Last Updated : 10 Aug, 2017 03:57 PM

 

Published : 10 Aug 2017 03:57 PM
Last Updated : 10 Aug 2017 03:57 PM

ஜப்பான் புகுஷிமா அணு மின்நிலைய வளாகத்தில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு

2011-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு ஏற்பட்ட புகுஷிமா அணு மின் நிலைய வளாகத்தில் 2-ம் உலகப்போர் கால வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

85 செமீ (2.9 அடி) நீளம் கொண்ட இந்த வெடிகுண்டு அமெரிக்காவினால் வீசப்பட்டு வெடிக்காமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அணு மின் நிலைய வளாகத்தில் உலைகளுக்கு அருகே வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்தனர்.

டோக்கியோ மின்சார நிறுவனம் உடனடியாக போலீசை வளாகத்துக்கு வரவழைத்து விவரங்களை தெரிவித்தது, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, ஒரு கிமீ சுற்று வட்டாரப்பகுதி கயிறு கட்டி தடுக்கப்பட்டுள்ளது.

1945-ல் இரண்டாம் உலகப்போர் முடிந்ததிலிருந்து ஜப்பானில் அவ்வப்போது அமெரிக்காவின் வெடிகுண்டுகள், ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக போர் முடியும் தறுவாயில் ரத்தக்களறி போர் நடைபெற்ற தெற்குத் தீவான ஓகினாவாவில் சிலபல வெடிக்காத அமெரிக்கக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போரின் போது வடமேற்கு ஜப்பானில் இப்போதிருக்கும் புகுஷிமா அணு மின்நிலையத்துக்கு அருகில் தான் ஜப்பான் ராணுவ விமான நிலையம் இருந்தது. எனவே அமெரிக்கா இதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

1986-ல் செர்னோபில் அணு உலைக் கதிர்வீச்சுக்குப் பிறகு உலகின் 2-வது மிகப்பெரிய அணு உலைத் துயரமாகக் கருதப்படுகிறது புகுஷிமா கதிர்வீச்சு சம்பவம்.

கதிர்வீச்சு இன்னமும் கூட இருந்து வருவதால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x