Last Updated : 11 Jul, 2017 10:23 AM

 

Published : 11 Jul 2017 10:23 AM
Last Updated : 11 Jul 2017 10:23 AM

தி இந்து செய்தி எதிரொலி - டி.எம். சௌந்தரராஜனின் தம்பிக்கு தேடிவந்த உதவிகள்!

வசியக்குரலோன் டி.எம்.சௌந்தரராஜனின் சகோதரர் டி.எம்.கிருஷ்ணமூர்த்தி, வறுமையில் வாடுவது குறித்து, ‘சோதிச்சதெல்லாம் போதும் பெருமாளே..!’ என்ற தலைப்பில் ஜூன் 30 ‘தி இந்து’வில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அன்று காலையில் ‘தி இந்து’ செய்தியைப் படித்ததுமே, சென்னை அபூர்வ சங்கீதா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் உரிமையாளர் ராஜா, மதுரையில் உள்ள தனது நண்பர் ‘யுவர்ஸ் பப்ளி சிட்டி’ முருகன் மூலமாக டி.எம்.கிருஷ்ணமூர்த்திக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். காலை 11 மணிக்கே கிருஷ்ணமூர்த்தியின் வீடு தேடிப்போய் பணத்தை ஒப்படைத்த முருகன், தன்னுடைய பங்காகவும் ரூ.1000 கொடுத்தார்.

அன்று மாலையே, திருச்சியை தலைமையாகக் கொண்டு 5 மாநிலங்களில் சுகாதாரத் தொண்டு செய்யும் ‘கிராமாலயா’ நிறுவனத்தினர், கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு வந்து விஸ்தாரமான கழிவறையைக் கட்டிக் கொடுக்கும் வேலைகளைத் தொடங்கினர். உறை கிணற்றில் மோட்டார் வைத்து, கழிவறைக்கு மேல் நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகிக்கும் ஏற்பாட்டையும் செய்துவருவதாக கிராமாலயாவின் மேலாளர் சம்பத்ராஜன் நம்மிடம் தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சந்திரசேகரன், கடலூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட மேலும் 10 பேர் கிருஷ்ண மூர்த்திக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்துள்ளனர். மதுரையில் உள்ள ‘படிக்கட்டுகள்’ அமைப்பு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை வழங்கியிருக்கிறது. இவை தவிர, மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், சௌராஷ்டிரா மத்திய சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடு பராமரிப்பு மற்றும் குடிநீர் இணைப்புக்கு உதவுவதாக கிருஷ்ணமூர்த்திக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதையெல்லாம்விட, மதுரையில் தனிக் குடித்தனம் நடத்தும் டி.எம்.கிருஷ்ணமூர்த்தியின் மகன் யோகமூர்த்தி, மனக் கசப்புகளை மறந்து விட்டு தன் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழச் சம்மதித்திருக்கிறார்.

இந்தத் தகவல்களை கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தி, “நான் என்ன சொல்ல.. திக்கேதும் தெரியாது நின்ற எங்களுக்கு அந்தப் பெருமாள் ‘தி இந்து’ வாசகர்கள் மூலமா இன்னொரு வழியைக் காட்டி இருக்கார்னு மட்டும் தெரியுது’’ என்றார்.


கட்டி முடிக்கப்பட்ட கழிவறை..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x