தூத்துக்குடியில் போட்டியிட மதிமுக தீவிரம்- சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்குமா?

தூத்துக்குடியில் போட்டியிட மதிமுக தீவிரம்- சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்குமா?
Updated on
1 min read

தூத்துக்குடி தொகுதியில் மதிமுக-வின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடுவது நூறு சதவீதம் உறுதியாகி விட்டது.

விருதுநகர் தொகுதிக்கு அடுத்தபடியாக வைகோ திட்டமிட்டுக் கேட்கும் தொகுதி தூத்துக்குடி. சரிந்தாலும் எழுந்தாலும் தனக்கு பக்க பலமாக நிற்கும் ஜோயலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வைகோ நினைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

தூத்துக்குடி இந்தமுறை மதிமுக-வுக்குத்தான் என தீர்மானித்துவிட்ட வைகோ, இரண்டு மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தவரை கோவில்பட்டி, விளாத்தி குளம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி களிலும் நாயுடு சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் இங்கு மதிமுக-வுக்கு தனி செல்வாக்கு உண்டு.

இதேபோல், தொகுதியின் தென் பகுதியான திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது பாஜக. மேலும், ஜோயல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளையும் எளிதில் கவர்ந்துவிடலாம் என்பது வைகோ-வின் கணிப்பு.

ஆனால் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் வாக்குகள் மதிமுக-வுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் 13 சதவீதம் கிறிஸ்தவர்களும் 5 சதவீதம் முஸ்லிம்களும் இருப்பதால் இங்கு சிறுபான்மையினரே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.

இத்தொகுதியில் 6 சதவீதத்துக்கும் அதிகமாக மீனவர்களின் வாக்கு இருக் கிறது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, தாது மணல் விவகாரம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மீனவர்களுக்கு ஆதரவாக வைகோ போராடி இருப்பது ஜோயலின் வெற்றிக்கு துணை நிற்கும். ஆனாலும், கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் பாஜக-வுடன் மதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதால் மீனவர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு கிடைப்பதிலும் சிக்கல்!

இதுகுறித்து மாவட்ட மதிமுக நிர்வாகி ஒருவர் ’தி இந்து’விடம் பேசுகையில், அரசியலில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பார் வைகோ. என்றைக்குமே மீனவர்களுக்கு ஆதரவான இயக்கம் மதிமுக. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் வந்துவிடக் கூடாது என்பதில் மீனவர்கள் உறுதியாக உள்ளனர். அதே கொள்கையில் வைகோவும் உறுதியாக இருக்கிறார். எனவே, மீனவர்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in