Published : 02 Aug 2017 09:34 AM
Last Updated : 02 Aug 2017 09:34 AM

இப்படிக்கு இவர்கள்: தேவை கைத்தொழில் கல்வி

தேவை கைத்தொழில் கல்வி

கா

ந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை நினைவுகூரிய ஆயிஷா நடராசனுக்கு (ஜூலை - 27) நன்றி. மெக்காலே கல்வி ஆங்கிலேய ஆட்சிக்குத் தேவைப்பட்டவர்களை உருவாக்கவே திட்டமிடப்பட்டது. அதற்கு மாறாக, நம் நாட்டுத் தேவைகளை முன்னிறுத்தியது ஆதாரக் கல்வித் திட்டம். உடல் உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. உழைப்பே தெய்வம் என்ற கோட்பாடே சுரண்டலும் ஆக்கிரமிப்பும் இல்லாத சமூகத்தை உருவாக்கும் என்ற புரிதலில் அமைந்ததே ஆதாரக் கல்வித் திட்டம். தனது குருநாதர் கோகலேயின் லட்சியக் கனவான அனைவருக்கும் கல்வி என்பதை நிறைவேற்ற ஆதாரக் கல்வித் திட்டம் உதவும் என்று காந்திஜி நம்பினார். நூற்றல் என்ற அடிப்படைத் தொழில் மூலமாக அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதியை ஆசிரியர்களால் நிறைவேற்ற முடியவில்லை. நூற்றலுக்கு மாற்றாக வேளாண்மையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற கருத்தையும் ஆதாரக் கல்வித் திட்டத்தினர் ஏற்காது பிடித்த முரட்டுப் பிடிவாதம், பள்ளிகளின் சுயநிதித் திட்டத்தைச் செயல்படுத்த இயலாமை போன்றவை ஆதாரக் கல்வித் திட்டத்தைச் சாகடித்தது. இச்சூழலில், பள்ளிகளில் இயங்கிவந்த கைத்தொழில் பாடத்தை மீட்டெடுக்க புதிய பாடநூல் குழுவினர் முயல்வார்கள் என்று நம்புகின்றேன்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

பிரதமரும் நேர்மாறான தகவலும்

ஜி

எஸ்டி வரிவிதிப்புக்குப் பின், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகப் பெருமைப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டுமக்கள் மட்டுமல்ல, பாஜக தொண்டர்களே இதை நம்புவார்களா என்று தெரியவில்லை. எந்தக் கடைக்குச் சென்று, எந்தப் பொருளை வாங்கினாலும் விலை உயர்வு பளிச்சென்று தெரிகிறது. உணவகங்கள் தொடங்கி, குழந்தைகள் பள்ளி இடைவேளையில் வாங்கி உண்ணும் தின்பண்டங்களின் விலைகூட உயர்ந்துள்ளது. இத்தனையும் போதாது என்று சமையல் எரிவாயு மானியம் ரத்துசெய்யப்படும் என்றும் ரேஷன் பொருட்கள் பலருக்குக் கிடைக்காது என்றும் செய்திகள் வருகின்றன. நேரடியாக மக்களைப் பாதிக்கிற வரிகளையும், திட்டங்களையும் போட்டுவிட்டு, அதற்கு நேர்மாறான தகவலைப் பிரதமர் பேசலாமா?

- முஹம்மது அன்சாரி மன்பயீ, லால்பேட்டை.

பாரம்பரியத்துக்கு வரியா?

ருத்துவர் கு.சிவராமனின் ‘ஜி.எஸ்.டி.: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா?’கட்டுரை(ஜூலை-28) அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு முக்கியக் காரணம், பக்க விளைவுகள் குறைவாக இருப்பதும், மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருப்பதும்தான். இம்மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது ஏழை மக்களைப் பாதிப்பதோடு, நம் பாரம்பரிய மருத்துவத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

உணவும் நிதியும்

ஜூ

லை - 28ம் தேதி நாளிதழில் ‘ஆந்திரத்தில் அண்ணா கேன்டீன் தொடக்கம்’ என்ற செய்தி படித்தேன். தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ தமிழகத்தில் பலரின் பசியைப் போக்கிவருவதைப் போன்று, ஆந்திரத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ‘அண்ணா கேன்டீன்’ துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்தைப் போன்று நிதிநிலையில் மோசமாக உள்ள உள்ளாட்சி நிறுவனங்களின் நிதிநிலையை மேலும் மோசமாக்குமாறு உள்ளாட்சிகளின் கைகளில் இந்த உணவக நிர்வாகத்தைக் கொடுக்காமல், இதற்கெனத் தனியாக ஆந்திர அரசு நிதி ஒதுக்கீடு செய்து பராமரித்தால் ‘அண்ணா கேன்டீன்’ சிறப்பாக இயங்கும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

முயன்று பார்க்கலாமே?

ன்றைய தேதியில் தமிழகத்தில், தண்ணீர் பிரச்சினையே தலையாய பிரச்சினையாக இருக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து இயற்கையாகத் தண்ணீர் வருவதற்கான தடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மழையும் பொய்த்துவிட்டது. இருக்கிற ஒரே வாய்ப்பான ஆழ்துளைக் கிணற்றிலும் தண்ணீர் வற்றிவருகிறது. இச்சூழலில், போர்வெல் ரீசார்ஜ் செய்யும் திட்டம் மூலம் நீர்மட்டம் மேம்படும் என்று தெரிவித்து அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் சரவணன் சந்திரன் (ஜூலை - 31). அரசு முயன்று பார்க்கலாமே?

-பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x