Published : 27 Aug 2017 03:11 PM
Last Updated : 27 Aug 2017 03:11 PM

யானைகளின் வருகை 21: அறிதலும், புரிதலும் கூடவே ஊழலும்

 

நிருபர் ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அதிகாரி கோபித்துக் கொண்டு போகலாம். அல்லது அவரே திரும்பி முறைத்து கேள்வி கேட்டவரை திட்டலாம். வேறு வகையில் கூட தனது கோபதாபத்தை அவர் வெளிக்காட்டலாம். இது யதார்த்தம். ஆனால் இங்கே அதிகாரி சென்றுவிட்டார். அவருக்கு வக்காலத்து வாங்கி ஒரு தன்னார்வலர் என்னிடம் கோபம் காட்டுகிறார்.

'உங்களுக்கு வனஉயிரினங்களை பற்றி என்ன தெரியும். யாரோ சொன்னால் என்ன வேண்ணா எழுதீடுவீங்களா? அவர் எப்படிப்பட்ட ஆபீஸர்? எத்தனை அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு தெரியாதா யானைகளைப் பற்றி? சுற்றுச்சூழல் பற்றி?

இப்படித்தான் கோயில் முகாம் ஆரம்பிக்கறதுக்கு முந்தியே இங்கிருக்கிற வனத்துறை யானை முகாமில் உள்ள யானைகளுக்கு நோய்த் தொற்று இருக்குன்னு எழுதியிருக்கீங்க. கோயில் யானைகள் வந்தா பைத்தியம் புடிச்சுடும்னு சொல்லியிருக்கீங்க. இங்கே யானைக்கு சப்ளை செய்யப்படற ராகி மாவு, வெல்லம், அரிசி எல்லாம் கலப்படம்னு மனம் போன போக்குல எழுதியிருக்கீங்க.

நான் இந்த சரணலாயத்துல 30 வருஷ அனுபவம் உள்ளவன். இருபதுக்கும் மேற்பட்ட வார்டன்களைப் பார்த்தவன். ஆப்பிரிக்கா யானை என்னென்ன காலத்துல என்ன செய்யும்? ஆசிய யானைகள் என்ன பண்ணும்? இந்திய யானைகள் எந்த திக்குல போய் எந்த பாதையில் வரும்? அதில் முதுமலை யானைகள் எத்தனை, பந்திப்பூர், முத்தங்கா யானைகள் எத்தனைன்னு இப்ப கேட்டாலும் வரிசையா விரல் விட்டு சொல்லுவேணாக்கும்!' என்று தொடங்கி என்னவெல்லாமோ பேசினார். அவருக்கு ஐம்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும்.

அவர் எதற்காக அப்படிக் குதிக்கிறார். முகம் திருப்பிக் கொண்டு போன அதிகாரிக்கு வேண்டியவரா? அவருக்காக வக்காலத்து வாங்கி அவரின் குரலாக ஒலிக்கிறாரா? என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, இப்போதும் கூட எனக்கு முதுமலையில் பெரிதாக யாரையும் தெரியாது. குறிப்பாக வனத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளையோ, அலுவலர்களையோ, ஊழியர்களுடன் கூட பெரிய அளவில் நெருக்கம் பாராட்டியதில்லை.

22 பேரைக் கொன்ற மக்னா பிடிபட்டு கராலில் அடைக்கப்பட்ட போது அங்கு சென்றுள்ளேன். அதன் பிறகு மசினக்குடி, சீகூர், சிங்காரா வனப் பகுதிகளை முதுமலை சரணாலயத்துடன் விஸ்தரிக்கவும், அங்கிருந்த மக்களை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க அது விஷயமாக செய்தி சேகரிக்க கள ஆய்வு செய்துள்ளேன். காடுகள் அழிப்பு, கூடலூர், சீகூர், தெங்குமரஹாடா சாலை அமைப்பு சம்பந்தமான செய்திகளை மசினக்குடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், கூடலூர், ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று மக்களை சந்தித்துள்ளேன்.

செக்சன் -17 பிரிவு நிலங்கள், அதில் நீளும் குளறுபடிகள் பற்றியும் விரிவான விவரங்களை (இவற்றை பற்றியெல்லாம் தேவைப்படும் இடங்களில் வரும் அத்தியாயங்களில் விரிவாக எழுதுகிறேன்) கூடலூரை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் செல்வராஜூடன் இணைந்து சேகரித்துள்ளேன். அந்த சமயத்தில் மாவனல்லா வாழைத்தோட்டத்தில் அறிமுகமானவர்தான் இபான் அமைப்பின் நைஜில் ஓட்டர். அவர் மூலமாக சில பாகன்கள், சில கால்நடை மருத்துவர்கள், குறிப்பாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவம் பெற்ற சில கால்நடை மருத்துவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் அங்கு என்ன செய்தி எடுக்க வந்தேனோ, எந்த செய்திகளை எடுத்துள்ளேனோ அதற்கு உரிய விளக்கம் பெற்றதோடு, உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் பாராட்டியதில்லை. பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் சொல்வதை கவனமாகக் கேட்டு, அதில் சந்தேகங்கள் இருந்தால் ஒருவர் சொல்வதை மற்றவர் சொல்வதுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியானதை முடிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும்போது, அந்த விஷயங்களிலேயே உண்மைத் தன்மை தூக்கலாக ஒலித்தால் அதற்கேற்ப செய்திகளின் வடிவத்தை உள்ளடக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். அப்படி சில வனத்துறை அதிகாரிகள் மட்டுமே என்னை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களில் மக்னாவை உயிரோடு பிடித்த உதயணன், செக்சன் 17 பிரிவு நிலங்களில் அக்கறை காட்டிய கூடலூர் வனத்துறை அலுவலர் ஸ்ரீவத்ஸவா.

இப்படி செய்தி சேகரித்த அனுபவத்தினாலேயே காட்டு யானைகளின் மீதும், காடுகளின் பாலும், அதில் வாழும் வனஉயிரினங்கள் மீதும், அவற்றைச் சார்ந்து வாழும் மக்களின் மீதும் இயல்பாகவே ஒரு அக்கறை எனக்குள் வளர்ந்துவிட்டிருந்தது. அதையொட்டி பல்வேறு நூல்களை தேடித்தேடி படித்ததில் நான் பெற்ற அனுபவ அறிவுடன் கானுயிர்களுடனான பலரது வாழ்வியல் கண்ணோட்டங்களையும் ஒப்பிட்டு ஒரு தெளிவு பெறவும் முடிந்தது.

அப்படித்தான் முதுமலையில் கோயில் யானைகள் முகாம் அமைத்தால் பின்னாளில் அங்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும்; காட்டு யானைகள் மட்டுமல்ல மற்ற வனவிலங்குகளும் தொந்தரவுக்குள்ளாகும் என்பதையும் எழுதினேன். அதை கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆரம்பித்து, யானை ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள், யானைப் பாகன்கள் என பலரிடம் விஷயானுபவங்களை பெற்றே அந்த கட்டுரையைத் தயாரித்திருந்தேன்.

அதில் ஊடாக வந்ததுதான் முதுமலையில் யானைகளுக்கு கொடுக்கும் ரேஷனில் நடக்கும் ஊழல்களின் சுருக்கம். இப்படியான செய்தி அந்த சமயத்தில் வேறு எந்த தமிழ் பத்திரிகையிலும் வரவில்லை. அதுதான் அந்த மனிதரை - தன்னார்வலரை அங்கே அந்த செய்தியை எழுதியவன் என்ற முறையில் என்னிடம் வெகுண்டெழ வைத்துவிட்டது. அதை அவர் பேசும்போதே உணர முடிந்தது.

அவரிடம் நான் சேகரித்த செய்தி விஷயங்களை, அதில் நான் கவனித்த உண்மைத் தன்மைகளை விரிவாக பொறுமையாக எடுத்துச் சொன்னதோடு, 'நான் சேகரித்த அத்தனை விஷயங்களையும் நான் எழுதவில்லை. அதில் எனக்கு சரியாக பட்டதை வெறும் 20 சதவீதம் மட்டுமே எழுதியிருக்கிறேன்!' என்றும் குறிப்பிட்டேன். அதைக்கேட்டு அவர் முகம் கொஞ்சம் இருண்டு போனது. சற்றே சாந்தமானவர் மிகவும் பொறுப்பாக பேசினார்.

அப்படி பேசும்போது கூடலூர், ஊட்டி, குன்னூர் மற்றும் கோவை பகுதிகளின் செய்தியாளர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்களையெல்லாம் தனக்குத் தெரியும் என்றும், தன்னை விளக்கம் கேட்காமல் செய்திகளை வெளியிட மாட்டார்கள் என்றும் தன்னைப் பற்றி பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டார். கூடவே, 'நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள். செய்தியாளர்கள் முகாம் தொடங்கி முடியும் வரை தங்குவதற்கு காட்டேஜ்களையும், உணவு ஏற்பாடுகளையும், வாகன வசதிகளையும் நானே ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்களும் அங்கேயே தங்கலாம்!' என்றும் விரும்பி அழைத்தார்.

அவரிடன் அழைப்புக்கு நன்றி சொல்லிவிட்டு, 'தேவைப்பட்டால் உங்களுக்கு போன் செய்கிறேன்; வந்து பார்க்கிறேன்!' என்று விடைபெற்றேன். பிறகு அவரைப்பற்றி வெளியில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். அப்போதுதான், 'அவர் முதுமலையில் முக்கிய ஒப்பந்ததாரர், அவர் இந்த கோயில் யானைகள் முகாமிற்கு முக்கிய பொருட்கள் விநியோகிக்க விண்ணப்பித்திருந்தார். நான் எழுதி அச்சில் வந்த செய்தியின் எதிரொலியால் அவருக்கான ஒப்பந்தம் கிடைக்கவில்லை!' என்பதெல்லாம் தெரிய வந்தது.

இந்த விவகாரம் புதிய விஷயம் அல்ல. பொதுவாகவே பல என்ஜிஓக்கள் அப்போது வனத்துறையினரின் கைப்பாவையாகவும், கவசமாகவும் இருந்தனர். அவர்கள் வனத்துறையினர் செய்யும் தவறுகளை மறைக்க, அவர்களின் குரலாய் மீடியாக்களுக்கு விஷயங்கள் கொடுத்தும் வந்தனர். அதன்மூலம் சில ஆதாயங்களை வனத்துறையினரிடம் அவர்கள் பெற்றுக் கொள்வது சகஜமாகவே இருந்து வந்தது. அந்த காலகட்டத்தில் அப்படிப்பட்டவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை கூடிவிட்டது.

இதை விட வேடிக்கை. இவர்கள் மட்டுமே வனத்துறையினரிடம் நெருக்கமாக இருப்பதும், அங்கே காட்டில் புலி, சிறுத்தை, யானைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் அகப்படும்போது அதை கிட்ட இருந்து வீடியோ, புகைப்படம் எடுத்து உலகெங்கும் அனுப்புவதும், அதில் தங்களுக்கென்று பிரபல்யங்களை தேடிக் கொள்வதும் அப்போதே நடந்து கொண்டுதான் இருந்தது. இவர்களால் காட்டுயிர்கள் காப்பாற்றப்படுகிறதோ இல்லையோ, அதற்கு காப்பாற்றப்படுவது போல் அழிக்கப்படுவது என்பது சதா நடந்து வருவதையும் மறுக்க முடியாது.

அதை உறுதிப்படுத்துவது போல் அந்த ஆண்டு முதுமலையில் நடந்த யானைகள் முகாமை நடத்தியதில் சில ஊழல் அதிகாரிகளே பொறுப்பு வகித்தார்கள். அதில் முக்கியமான ஒன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு அருகிலேயே 100 வருஷத்துக்கு முந்தைய பழமையான மரங்களை சிலர் திருடியுள்ளனர். அது அப்போதே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. அது பற்றி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கு விஜிலென்ஸ் போலீஸ் பதில் மனுவும் கொடுத்தது.

அதில் 'மரங்கள் வெட்டப்பட்டது உண்மைதான். இருபத்தொன்பது வகையான விலை மதிப்பற்ற மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதில் மூன்று பேர் (முக்கிய வன அதிகாரிகள் மூன்று பேர் பெயர் குறிப்பிட்டு) கூட்டாக சேர்ந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு மரக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள்!' என்று வெளிப்படையாக அந்த மனுவிலும் கூறப்பட்டிருந்தது.

அதை உயர் நீதிமன்றமும் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது. அப்படி ஊழலில் சம்பந்தப்பட்ட வனத்துறை உயர்அதிகாரிதான் அப்போது நடந்த யானைகள் ஓய்வு விழாவில் முக்கியப் பங்காற்றினார். இந்த தகவலை சுட்டிக்காட்டி, 'இந்த முகாமின் மூலம் யானைகளுக்கு உல்லாசம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த அதிகாரிகளுக்கும், சில ஊழியர்களுக்கும் வேறு வித உல்லாசம் கிடைத்துவிடும் என்பது மட்டும் உறுதி!' என்றும் செய்தியில் பதிவிட்டிருந்தேன்.

ஆனால் அந்த செய்திகள் எல்லாம் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களுக்கு கிணற்றிலே போட்ட கல்தான். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பப்பட்ட பெட்டிஷன், உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, இயற்கை ஆர்வலர்கள் காட்டிய எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி அந்த ஆண்டு கோயில் யானைகள் முகாம் நடந்து முடிந்தது. முடிந்த வேகத்திலேயே இதையொட்டி பிரச்சினைகளும் புறப்பட்டன.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x