Published : 15 Dec 2014 04:15 PM
Last Updated : 15 Dec 2014 04:15 PM

தமிழ் இந்துவை படிப்பது பரவசம்: சாரு நிவேதிதா

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாசகர் திருவிழா நடந்து வருகிறது. கோவையில் தொடங்கிய வாசகர் திருவிழா, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 13-வது வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நேற்று சிறப்பாக நடந்தது.

விழாவில், சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், சட்டம் தொடர்பான நூல்களின் எழுத்தாளருமான கே.சந்துரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிரபல இலக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். ஏராளமான வாசகர்கள், விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர் சாருநிவேதிதா பேசியதாவது: நமது பள்ளிகள் கற்றுத் தராத சமூக நீதியையும், சமகால வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும் ‘தி இந்து’வில் வெளியாகும் கட்டுரைகள் கற்றுத் தருகின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு மாதிரியான தத்துவப் போக்கையும் கோட்பாட்டு நோக்கையும் கொண்டதாக இருக்கிறது. கட்டுரை ஆசிரியருக்கு அந்தப் பத்திரிகை தரும் சுதந்திரம் பெரிய விஷயமாகப்படுகிறது.

வெறும் அறிவு மட்டும் போதாது. கலாச்சார விழிப்புணர்வும் வேண்டும். அதை உருவாக்கும் வேலையை தமிழ் இந்து நாளிதழ் செய்து வருகிறது. நல்ல படம், நல்ல இசை, நல்ல இலக்கியம் இதெல்லாம் உருவாவதற்கு இந்து இதழில் வருகிற நடுப்பக்கக் கட்டுரைகள்தான் காரணம். 20, 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒரு வேலையை ஒரே வருடத்தில் தமிழ் இந்து பத்திரிகை சாதித்துள்ளது.

இன்றைக்கு தமிழ் வெறும் பேச்சுமொழியாக மாறிப்போயிருக்கிறது. நம் வீட்டுக் குழந்தைகள் தமிழ் படிப்பதில்லை. தமிழுக்கு எப்போது அதிகாரம் கிடைக்கிறதோ அப்போதுதானே தமிழ் படிக்க முடியும். தமிழை கட்டாயம் படிக்க வேண்டிய மொழியாக அறிவிக்க வேண்டும். இங்கேதான் தமிழ் படிக்காமலேயே பிஹெச்டி. முடிக்கலாம், எம்.பி.பி.எஸ். முடிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

நான் சிறுவனாக இருந்தபோது, ‘இங்கிலீஷ் தெரியணும்னா ‘தி இந்து படி’ என்று தாத்தா சொல்வார். இப்போது இருக்கும் சூழலில், எனக்குத் தெரிந்த சிறுவர்களிடம் எல்லாம் ‘தமிழ் இந்து படிங்க, தமிழ் இந்து படிங்க’ என்று கேன்வாஸ் செய்துகொண்டிருக்கிறேன். இங்கே எல்லோரும் தமிழ் இந்துவைப் பற்றி ஏன் இவ்வளவு பெருமையாக பேசுகிறார்கள். ஏனென்றால், தமிழ் இந்துவை படிப்பதென்பது ஒரு பரவசம், அது ஒரு மறுமலர்ச்சி. இந்த நல்ல சூழலில் இந்து பத்திரிகை நிறுவனர்களுக்கும் தமிழ் இந்து ஆசிரியர் குழுவினருக்கும் மூன்று விஷயங்களைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மலையாளத்தில் வரும் ‘மாத்ருபூமி’ பத்திரிகை, வார இதழ் ஒன்றை மிகச் சிறப்பான முறையில் கொண்டு வருகிறது. இங்குள்ள பத்திரிகைகள்போல் 95 சதவீதம் சினிமா மட்டுமே இல்லாமல், இலக்கிய இதழாக அந்த வார இதழைக் கொண்டு வருகிறது. அதில், கொஞ்சம் சினிமா இருக்கும். அதுபோன்ற ஒரு வார இதழை தமிழ் இந்து கொண்டுவர வேண்டும்.

உலக அளவில் பெரிய இலக்கியத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஜெய்ப்பூரில் நடக்கும் ‘லிட்ரஸி ஃபெஸ்டிவெல்’ விழாவை சொல்கின்றனர். இதில், 15 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். அப்படி உலக எழுத்தாளர்கள் எல்லாம் பங்கேற்கிற மாதிரியான ஒரு சர்வதேச இலக்கிய விழாவை சென்னையில் நீங்கள் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்.

இந்த இரண்டையும்விட மிக முக்கியமான ஒன்று. நோபல் பரிசு மாதிரி, அயர்லாந்தில் உள்ள ‘டப்ளின்’ என்ற ஊரில் உள்ள ஒரு லைப்ரரி ‘டப்ளின் இம்பாக் அவார்டு’ என்ற விருதை கொடுக்கின்றனர். இது, நோபல் பரிசுக்கு இணையான பரிசுத் தொகையைக் கொண்டது. இந்த அவார்டு வாங்குபவர்களை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கின்றனர். இங்கே ஆண்டுதோறும் 57 பேருக்கு கொடுக்கும் கலைமாமணி விருது மாதிரி இல்லாமல், மிகப் பெரிய பரிசுத் தொகையோடு கூடிய உலக அளவிலான பெரிய விருது ஒன்றை ‘தி இந்து’ வழங்க முன்வர வேண்டும்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x