மனப்பாடம் மட்டும் போதுமா?

மனப்பாடம் மட்டும் போதுமா?
Updated on
1 min read

இன்றைய மாணவனுக்குத் திருக்குறள் இரண்டு மார்க். நாலடியார் நான்கு மார்க். அவ்வளவுதான். அவற்றைத் தங்களின் வாழ்க்கைக்காகப் பயன்படுத்துவதில்லை.

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று அறிவார்ந்த மாணவரை உருவாக்காமல் அதிக மதிப்பெண்ணுக்கு உழைக்கச் சொல்கிறார்கள்.

மதிப்பெண்கள் மட்டுமா?

உண்மையான கல்வி என்றால் நல்லவற்றைக் கற்றுக்கொடுத்துத் தர்க்கரீதியான அறிவை மாணவர்களுக்குள் விதைப்பதுதான். சுயசிந்தனை, தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு அகராதியில் அர்த்தம் தேடும் நிலையில்தான் உள்ளது இன்றைய மாணவர் சமூகம்.

மதிப்பெண் முக்கியம் அல்ல என நான் வாதிடவில்லை. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் அல்ல என்பதே என் வாதம். நல்ல தமிழ் கருத்துகளும் ஆங்கில இலக்கியங்களும் வீரவரலாறுகளும் வெறும் வார்த்தைகளாய்த்தான் மாணவர்களால் உச்சரிக்கப்படுகின்றன. அதன் உணர்வைப் பெற மாணவர்கள் தவறிவிட்டனர்.

அறிவியல் விதிகளை மனப்பாடம் செய்துகொண்டே இருந்தால் மட்டும் நம் நாடு அறிவியலில் முன்னேறுமா என்ன?

கணிதத்தின் கடைசிக் குழந்தையான ராமானுஜன் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறத் தவறினாலும் தன் கணிதத் திறமையால் உலகையையே வென்றான். அப்படிப்பட்ட தனித்திறமை படைத்த மாணவர்களின் இன்றைய நிலை என்ன? இத்தகைய தனித்திறமை கொண்ட எத்தனை ஜி.டி. நாயுடுகள் இளம் விஞ்ஞானிகளாகப் பள்ளிகளில் இருக்கிறார்களோ? மதிப்பெண் குறைவால் தற்கொலைக்கு முயலும் மாணவனைப் பாருங்கள்.தோல்வியை ஏற்கும் தைரியத்தைத் தர வேண்டாமா நமது கல்விமுறை?

பொ.சிவகணேஷ், ஆசிரியர்
sivaganesh462@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in