Last Updated : 29 Jun, 2019 02:42 PM

 

Published : 29 Jun 2019 02:42 PM
Last Updated : 29 Jun 2019 02:42 PM

கொசு தொல்லை தாங்க முடியலை...- கொசுக்களை ஒழிக்கும் `நானோ பூச்சிக்கொல்லி’

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா... மருந்தடிச்சு கொல்லுங்கடா” என்று கொசுத் தொல்லையால் அவதிப்படும்போதெல்லாம், கவுண்டமணி பாணியில் `டயலாக்’ விட்டிருப்போம்.  உண்மையில் கொசுத் தொல்லை பெரிய தொல்லைதான். இந்த நிலையில்,  நண்டு, இறால் ஓடுகளைக் கொண்டு கொசுக்களை ஒழிக்கும் `நானோ பூச்சிக்கொல்லி’யை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை.

இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதும் கட்டாயமாகிவிட்டது. மக்கள்தொகை பெருக்கம், தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  நிலம், நீர், காற்று மாசுபாடு காரணமாக மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் அவதிக்குள்ளாகின்றன.

தற்போதைய சூழலில், பல்வேறு நோய்களால் மனிதர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக,  கொசுக்கள் பரப்பும் நோய்களால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். “கொசுக்கள் இனப்பெருக்கத்தை தடுப்பதும், நீர்நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியம்”  என்கிறார் பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவரும்,  பதிவாளருமான கே.முருகன். “சுகாதாரப் பாதிப்பில் கொசுக்கள் முக்கியப்  பங்களிக்கின்றன.  டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா, யானைக்கால் உள்ளிட்ட நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன. கொசுக்களில் ஆண், பெண் இனங்கள் உள்ளன. ஆண் கொசுக்கள் மரங்களில் உள்ள தேனையும்,  பழச்சாறுகளையும் உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.

கொசுக்களில் 3  முக்கியமான வகைகள் உள்ளன. மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’ கொசு குடிநீரில் இனப்பெருக்கம் செய்கிறது. அதிகாலையிலும், மாலை நேரத்திலும் மனிதர்களைக் கடித்து ‘பிளைஸ்மோடியம்’ என்ற நோய்க் கிருமியைப் பரப்பி, நோய் உண்டாக்குகிறது. மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்தசோகை ஏற்படுகிறது. இரண்டாவது ‘ஏடிஸ் இஜிப்டி’ கொசு. இது தேங்கியுள்ள தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு கடிப்பதால், வைரஸ் நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் பரவி,  டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

டெங்கு காய்ச்சல் ஒன்று முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதே வைரஸ் வயது முதிர்ந்தவர்களை தாக்கி, சிக்குன் குன்யா நோயை உண்டாக்குவதால்,  மனிதர்களின் மூட்டுப் பகுதி மற்றும் தசைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. 

மூன்றாவது ‘கியூளக்ஸ் குன்கிபேசியேட்டஸ்’ கொசு. இது சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து கடிக்கத்  தொடங்குகின்றன. அப்போது நுண்ணிய  நாடாப்புழுவை வெளியிடுகின்றன. அவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவி,  யானைக்கால் நோயை உருவாக்குகிறது.   பகலில் இந்த நாடாப்புழுக்கள் மனிதர்களின் முதுகெழும்பில் ஒழிந்துகொண்டு, இரவில் மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்கள் வீங்கி, மரக்கட்டைபோல காணப்படும்.

கொசு-தொல்லை100 

கொசுக்கள் மனிதர்கள் உபயோகிக்கும் தண்ணீரில் முட்டையிட்டு, பின்னர் அதிலிருந்து புழுக்களாக வெளியேறி, கூட்டுப்புழு பருவம் அடைகின்றன. முட்டைப்புழு பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவத்தில் கொசுக்கள் தண்ணீரில் வாழ்கின்றன. இதனால், அவற்றை அழிக்க நாம் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த இயலாது. இதனால் தண்ணீர் மாசுபடுவது  மட்டுமின்றி, தண்ணீரில் வாழும் மீன் உள்ளிட்ட பிற உயிரினங்களும் அழிந்துவிடும். கொசுக்களும் நாளடைவில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் தன்மை பெற்று,  அதிகமாக உற்பத்தி ஆகிவிடும்.

இந்நிலையில், கொசுக்களை அழிப்பதற்கு தாவர பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதே மிகச் சிறந்தது. தாவரப்பூச்சி கொல்லி என்றாலே,  நமக்கு நினைவுக்கு வருவது இந்திய பாரம்பரியம் கொண்ட வேப்பமரம்.  மருத்துவக் குணம் கொண்டுள்ள இது, இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் உதவுகிறது. வேப்பமரத்தின் இலை, காய்கள், பழங்கள், கொட்டை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் பூச்சிக்கொல்லியாக விளங்குகின்றன.

இதன் மூலம் தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெயிலும் கொசுவை ஒழிக்கும் தன்மை உள்ளது.  வேப்ப எண்ணெயை தண்ணீரில் தெளிக்கும்போது,  இதனுடைய மூலக்கூறுகள் கொசுக்களை ஊடுருவி, தாக்கி அழிக்கிறது. தும்பை, துளசி போன்ற மூலிகைச் செடிகளும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை.  நெல்லிச்சாறு, முருங்கைச்சாறு போன்றவற்றையும் தண்ணீரில் தெளிக்கும்போது, கொசுப்புழுக்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்கிருமிகளும் அழிந்து, தண்ணீரும்  தூய்மையாகிறது.

கொசுக்களை வேப்ப இலை, தும்பை துளசி, பேய் முரட்டி போன்ற இலைகளைக்  கொளுத்தி, புகை எழுப்பி,  விரட்டலாம். ஒரு சொட்டு வேப்ப எண்ணெய் மற்றும் பத்து சொட்டு தேங்காய் எண்ணெயை காலையில் உடம்பில் தேய்த்து, கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.  வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும், கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியை அழிக்கலாம்.

வேப்பங்கொட்டை சாறு!

ஒரு கிராம் வேப்பங்கொட்டை துகளை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், அதை ஒரு வெள்ளைத்  துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதை தண்ணீரில் தெளிப்பதன் மூலம் கொசுப்புழுக்களை அழிக்கலாம். பாக்டீரியா பூச்சிக்கொல்லிகளான ‘பேசிலஸ் துரிஞ்சியேன்சிஸ் ஸ்ரெலன்சிஸ்’, ‘பேசிலஸ் பெரிக்கஸ்’ போன்ற பாக்டீரியாக்களை தண்ணீரில் தெளிக்கும்போது, அவை கொசுப்புழுக்களின் வாய்வழியாகச் சென்று,  வயிற்றை வெடிக்கச் செய்து அழிக்கிறது.

வைரஸ் பூச்சிக்கொல்லியை தண்ணீரில் தெளிப்பதால், அவை கொசுக்களின் உடலில் ஊடுருவி, கொசுக்களை அழிக்கிறது. நானோ பூச்சிக்கொல்லிகளை தண்ணீரில் தெளிக்கும்போது,  புழுக்களின் செல்களை தாக்கி அழிக்கிறது.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சாண பூச்சிக்கொல்லிகள் கொசுக்களின் குடல் பாகத்தைச் சென்றடைந்து, அவற்றைத்  தாக்கி அளிக்கிறது.  பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை, கொசுக்களை ஒழிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதன்படி ‘Acoustic Larvicide’  என்ற கருவியின் மூலமாக ஒலிஎழுப்பி,  தண்ணீரில் வாழும் கொசுப்புழுக்களை அழிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளோம். நாம் சாப்பிட்டு விட்டு, தூக்கி எறியும் நண்டு, இறால்கள் ஓடுகளின் மூலமாக நானோ பூச்சிக்கொல்லிகளை உருவாக்கி,  கொசுப்புழுக்களை அழிக்கும் ஆராய்ச்சியும்  நடைபெற்று வருகிறது”என்றார் கே.முருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x