Published : 08 Dec 2014 02:55 PM
Last Updated : 08 Dec 2014 02:55 PM

தமிழ் படிக்காதவர்களையும் தமிழ் படிக்க வைக்கும் தி இந்து: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பெருமிதம்

தமிழ் படிக்காத மக்களைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். 'தி இந்து' நாளிதழ் மூலம் இனி அவர்களும் தமிழ் படிக்க வருவார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பெருமிதம் தெரிவித்தார்.

'தமிழால் இணைவோம்' என்ற முழக்கத்துடன் 'தி இந்து' தமிழ் நாளிதழ் தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி, அதனை கொண்டாடும் வகையிலும், மேலும் நாளிதழை மேம்படுத்த வாசகர்களிடம் ஆலோசனைகளை பெறும் வகையிலும், கோவையில் தொடங்கி புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் வாசகர் திருவிழா நடந்து முடிந்துள்ளது. 12-வது வாசகர் விழாவாக, ஈரோடு வாசகர் திருவிழா, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று விமரிசையாக நடந்தது.

ஈரோடு வாசகர் திருவிழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா பேசும்போது, 'எத்தனையோ நாளிதழ்கள் இருந்தாலும், வாசகர் திருவிழா நடத்திய முதல் நாளிதழ் 'தி இந்து' மட்டுமே. வாசகர்களின் எண்ணம், விமர்சனங்களை கேட்டு, பத்திரிகை தருமம் தவறாமல் 'தி இந்து' நாளிதழ் நடப்பதற்காக பாராட்டுகிறேன்.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் 'தி இந்து' நாளிதழ், நாள்தோறும் ஒரு சிறப்பான தொடரை வழங்குவதன் மூலம், பல்சுவை கதம்பமாக விளங்குகிறது. வாரத்தின் 7 நாட்களிலும் 7 வண்ண இதழ்களை கொடுப்பதன் மூலம், வானவில்லின் வர்ணஜாலத்தை பார்க்கிறோம். இந்த 7 இணைப்புகளும் ஏழு ஸ்வரங்களுக்கு இணையானது. இதனை நாளிதழ் என்று சொல்ல முடியாது. நாள்தோறும் வரும் புத்தகம் என்றுதான் நான் சொல்வேன்' என்றார்.

முன்னதாக, வாசகர் விழா நடக்க அரங்கம் அளித்து உதவிய வேளாளர் கல்வி நிறுவன தாளாளர் எஸ்.டி.சந்திரசேகரை, 'தி இந்து' ஆசிரியர் குழுவினர் கவுரவித்தனர். வாசகர் திருவிழாவில், திருப்பூர் மாவட்ட நீதிபதி திலகம், வேளாளர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி.கமலவேணி, வேளாளர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன், அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வி.கே.ராஜமாணிக்கம், கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவர் நல்லசாமி, பல்வேறு விவசாய, பொது நல அமைப்பினர், வாசகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் பொது மேலாளர் வி.பாலசுப் பிரமணியன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார். 'தி இந்து' நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.

'தி இந்து'தமிழ் வாசகர் திருவிழாவை லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராமராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், வேளாளர் பொறியியல் கல்லூரி, கோகினூர் ஓட்டல்ஸ், மில்கா பிரட் ஆகியவை இணைந்து நடத்தின. வாசகர்களுக்கு மில்கா பிரட் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில் மற்றும் கேக் ஆகியவை வழங்கப்பட்டன. 'தி இந்து'தமிழ் வெளியீடுகளான பொங்கல் மலர், ஆடி மலர், தீபாவளி மலர், 'தி இந்து'ஆங்கில வெளியீடுகள் விழா அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x