Published : 01 Aug 2017 09:25 AM
Last Updated : 01 Aug 2017 09:25 AM

இப்படிக்கு இவர்கள்: குடியரசு.. ஜனநாயகம்?

குடியரசு.. ஜனநாயகம்?

ரு மனிதன் குடியரசுத் தலைவர் ஆகும் காலம் என்ற கட்டுரையில் (ஜூலை - 28) குடியரசு, ஜனநாயகம் ஆகிய அரசியல் பதங்களுக்கான விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் சிறப்பு. கிரேக்க நகர அரசுகள்தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால். ஏதென்ஸ் நகரத்தில்தான் ஜனநாயகத்தைக் குறிக்கும் டெமாக்ரஸி என்ற சொல் பிறந்தது. குடியரசைக் குறிக்கும் ரிபப்ளிக் என்ற சொல் பிளாட்டோவால் கொண்டாடப்பட்டது. இடைப்பட்ட காலங்களில் இந்த சொற்கள் ஐரோப்பா முழுவதும் பரவியது. எனினும் இரண்டு கோட்பாடுகளில் ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொண்ட நாடுகளும் உண்டு. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த ஜனநாயகம் என்ற சொல்லுக்கான இயல்பு இல்லை. குடியரசு என்ற நிலையில்தான் அங்கு ஆட்சி அமைப்புகள் நடக்கின்றன. பிரிட்டனின் அரசியலமைப்பு எழுதப்படாமல் மரபுகளைப் பின்பற்றியே நடக்கிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக்கொண்டு பிரிட்டன் இயங்கினாலும் குடியரசு என்ற நிலைப்பாடு கிடையாது. இந்தியா பிரிட்டனைப் பின்பற்றும் நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருந்தாலும், உண்மையில் இந்தியா குடியரசுத் தத்துவத்தை எழுத்தில்தான் வைத்துள்ளதே ஒழிய நடைமுறையில் தவிர்த்துவிட்டது. இரண்டுங்கெட்டான் நிலையில்தான் நம்முடைய அமைப்பு முறைகள் இருக்கின்றன. குடியரசா.. ஜனநாயக நாடா? அடுத்து கூட்டாட்சியா.. ஒற்றையாட்சியா? அல்லது இரண்டும் கலந்த கலவை முறையா? நமது அரசியலமைப்புச் சட்டம் நெகிழும் தன்மையானதா.. அல்லது திடமானதா? என்றும் சொல்ல முடியவில்லை. இப்படி விடைகாண முடியாத வினாக்கள் நமது அரசியலமைப்பில் உள்ளன.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், திமுக.

மெக்காலே கல்வி: மாற்றுப் பார்வை!

யிஷா நடராசன் எழுதிய, ‘காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்’ (ஜூலை - 27) கட்டுரை வாசித்தேன். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட 1835 காலகட்டத்தில் இந்தியக் கல்வி முறையானது மத போதனைக் கல்வி முறையாகத்தான் இருந்தது. தாய்மொழிக் கல்வி என்று கூறிக்கொண்டாலும், சம்ஸ்கிருதம் மற்றும் அரபு மொழி வழியில் தத்தம் மத போதனைகளையே கல்வியாகத் தந்தார்கள். இந்நிலையை மாற்றவே மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தனர். இக்கல்வி, பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனைவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது. ராஜாராம் மோகன் ராய் போன்ற தலைவர்களும் இக்கல்வி முறையை ஆதரித்ததன் வழியாக அறிவுசார் சமுதாயம் உருவாக அடிப்படையாக இருந்தது மெக்காலே கல்வித் திட்டம். குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறை என்ற விமர்சனம் இருந்தாலும், அக்காலத்தின் தேவை மேற்கத்தியக் கல்வி முறையாக இருந்தது. இருப்பினும், கல்வி என்பது காந்தியடிகள் கூறுவதுபோல், மக்களின் பண்பாட்டோடும், வாழ்க்கையோடும், நமது நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சியைக் காக்கும் வண்ணம் கல்வி இருக்க வேண்டும் என்பதைக் கட்டுரையாளரின் வழி நின்று ஆதரிக்கிறேன்.

- நிலவளம் கு.கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.

வாசிப்பைப் பகிர்வோம்

வா

சிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியாக அமைந்த ‘புத்தக வாசிப்பு நலமா?’ தலையங்கம் (ஜூலை - 29) அருமை. இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பாளரைக் கண்டறிதலே சவாலாக உள்ளது. படித்த புத்தகங்களில் பிடித்த வரிகளை முகநூலில் பதிவிட்டால்கூட பெரும்பான்மையோர் ரசிப்பதில்லை. வாசிப்பாளர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து, ரசித்த வரிகளைப் பகிர்ந்துகொண்டு வருகிறோம். இந்த எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும் மனநிறைவைத் தருகிறது. இவர்களின் மூலம் மற்றவர்களை வாசிப்புக்கு ஈர்க்கலாம். புதிதாய் படித்த புத்தகங்கள் மற்றும் வாசிப்பில் உள்ள புத்தகங்களை இணையத்தில் பகிரலாம். பிறரின் பார்வையில் வாசிப்பனுபவத்தைப் படிக்கும்போது, நாம் கவனியாதுவிட்ட பயனுள்ள கருத்துகளை அறிய வாய்ப்பாக இருக்கும். படித்த பயனுள்ள வரிகளைச் சிறு புத்தகமாக்கி விசேஷ வீடுகளில் வருவோர்க்கு வழங்கினால் வாசிப்பின் வீச்சினை அதிகரிக்கலாம். ‘‘நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும்’’ என்ற பாவேந்தரின் வரிகளை உண்மையாக்குவோம்.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x