Published : 02 Aug 2017 01:16 PM
Last Updated : 02 Aug 2017 01:16 PM

உழவர் சந்தைகளில் காய்கறிகளுக்கு இரட்டை விலை: அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் அட்டகாசம்

உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை விலைபட்டியலில் போட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகள் போர் வையில் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்ப னை செய்யவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யவும் கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழ கத்தில் உழவர்சந்தை திட்டம் தொடங் கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் சொக்கிகுளம் உழவர்சந்தைக்கு அதிகப்பட்சமாக தினமும் 15 டன் முதல் 20 டன் காய்கறிகளும், அண்ணா நகர் உழவர்சந்தைக்கு 18 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வருகின்றன. உழவர்சந்தை விதிமுறைப்படி, சந்தைகளில் விவசாயிகள் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும்.

அதுவும், அவர்கள், அவர்களுடைய விளைநிலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை மட்டுமே கொண்டு வந்து விற்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்வதோடு சரி, சந்தைகளுக்கு வந்து நேரடியாக விற்பனை செய்ய ஆர்வம் காட்டு வதில்லை. அதனால், விவசாயிகள் போர்வையிலே சந்தைகளில் 75 சதவீதம் வியாபாரிகள் உள்ளனர்.

ஒவ்வொரு காய்கறி பரு வத்திற்கும் ஒரு முறை தோட் டக்கலைத்துறை அதிகாரிகள், உழவர்சந்தை விவசாயிகளுடைய தோட்டங்கள், வயல்களுக்கு நேரடியாக சென்று அவர்கள் பயிரிட்டுள்ள காய்கறிகள், பழங்களை பார்வையிட்டு அந்த பயிர்களின் அறுவடை காலம் வரை அவற்றை உழவர் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்ய வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.

இதன் அடிப்படையில் வேளாண் வணிகத்துறை அதி காரிகள் இவர்களுக்கு சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அடையாள அட்டை வழங்குவார்கள். ஆனால், தற்போது வியாபாரிகளே பெரும் பாலும் சந்தைகளில் காய்கறிகளை விற்பதால் முன்பிருந்த ஆய்வுகள், கண்காணிப்புகள் தற்போது உழவர்சந்தைகளில் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உழவர்சந்தை விலை நிலவரத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டியலில் போட்டுள்ள விலை பட்டியல் ஒன்றாக இருக்கிறது. வியாபாரிகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலைபட்டியல் மற்றொன்றாக இருக்கிறது. உதாரணமாக நெல்லிக்காய் கிலோ ரூ. 35 என விலைப்பட்டியலில் உள்ளது. ஆனால் நெல்லிக்காயை ரூ.150க்கு விற்கிறார்கள்.

விவசாயிகள் உழவர்சந்தை நிர்ணயித்துள்ள விலைப்பட்டியல் அடிப்படையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் நேரத்திலும், அபூர்வமாக சந்தைக்கு காய்கறிகள், பழங்களையும் நிரந்தரமாகவே கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனர். இவற்றை கண்கா ணிக்க சந்தைகளில் நிர்வாக அலுவலர், உதவி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் ‘கண்டும் காணாமல்’ இருப்பதாக கூறப்படுவதால் உழவர்சந்தைகள் தற்போது வியாபாரிகள் சந்தையாக மாறிவிட்டது.

வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் காய்கறிகளை கொள்முதல் செய்து உழவர்சந்தையில் கொண்டு வந்து விற்கின்றனர். அதனால், உழவர் சந்தைகள் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் உழவர்சந்தையால் பயனடை கின்றனர். பொதுமக்கள் பாதிப் படைகின்றனர்.

ஆரம்பகாலத்தில் உழவர் சந்தைகளின் வெளிப்படையான விலை நிலவரம், விவசாயிகளுக்கு கிடைத்த நியாயமான விலை யால் இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கான முன்மாதிரி திட்டமாக திகழ்ந்தது. சமீபத்தில் கூட இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர மத்திய அரசே வரைவுத்திட்டம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழ கத்தில் தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தைகள் முடங்கும் அபாயத்தில் இருக்கின்றன.

புகார் தெரிவித்தால் நடவடிக்கை

வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் கூறியது:

கூடுதல் விலை விற்பதாக தெரிவித்தால் உழவர்சந்தை நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்கள். உழவர்சந்தைகளில் கடந்த காலத்தைப்போலவே தற்போதும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், உதவி அலுவலர்கள், அலுவலர் நேரடியாக விவசாயிகளுடைய தோட்டங்களை பார்வையிட்டு அவர்கள் சாகுபடி செய்து கொண்டு இருக்கிறார்கள் என பரிந்துரைத்து வெள்ளை அட்டை கொடுக்கும் நபர்களையே நாங்கள் உழவர்சந்தையில் காய்கறிகள் விற்க அனுமதிக்கிறோம், ’’ என்றனர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் வெள்ளை அட்டை கொடுக்கும் நபர்களைதான் அவர்கள் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால், இந்த விஷயத்தில் எங்களை இழுக்க வேண்டாம், ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x