Published : 02 Apr 2014 02:47 PM
Last Updated : 02 Apr 2014 02:47 PM

இந்த சின்னம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..!

தமிழக அரசியல் பிரமுகர்களில் அதிக சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளராக திகழ்பவர் தற்போது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர்.

அதிமுக தொடங்கப்பட்டவுடன் 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் சு.திருநாவுக்கரசர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் அதே தொகுதியில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது (ஜெ., ஜா) 1989-ம் ஆண்டு அதே தொகுதியில் அதிமுகவின் ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகிய திருநாவுக்கரசர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அதே தொகுதியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து 1996-ல் அதிமுக சார்பில் அதே தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கி 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் 1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் திமுக, பாஜக கூட்டணியில் எம்ஜிஆர் அதிமுக சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்த திருநாவுக்கரசர், தொகுதி மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டதால், பாஜக வேட்பாளராக 2009-ல் தாமரை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் பாஜகவில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

மத்திய, மாநில அமைச்சராக இருந்த சு.திருநாவுக்கரசர் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை ஆகிய 7 சின்னங்களில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x