Last Updated : 29 Jun, 2019 02:51 PM

Published : 29 Jun 2019 02:51 PM
Last Updated : 29 Jun 2019 02:51 PM

உலகமே கொண்டாடும் லேப்ராஸ்கோப்பி பிதாமகன்: `ஜெம்’ மருத்துவமனை டாக்டர் சி.பழனிவேலு

இதய ஓட்டத்தை அளவிடுகிற இ.சி.ஜி. பரிசோதனையில், நம்முடைய இதயத் துடிப்பின் அதிர்வுகள் மேலும், கீழுமாக வந்துபோகும். அந்த அதிர்வலைகளின் படம் மேலேயும், கீழேயும் அலைபாயாமல், ஒரு நேர்க்கோட்டில் சமமாக இருந்தால், நம்மைவிட்டு உயிர் பிரிந்துவிட்டது என்று அர்த்தம். எல்லாருடைய வாழ்விலும் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். 

இதுவே போதும் என்று ஏற்றத்திலேயே தங்கிவிடாமலும், விதி இவ்வளவுதான் என்று இறக்கத்திலேயே தேங்கிவிடாமலும் இருக்கிறவரை நமது வளர்ச்சியை யாரும் தடுக்கமுடியாது” என்கிற டாக்டர் பழனிவேலு, இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை துறையில் தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பி.சி.ராய் விருதை இரண்டு முறை பெற்ற வெகு சிலரில் ஒருவர். கோவை ஜெம் மருத்துவமனையை நிறுவியவர். லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பதில், இவர் கண்டறிந்த அறுவைசிகிச்சை நுட்பங்களை, உலகில் பல முன்னேறிய நாடுகளில் மருத்துவ மாணவர்கள் பாடமாகப் படிக்கிறார்கள். அவரை சந்தித்தோம்.

“நாமக்கல் பக்கத்தில் மேல்சாத்தாம்பூர் என்கிற சின்ன கிராமம்தான்  பூர்வீகம். 1950-களில் தமிழகத்தில் நிலவிய கடும் பஞ்சம், பல ஏழைக்  குடும்பங்களை ஊரைவிட்டு மட்டுமின்றி, நாட்டை விட்டும் துரத்தியது. மலேசியா, பர்மா, பினாங் போன்ற பல நாடுகளுக்கு கூலி தொழிலாளர்களாக குடிபெயர்ந்தார்கள் மக்கள். அதில் ஒரு குடும்பமாக 1953-ல் எங்கள் குடும்பம் மலேசியாவில் தஞ்சம் புகுந்தது.

அகதி வாழ்க்கையின் துயரம்!

எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கை, பாறையை தலையில் மோதி உடைப்பதைப் போல கடினமானது. மலேசியாவில் பாமாயில் தோட்டத்  தொழிலாளியின் மகனாக எனது சின்னசின்ன ஆசைகள்கூட  நிறைவேறியதில்லை. ஒருவேளை சுடுசோறு சாப்பிட தினமும் மணிக்கணக்கில் உழைக்க வேண்டியிருக்கும்.

அங்குதான் என்னிடம் போராடும் குணம்  ஒட்டிக்கொண்டது. தாயகம் விட்டுப் பிரிந்து, அறிமுகம் இல்லாத வேறொரு நாட்டில் பிழைப்பு நடத்துவது என்பது விவரிக்க முடியாத துயரம். ஆதரவற்ற அந்த அகதி சூழ்நிலை, பாதுகாப்பு இல்லாத மனநிலையைத் தந்தது.

பஞ்சம் பிழைக்கப்போன இடத்தில், முறையான கல்வி வாய்ப்பும் இல்லை. எனக்கோ, படித்துவிட வேண்டும் என்கிற வேட்கை அணையாத நெருப்பைப்போல மனசுக்குள் கனன்று கொண்டிருந்தது. அப்பா,  அம்மா இருவருமே படிக்காதவர்கள். படித்திருந்தால், சொந்த நாட்டில் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். படிப்பு இல்லாததால், உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக இருந்தது. என்னைப்போல படிப்பறிவில்லாமல், என் பிள்ளைகளும் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் கோடிக்கணக்கான ஏழைத் தகப்பன்களில் ஒருவராக என் அப்பாவும் இருந்தார்.

கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது!

நாங்கள் கூலிவேலை செய்த அதே எஸ்டேட்டில், படித்தவர்களுக்கு உயர்ந்த வேலையும், மரியாதையான வாழ்க்கையும் அமைந்திருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் குறைந்த கூலிக்கு, அதிக நேரம் வேலைபார்த்து கஷ்டப்பட்டனர். இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு, இளம் வயதிலேயே ‘படித்தால் மட்டுமே வாழ்வில் கரையேற முடியும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டும்’  என்ற உண்மை நன்றாகப் புரிந்தது.

என் படிப்பு ஆர்வத்தைப் பார்த்து, அங்கிருக்கும் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர் பெற்றோர். என் வயதுள்ள சிறுவர்கள் எஸ்டேட் வேலைக்குப் போகும்போது, நான் பள்ளிகூடம் போனேன். என் கண் முன்னால்,   குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குப்போன என் சக வயது குழந்தைகள்,  என்றும் மறையாத ஓவியமாக நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருப்பார்கள். பருவ வயதில் கவனம் சிதறாமல், படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்ததற்கு இந்தக் காட்சி முக்கியமான காரணம்.

படிப்பை தடுத்த இந்தியா-சீனா போர்!

அப்போது இந்தியா-சீனா போர் மூண்டது. மலேசியாவில் சீனர்கள் அதிகம் வசித்தனர். இந்தியர்களைவிட வசதியான வாழ்க்கையை சீனர்கள் அந்த நாட்டில் வாழ்ந்தனர். போர் நடைபெற்ற காலத்தில், இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கும். தங்களுடைய நாட்டின் சார்பாக இருவரும் மலேசியாவில் அடித்துக் கொள்வர். 13 வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது நானும் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, சீன மாணவர்களுடன் சண்டைப் போட்டிருக்கேன். 

இந்தியர்-சீனர் சண்டை காரணமாக அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு, பள்ளிகள் சரிவர இயங்காமல் இருந்தன. இந்தியர்களைவிட அதிக எண்ணிக்கையில் இருந்த சீனர்களால், எங்களுக்கு அச்சுறுத்தலும் இருந்தது. படிப்பு தடைபட்டு, மெதுவாக நகர்ந்தது. ‘எப்படியாவது இந்தியாவுக்குத் திரும்பி, தமிழ்நாட்டில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பி வருவதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது.

குடும்பமே சேர்ந்து உழைக்கத் தொடங்கினோம். தேவைகளைக் குறைத்து,  சேமிப்பை அதிகப்படுத்தினோம். அதனால்,  நான் படிப்பை நிறுத்திவிட்டு, பாமாயில் தோட்டத்தில் கூலி வேலைக்குப் போனேன். சட்டப்பூர்வமாக வேலை செய்கிற வயதை அடையவில்லை என்பதால், குறைந்த கூலிக்கு வேலை வாங்கினர்.  மற்றவர்களுக்கு இருக்கும் பணி பாதுகாப்பும் கிடையாது.

கள்ளுக்கடையில் பகுதி நேர வேலை!

எஸ்டேட் வேலைக்குச் சென்று, மீதமிருக்கும் நேரத்தில் ஒரு கள்ளுக் கடையில் பகுதி நேரமாகவும் வேலை செய்தேன். எப்படியாவது தமிழகம் வந்து, பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பதே என்னுடைய ஒரே லட்சியம். அதற்காக கடுமையாக உழைத்து,  பணத்தைச் சேமித்தேன். படிக்க வசதி இல்லாமல் மற்ற சிறுவர்கள் வேலைக்குப் போகும் சூழலில், நான் படித்துவிட வேண்டும் என்பதற்காக கூடுதலாக வேலை செய்தேன்.  கையில் பணத்தைப் பார்த்துவிட்டால், படிப்பில் கவனம் குறைந்துவிடும் என்பார்கள். எனக்கு நாளுக்குநாள் படிப்பில் ஆர்வம் அதிகமானது. தேவையான பணத்தை சேமித்த பிறகு, தாயகம் வந்து சேர்ந்தோம்.

பதிமூன்று வயதில் உழைக்கத் தொடங்கி, தமிழகத்துக்கு நாங்கள் வந்து சேருவதற்குள் எனக்கு 17 வயதாகி விட்டது. மலேசியாவில் 8-ம் வகுப்புவரை படித்ததற்கான எந்த சான்றிதழ்களும் என்னிடம் இல்லை. தமிழகத்தில் 17 வயதில் மாணவர்கள் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் சேர்ந்துவிடுவார்கள். இந்த நடைமுறைச்  சிக்கலில், என்னை பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அரசுப் பள்ளியில் என்னை எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்வது என்பதிலும் பெரிய குழப்பம் இருந்தது.

இங்கு வந்த பிறகும் எங்கள் பஞ்சமும்  தீரவில்லை. வாழ்வும் மாறவில்லை.  எவ்வளவோ முயற்சி செய்தும், விதிகளைக் காரணம்காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டார்கள். படிக்க வேண்டும் என்ற கனவுடன், பள்ளிக்கூடத்துக்கு நடையாய் நடக்கிற என்னைப் பார்த்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு இரக்கம் பிறந்தது. ஊசலாடிக் கொண்டிருந்த என் கனவுக்கு உயிர் கிடைத்தது.

கனவுக்கு உயிர்கொடுத்த தலைமை ஆசிரியர்!

அந்தப் பள்ளியில் படித்த பழனிவேலு என்ற வேறொரு மாணவன், திடீரென்று பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டான். இனி அவன் வரப்போவதில்லை என்பதும் உறுதியானது. அவனது பெயரைப் பதிவு நீக்கம் செய்யும்போது, நான் போய் நின்றேன். என்னுடைய ஆர்வத்துக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த வையாபுரி, தன்னுடைய வேலைக்கே ஆபத்து வருகிற  ஒரு காரியத்தை எனக்காக செய்தார்.

பள்ளியில் இருந்து நின்ற பழனிவேலு என்ற மாணவனுக்குப் பதிலாக, நான் அவன் பெயரில் பள்ளிக்கு வந்து படிப்பதற்கு அனுமதித்தார். படிக்க நினைக்கிற ஒரு மாணவனை, வேண்டாம் என்று தடுக்க நல்ல ஆசிரியரால் எப்படி முடியும்? வாழ்வின் மறக்க முடியாத திருப்புமுனையை அவர்தான் என் வாழ்வில் ஏற்படுத்தினார். என்னைப் பள்ளியில் சேர்க்க அவர் மறுத்திருந்தால், கூலி விவசாயியாக வாழ்க்கை முடிந்திருக்கும். இத்தனைக்கும் ஒரு சிறு அன்பளிப்புகூட எங்களால் கொடுக்கமுடியவில்லை.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு சிறுவனுக்காக, தலைமை ஆசிரியர் தனது வேலைக்கே உலைவைக்கிற காரியத்தில் எப்படி ஈடுபட்டார் என்பதை, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பின்னாளில், உலகப் புகழ்பெற்ற எடின்பரோ பலகலைக்கழகத்தில் எனக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தபோது, வையாபுரி அவர்களைத் தேடிச்சென்று நன்றி சொன்னேன்.

மீண்டும் சோதனை!

எட்டாம் வகுப்பு முடிந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்க வசந்தபுரம் ஸ்ரீராமமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ஒரு வருடம் பள்ளிக்கூடம் சென்று, வேறொருவர் பெயரில் படித்து பாஸ் செய்த எனக்கு, திடீர் சோதனை வந்தது. விஷயமறிந்த பிறகு, நான் பள்ளிக்கு வந்து படிப்பது விதிமுறைகள்படி தவறு என்றுகூறி தகுதி நீக்கம் செய்தது பள்ளிக் கல்வித் துறை. கைக்கெட்டியதை யாரோ தட்டிப் பறித்ததுபோல எனக்குள் ஏமாற்றம் சூழ்ந்தது.

என் வயது மாணவர்கள் எல்லாம் கல்லூரி  போகும்போது, என்னை பள்ளியில்கூட சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்களே என ஏங்கியிருக்கிறேன். என் சக வகுப்புத் தோழர் களைவிட,  நான் 3, 4 வயது மூத்தவன் என்ற உணர்வு, ஏற்கெனவே மனரீதியில் என்னைப் பாதித்திருந்தது. இதில், போதிய சான்றிதழ்கள் இல்லை என்று தகுதி நீக்கம் செய்தவுடன், நொறுங்கிப் போனேன். மீண்டும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

நடையாய் நடந்த அப்பா...

மலேசியாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்  என்று எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல, கோவையில் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு நடையாய் நடந்தார் என் அப்பா. செருப்பு அணியாத ஒரு தகப்பனின் கால்கள், பிள்ளையின் எதிர் காலத்துக்காக எந்த வாசலையும் ஏறி இறங்கத் தயாராக இருந்தது. எத்தனை அவமானங்கள் வந்தாலும் சகித்துக்கொண்டார். என்னை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்தார்.

புதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் சேதுராமனும் , நன்றாகப் படிக்கிற மாணவன் என்று பரிந்துரை அளித்து, என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். விடாமுயற்சியோடு இருக்கிற எங்கள் மீது இரக்கப்பட்டு, மீண்டும் அதே வகுப்பில் நான் படிப்பதற்கு கல்வி அதிகாரிகள் அனுமதி வழங்கினர். ஆனால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.

என்னோடு படித்தவர்கள் அடுத்த வகுப்புக்குப்போக, நான் அதே வகுப்பில் மீண்டும் ஒரு வருடத்தைக் கழிக்க வேண்டிய சூழல்.

கெட்டதிலும் நிச்சயமாக ஏதாவது நல்லது நடக்கும் என்பது என் வாழ்வில்  உண்மையானது. சக மாணவர்கள் புதிதாகப் படிக்கிற பாடத்தை,  நான் ஏற்கெனவே படித்திருந்தேன். அதனால், மற்றவர்களுக்கு ஆசிரியரைப்போல சொல்லிக் கொடுக்க முடிந்தது. அதுவரை மனதுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையாக மாறியது. மற்றவர்கள் அறியாததை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேர்பிடித்தது. மற்றவர்களுக்கு சொல்லித்தர, அவர்களைவிட நமக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதி, பாடப் புத்தகங்களைக் கடந்து படித்தேன். மற்றவர்களைவிட அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், மீண்டும் என்னை புதிதாகப் பிறக்கச் செய்தது.

மருத்துவம் படிக்க ஆர்வம்!

பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு உருவாக இரண்டு நிகழ்வுகள் தூண்டுதலாக இருந்தன. நிமோனியா காய்ச்சல் வந்து, முறையான வைத்தியம் இல்லாமல் என் உடன் பிறந்த தங்கை தனலட்சுமி இறந்து போனார். தினமும் எங்களுடன் விளையாடிக்  கொண்டிருந்தவள், திடீரென்று இல்லாமல் போனதை ஜீரணிக்க முடியவில்லை. மருத்துவராக இருந்திருந்தால் தங்கையைக்  காப்பாற்றி இருக்கலாமே என்று நினைத்திருக்கிறேன். இது முதல் விதை. அடுத்து, தனிப்பட்ட முறையில் எனக்கு நேர்ந்த அனுபவம்,  என்னை மருத்துவப் படிப்பின்மீது தணியாத ஆர்வம் கொள்ளச் செய்தது. பள்ளி விடுமுறை நாளில், வயல் வேலை செய்யும்போது என் கைவிரலில் காயம் ஏற்பட்டது.

என் தாத்தா, ‘ஒண்ணும் இல்லடா’ என்று சொல்லி, மண்ணை எடுத்து அடித்து, ஒரு பழைய துணியைக் கிழித்து காயத்துக்கு கட்டுப் போட்டுவிட்டார். எனக்கு வலி உயிர்போனது. நாளுக்கு நாள் வலி அதிகமாகி துடித்தேன். வலி தாங்க முடியாமல் நான் கதறியதைப் பார்த்து, என்னை டவுனுக்கு அழைத்துப்போய் மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் மூன்று நாள் மருந்து எழுதிக்கொடுத்து, ஒரு ஊசி போட்டார். அரை மணி நேரத்தில் வலியில் இருந்து நிவாரணம் கிடைத்தது. வலியால் துடித்த கஷ்டத்துக்கு, டாக்டர் சுலபமாக தீர்வு கொடுத்துட்டாரே என்று வியந்தேன். எனவே, எப்பாடுபட்டாவது மருத்துவராகிவிட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தேன்.

இடைவேளை...நாளை வரை...

- கொங்கு சாம்ராஜ்யங்கள் வேர் விட்ட கதை
தொடர்புக்கு samrajiyam.k@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x