மும்பை கேட்: ‘பாகுபலி’ தந்த விளைவு!

மும்பை கேட்: ‘பாகுபலி’ தந்த விளைவு!
Updated on
1 min read

‘பாகுபலி’ திரைப்படத்தின் அபரிமிதமான வசூல் வெற்றி பாலிவுட்டில் பல தயாரிப்பாளர் களையும் இயக்குநர்களையும் ஊக்குவித்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் கதாபாத்திரங்களில், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் சாயல் இருந்தது அவர்களைப் பெரிதும் ஈர்த்துவிட்டது. இதனால் அவ்விரு இதிகாசங்களையும் சுவாரசியமான திரைக்கதையில் பிரம்மாண்ட திரைப்படங்களாகத் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள்.

“இதற்குமுன் மகாபாரதமும் இராமாயணமும் எத்தனை முறை தயாரிக்கப்பட்டிருந்தாலும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதைப் புதிய வடிவமைப்பில் தரும்போது வசூலை அள்ளிவிடலாம்” என்ற அறிக்கை யுடன் களத்தில் இறங்கியிருக்கிறது மது மண்டேனா, அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா ஆகிய மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்த அணி. இவர்கள் மூவரும் இனைந்து  ரூபாய் 500 கோடியில் இராமாயணத்தை 3டியில் மூன்று பாகங்களாகத் தயாரிக்கிறார்கள்.

இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை ‘தங்கல்’ படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரியும் ‘மாம்’ படத்தின் இயக்குநர் ரவி உத்யவாரும் இணைந்து இயக்குகிறார்கள். மும்மொழியில் தயாராவதால் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட திரையுலகங்களைச் சேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். 2021-ல் முதல் பாகத்தை வெளியிடுவது இவர்களின் திட்டமாம்!

அதிரும் பாலிவுட்

அறிமுக நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டியே இந்தி மறு ஆக்கத்தையும் இயக்கினார். சாகித் கபூர், கியாரா அத்வானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் ‘கபீர் சிங்’ என்ற தலைப்புடன் கடந்த ஜூன்  21-ல் வெளியாகி பாலிவுட்டை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை 225 கோடி வசூல் செய்திருக்கும் இந்தப் படத்தின் நாயகன் சாகித் கபூர், கியாரா அத்வானி இருவருக்கும் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்திருப்பதுடன் பட வாய்ப்புகளும் குவிந்துவருகின்றன. ‘கபீர் சிங்’ படத்தின் வசூலைப் போலவே படம் உருவாக்கியிருக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இதற்கிடையில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை சந்தீப் ரெட்டியின் உதவியாளர் கிரிசாய்யா தமிழில் இயக்கிவருகிறார். தமிழிலும் இதேபோல் பிரம்மாண்ட வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in