

பாஜக மக்களவையில் முழுப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும்கூட மாநிலங்களவையில் அந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அதனால், மாநிலங் களவையில் பெரும்பான்மையைப் பெற பாஜக, மற்ற கட்சிகளின் ஆதரவை பெற திட்டமிட்டுள்ளது.
சாதாரண மசோதாக்களைத் தவிர்த்து நிதி தொடர்பான முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். தற்போதைய மாநிலங்களவையின் உறுப்பினர் பலம் 245. இதில் காங்கிரஸ் 68 உறுப்பினர்களையும், பாஜக 46 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. தவிர, பகுஜன் சமாஜ் 14, திரிமுணல் காங்கிரஸ் 12, அதிமுக 10, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், ஜனதாதளம் தலா 9, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் தலா 6, திமுக 4, இந்திய கம்யூனிஸ்ட் 2 மற்றும் சுயேச்சைகள், உதிரிக் கட்சிகள் 9 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
கூட்டணி பலம் என பார்த்தால் காங்கிரஸ் கூட்டணி 80 உறுப்பினர்களையும், பாஜக கூட்டணி 64 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. எனவே, நிதி தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றும்போது பாஜக-வுக்கு இன்னும் 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக-வினர், “தற்போது மோடி பிராந்திய கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று அவர் நினைக் கிறார். அதுவே நாட்டின் சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதனால், ஓரளவு கணிசமான மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கும் அவர் அமைச்சரவையில் இடம் கிடைக்கக்கூடும்” என்கின்றனர்.
அமைச்சரவையில் பிராந்தியக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதன் மூலம் அந்தக் கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர் ஆதரவை பாஜக பெற திட்டமிட் டுள்ளது. அதனால்தான், மோடி தனிப் பெரும்பான்மை பெற்றிருந் தாலும்கூட அனைத்து கட்சிகளின் ஆதரவை கேட்கிறார். 2015-ம் ஆண்டில் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களின் பதவிகள் காலியாகின்றன.
அந்த இடங்களுக்கு உத்தரப் பிரதேசத்தி லிருந்து 7 பேரும், கர்நாடகத் திலிருந்து 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட்டில் இருந்து தலா ஒருவரும் தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட 12 பேருமே சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதனால், அந்த இரு கட்சிகளுமே பாஜக-வுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இல்லை. இடதுசாரிகளின் 11 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
இந்நிலையில் ஓரளவு நட்பு நிலையில் இருக்கும் அதிமுக, பிஜு ஜனதா தளம் மற்றும் உதிரிக் கட்சிகளின் தயவை எதிர்பார்த்து நிற்கிறது பாஜக.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “மாநிலங்களவையில் பெரும்பான்மையைப் பெற பாஜக-வுக்கு பிற கட்சிகளின் தயவு தேவை இருக்காது. பஞ்சாபில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தெலங்கானா, சீமாந்திரா ஆகியவை பாஜக-வுக்கு ஆதரவு தருகின்றன. எனவே பாஜக-வின் சொந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் பலத்திலேயே விரைவில் அந்த அணிக்கு 50-க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.
எனவே, முக்கிய மசோதாக் களை நிறைவேற்றுவதில் பாஜக-வுக்கு சிக்கல் இருக்காது” என்றார்.