Published : 10 Nov 2014 03:28 PM
Last Updated : 10 Nov 2014 03:28 PM

அறிவார்ந்த கருத்துகளுடன் வெளிவரும் தி இந்து: எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெருமிதம்

'தி இந்து' தமிழ் நாளிதழ் ஆழமான சிந்தனை, அறிவார்ந்த கருத்துகளுடன் வருகிறது என எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெருமிதமாகத் தெரிவித்தார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரையில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு விகாசா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

தமிழகத்தில் வேறு எந்த நாளிதழும் பயணம் செய்யாத பாதையில், 'தி இந்து' தமிழ் நாளிதழ் பயணம் செய்கிறது. இதுதான் எங்கள் பாதை என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அந்தப் பாதையில் பயணம் செய்கின்றனர். ஆழமான சிந்தனை, அறிவார்ந்த கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுதான் நேர்மையின் அடையாளம். தனக்கென்று ஒரு பாதையை வகுத்து செயல்படுகிறார்கள்.

மதுரைக்கும், 'தி இந்து'வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜார்ஜ் ஜோசப், மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் நெருக்கமானவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் பெருங்காமநல்லூரில் 1920-ம் ஆண்டு குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 16 பேர் பிரிட்டிஷ் அரசால் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தை பத்திரிகையாளர் ஜார்ஜ் ஜோசப் 'தி இந்து'ஆங்கில நாளிதழில் எழுதினார். அவரது கட்டுரை மூலமே இந்த சம்பவம் உலகளவில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்த அரசானது இந்த வழக்கில் கட்டுரை வெளியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழையும் சேர்த்தது. இந்து நாளிதழ் மீது முதல் வழக்கு தொடர்வதற்கு காரணமாக அமைந்தது இந்த சம்பவம்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக துணிவுடன் போராடிய பெருமை இந்து நாளிதழுக்கு உண்டு. ஒரு சம்பவத்தை பின்தொடர்ந்து, பழைய சம்பவங்களை நினைவூட்டி செய்திகள் வெளியிடுவது அருமையான பதிவு.

நடுப்பக்கத்தில் இலக்கியவாதி, சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் என அனைத்து துறைகளை சார்ந்தவர்களின் பரிணாமமும் உள்ளது. கல்வி, மருத்துவம், மாற்று மருத்துவம் என அக்கறையான குரல்களும், ஆழமான பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

பொதுச் சமுதாயத்தின் நலனுக்காக உழைத்தவர்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் சமுதாயத்துக்கு நிறைய தொண்டுகள் செய்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு செய்வது தங்களது கடமை என நினைத்து 'தி இந்து' தமிழ் நாளிதழ் செயல்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய பதிவுகள் ஆழமாக பதிவு செய்யப்படுவது அருமையானது என்றார். நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். விற்பனை பிரிவு மேலாளர் பரதன் நன்றி கூறினார்.

லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், ஹோட்டல் தி மெட்ரோபோல், விகாசா பள்ளி ஆகியன விழாவை இணைந்து நடத்தின. வாசகர் விழாவில் 'தி இந்து' தமிழ் வெளியீடுகளான ஆடி மலர், நவராத்திரி மலர், தீபாவளி மலர் உள்ளிட்ட வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

'தி இந்து' ஆசிரியர் குழுவில் பல லட்சம் வாசகர்கள்

'தி இந்து' தமிழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

'தி இந்து' தமிழ் பத்திரிகையில் என்ன வர வேண்டும் என்பதை வாசகர்களே முடிவு செய்கிறீர்கள். ஒரு வழிப்பாதையாக அல்லாமல், இருவழிப்பாதையாக இருக்கிறது. வாசகர்கள் ஒரு செய்தியை படித்தவுடனேயே அதுபற்றிய கருத்தை தெரிவிப்பதற்காக `உங்கள் குரல்' வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம். அதில் தினந்தோறும் ஒவ்வொரு பதிப்புக்கும் 1000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டுள்ளன. சிறிய தவறைகூட உரிமையுடன் கண்டிக்கிறீர்கள். இதன் மூலம் 130 பேர் கொண்ட ஆசிரியர்கள் குழு, பல லட்சம் பேரைக் கொண்ட வாசகர்களின் மூளையுடன் போட்டி போட முடியாது என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே உங்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது இப்போது சரியான முடிவாக அமைந்துள்ளது.

செய்தி குறித்த சிந்தனையை நாள் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் எனவும் நினைத்தோம். அதன்படியே, செய்தியைப் பற்றி இரவு வரை நினைப்பதோடு மட்டுமல்லாமல் பல வீடுகளில் இதன் நடுப்பக்கங்களை வெட்டி பாதுகாத்து வைக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம். இலக்கியம், திரைப்படம், வரலாறு, ஆன்மிகம் என அனைத்து கட்டுரைகளையும் உங்களை ஈர்க்கும் வகையில் அளித்து வருகிறோம் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x