித்து பிரம்மாணடமான யானை சிலைகளை அமைத்திருந்தார். இதன் மீது தேர்தல் சமயத்தில் மத்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவை பிளாஸ்டிக் துணிகளால் மறைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இம் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு வரும் 2017 ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in