Published : 24 Aug 2017 10:14 AM
Last Updated : 24 Aug 2017 10:14 AM

அதிமுகவில் பதவிச் சண்டை நடந்துவரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்ய வேண்டும்?- எம்எல்ஏ.க்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கருத்து

பதவியைக் கைப்பற்றவும், காப்பாற்றவும் அதிமுகவில் நடந்துவரும் உட்கட்சி சண்டை தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ‘பரபரப்பான இந்தச் சூழ்நிலையை திமுக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?’ என்று பலதரப்பட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்பினோம்.

தங்கம் தென்னரசு ( திருச்சுழி எம்எல்ஏ):

தற்போதைய அரசியல் சூழலை திமுக செயல் தலைவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவர் இடக்கூடிய எந்தக் கட்டளையையும் செயல்படுத்த ராணுவக் கட்டுப்பாட்டுடன் தொண்டர்களும், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

கே.ஆர்.பெரியகருப்பன் (முன்னாள் அமைச்சர், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ):

திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எடுக்கும் முடிவின்படியே நாங்கள் செயல்படுவோம். இந்த விஷயத்தில் எங்களின் தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. மக்களின் நம்பிக்கையை இந்த ஆட்சி இழந்துவிட்டது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளதை நாங்கள் வலியுறுத்துவோம்.

இ.பெ.செந்தில்குமார் (பழநி எம்எல்ஏ):

அரசியல் அமைப்புச் சட்டம் கேலிக் கூத்தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு அமைச்சரே ’பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிறார். அப்படியென்றால் இந்த அரசு எப்படி நியாயமாக செயல்படும்? மக்கள் மீது அக்கறையில்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. திமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில், உரிய முடிவை எடுக்கும்.

கோமல் எல். சுந்தர்ஜி ( திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர், நெல்லை ):

இப்போதுள்ள நிலையில் திமுக எதையும் செய்ய வேண்டாம். திமுக ஆட்சி அமைக்க காலம் தானாகவே கனிந்து கொண்டிருக்கிறது. அதிமுக மீது மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் அதிமுகவுக்கு தக்க தொரு பாடத்தை புகட்டுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை ஸ்டாலின் சரியாகப் பயன்படுத்துவார்.

சுசீ. ரவீந்திரன் ( திமுக மூத்த உறுப்பினர், தூத்துக்குடி) :

தமிழகத்தில் அதிமுக அரசை மக்களும் விரும்பவில்லை. இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, இந்த அரசை அகற்ற வேண்டிய நடவடிக்கைகளை திமுக தலைமை செய்ய வேண்டும். இந்த அரசை அகற்றிவிட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து திமுக அரசு அமைய வேண்டும். அதுதான் தொண்டர்களின் விருப்பம். அதற்கான பணிகளை கட்சி தலைமை செய்ய வேண்டும்.

நா.கார்த்திக் ( சிங்கநால்லூர் எம்எல்ஏ):

அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவதுமே முக்கியம். அதிமுக அணிகளின் பதவி சண்டையை, சுய நலத்தை அம்பலப்படுத்தி, இந்த ஆட்சியை அகற்றி, மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அவர் இதைத் தொடர வேண்டுமென்பதே திமுகவினர் எதிர்பார்ப்பு.

அ.சரவணகுமார் (திருப்பூர் மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்):

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்தும் வகையில், அனைத்து ஊர்களிலும் மக்கள் மத்தியில் ஸ்டாலின் பேச வேண்டும். சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மெஜாரிட்டியை நிருபிக்க, ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போது தேர்தல் நடைபெற்றால், ஸ்டாலின் தமிழக முதல்வராவது நிச்சயம். இதை திமுகவினர் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.அன்வர் (சேலம் மாநகர திமுக முன்னாள் பொருளாளர்):

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தமிழகத்தில் நிலையற்ற ஆட்சி காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மத்திய அரசு தனது திட்டங்களைத் தமிழகத்தில் திணித்து வருகிறது. ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியதாகிவிட்டது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் வர்த்தகர்களும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று பல பிரச்சினைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. எனவே, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியபடி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இந்த ஆட்சி கவிழும். உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டு நிலையான ஆட்சி அமைந்தால்தான் உறுதியான தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களுக்கு நன்மை செய்ய முடியும். மாறாக, மீண்டும் வேறொருவர் தலைமையில் ஆட்சி அமைந்தாலும், இப்போது ஏற்பட்டது போல குதிரை பேரங்கள், அணி மாற்றங்கள் தொடரும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

மருத்துவர் சயி (வேலூர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்):

முறையான தமிழக வளர்ச்சிக்கு நிலையான அரசு தேவை. கெட்ட செங்கற்களை வைத்து நல்ல கட்டிடம் கட்ட முடியாது.

ஊழல் பெருச்சாளிகளை வைத்து அரசு அமைக்க முடியாது. எனவே, தேர்தலை சந்திக்க திமுக தயாராக வேண்டும். தேர்தல் வந்தால் பாஜகவின் எதிர்ப்புகளையும் மீறி திமுக வெற்றிபெறும்.

மு.பெ.கிரி (செங்கம் எம்எல்ஏ):

தமிழகத்தின் தற்போதைய சூழலில் திமுக அமைதியாக இருப்பதுதான் சரியான முடிவு. அதிமுக எம்எல்ஏக்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது.

நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் அதைத் தோற்கடிக்க மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஆட்சியைக் கலைத்தாலும் உடனடியாகத் தேர்தல் நடத்தப்படுமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்தச் சூழலில் எங்கள் செயல் தலைவரின் முடிவு வரவேற்கத்தக்கது. அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

என்.கே.கே.பெரியசாமி (முன்னாள் அமைச்சர், திமுக மாநில விவசாய அணித் தலைவர்):

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ள நிலையில், திமுக எவ்வித முடிவையும் எடுப்பது சரியாக வராது. அவ்வாறு தலையிட்டால், கட்சிப் பெயர் கெட்டுவிடும். இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி இருக்கும் என்பதால், இன்னும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு சபாநாயகர் தனபாலை முதல்வராக அறிவித்து, ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் துணை முதல்வராக இருக்கக் கூட ஒப்புக்கொண்டுவிடுவார்கள்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் - (திமுக துணைப் பொதுச் செயலாளர்):

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை ஆளுநர் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் திமுகவின் முடிவு அமையும்.

தமிழன் பிரசன்னா (திமுக செய்தித் தொடர்பாளர்):

எப்போது தேர்தல் நடந்தாலும் திமுகவே வெற்றிபெறும் நிலை உள்ளது. எனவே, பழனிசாமி அகற்றப்பட்டு பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப அவர் செயல்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது. மக்கள் விரும்பாத, பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

பா.பிரான்சிஸ் சேவியர், (கல்லுக்குழி, திருச்சி):

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் கடிதத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். இதன்மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தாமதிப்பதுபோல தெரிகிறது. எனவே ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

சி.கிருஷ்ணமூர்த்தி, (ஓய்வுபெற்ற ஆசிரியர், நல்லூர் - நாகை):

தமிழகத்தில் எல்லா வகையிலும் தமிழக நலனுக்கு எதிரான ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை இன்னமும் விட்டு வைக்காமல் உடனடியாக அகற்றும் நடவடிக்கையில் திமுக ஈடுபட வேண்டும். அதேநேரத்தில் சென்ற தேர்தலைப் போல மற்ற அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக விட்டுவிடாமல் ஒன்று திரட்டி ஓரணியாக்கி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாஜக போட்டு வைத்திருக்கும் திட்டங்களை சமாளித்து தமிழகத்தை அதன் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x