Published : 06 Jul 2017 09:02 am

Updated : 06 Jul 2017 09:39 am

 

Published : 06 Jul 2017 09:02 AM
Last Updated : 06 Jul 2017 09:39 AM

பழியாய் கிடக்கும் பாகுபலி

சமணர் படுகையைப் பாதுகாக்க சமணத் துறவி ஒருவரே உயிர்த்தெழுந்து வந்தால் எப்படியிருக்கும்? அப்படித் தான் தோன்றுகிறது ரவிச்சந்திரனைப் பார்க்கையில்! மிகையல்ல.. ஒருமுறை நீங்களே அவரை நேரில் பார்த்தால், ‘ஆமாம்பா ஆமா’ என்பீர்கள்.

பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம் மதுரை யானைமலை சமணர் படுகை. ஓராண்டுக்கு முன்புவரை இந்தக் குகைக்குச் செல்லும் பாதை யெல்லாம் முட்புதர் அடர்ந்து, படிகளில் காலே வைக்கமுடியாத அளவுக்கு மனிதக் கழிவுகளும், உடைந்த மதுப் பாட்டில்களுமாய் காட்சி தந்தது. நேற்று அங்கு போயிருந்தோம். முதல்வர் வந்துபோன சாலையைப் போல படு சுத்தமாய் இருக்கின்றன படிக்கட்டுகள். குகை நெருக்கத்தில் வழக்கமாக வீசும், வௌவால் நாற்றம் துளியும் இல்லை. முற்றம் தெளித்து கோலமெல்லாம் போடப்பட்டிருந்தது.

ரவிச்சந்திர சேவை

அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்துக்கு சமணர் படுகை பற்றியும், புடைப்புச் சிற்பங்கள் பற்றியும் விளக்கிக் கொண் டிருந்தார் வேட்டி அணிந்த ஒரு எளிய மனிதர். அவர்தான் ரவிச்சந்திரன். மகா வீரர் சிலையைக்காட்டி, ’புத்தர் சிலைக்கும் மகாவீரர் சிலைக்கும் என்ன வித்தி யாசம் தெரியுமா?’ என்று சிறுமியிடம் கேள்வி கேட்டு சுவாரசியமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். (ஆடை, தலைமுடி இருந்தால் புத்தர். அவை யிரண்டும் இல்லாமல் தலைக்கு மேலே மூன்று குடைகள், இருக்கைக்குக் கீழே மூன்று சிங்கங்கள் இருந்தால் மகாவீரர்!) மேலும் சில சிற்பங்களைக்காட்டி ’இது பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி’ என வரிசையாய் அவர் விளக்க, வந்திருந்தவர்கள் உற்சாக மாகிறார்கள்.

ஆர்வம் குறையும் முன்பே, அவர்களை மலையின் மேல்பகுதியில் உள்ள சமணர் படுகைக்கும் அழைத்துப் போகிறார் ரவிச்சந்திரன். வந்திருப்பவர்களின் ஆர் வத்தைப் பொறுத்து, ‘இதையும் வாசிச்சுப் பாருங்க சார்’ என்று சில புத்தகங் களையும், காகிதங்களையும் அவர்களிடம் நீட்டுகிறார்.

‘பசுமை நடை’ அமைப்பு வெளியிட்ட ‘மதுரை வரலாறு’, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்தின் ‘மதுரையில் சமணம்’, தானம் அறக்கட்டளையின் ‘யானை மலை’, மதுரை சமணப்பண்பாட்டு மன்றம் வெளியிட்ட ‘ஜீனர் மலைகள் அல்லது அறவோர் பள்ளிகள்’ போன்ற புத்த கங்களைக் கொடுத்துவிட்டு அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். ஏதாவது சந்தேகம் கேட்டால் மட்டும் பதில் வருகிறது.

மதுரையைச் சுத்துன கழுதை

அரசின் மணி மண்டபங்கள், நினைவு இல்லங்களில் சம்பளத் துக்கு இருப்பவர்கள்கூட இப்படிப் பொறு மையாக விளக்கம் சொல்லமாட்டார் களேப்பா! ஆச்சரியம் விலகாமல் ரவிச் சந்திரனிடம் பேசினோம். ’’ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறையில வேலைபாக்கு றப்ப, டாப் அடிக்கிறதுக்காக இந்தக் குகைக்கு வருவோம் சார். சும்மா, ஏசி போட்ட மாதிரி, உடம்புக்கும், மனசுக்கும் இதமா இருக்கும்ல. மதுரையைச் சுத்துன கழுதைகூட வெளியில போகாதுன்னு சொல்வாங்கெ பாரு, அது இந்த மலைக்கு வந்துபோனவங்களுக்கும் அச்சு அசலாப் பொருந்தும்.

யானை மலையை உடைச்சி சிற்பநகர் உருவாக்க அரசாங்கமே திட்டமிட்டப்ப, இங்குன பெரிய போராட்டமே நடந்துச்சி. அதுக்கு வந்த அறிஞர்கள் சொல்லித்தான் இது சாதாரணமான இடம் கெடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். 2016 பிப்ரவரியில இந்தப் படிக்கட்டை எல்லாம் தொல்லியல் துறை சார்புல சுத்தம் பண்ணுனாய்ங்க. நானும் ஆர்வமா வேலை செஞ்சேன். என்னையப் பத்தி கேள்விப்பட்ட தொல்லியல் அதிகாரி, கம்பி வேலி கேட்டெல்லாம் போட்டு கடைசியில, சாவியை என்கிட்ட ஒப்படைச்சிட்டாரு. அன்னைல இருந்து நான் தான் இங்கே காவக்காரன்.’’ ஒரேமூச்சில் சொல்லி முடித்தார் ரவிச்சந்திரன்.

வெருகு (காட்டுப்பூனை), பாம்பு, உடும்பு, வௌவால் எல்லாம் சர்வ சாதாரணமாக நடமாடும் இந்த மலையில், இவர் பயப்படுவது குடிகாரர்க ளுக்குத்தான். ‘யோவ், இந்த மலை உற் பத்தியான காலத்துலருந்து நான் இங்கனக்குள்ளதான் தண்ணிடியடிக் யேன். நீ யாருய்யா நேத்து வந்த பய’ என்று சிலர் திட்டுவார்களாம். சில இளந் தாரிகள் அடிக்கவும் கை ஓங்கு வார்கள். கோளாறாகப் பேசியும், போலீஸ் பெயரைச் சொல்லியும் அவர்களை அப்புறப்படுத்துவதுக்குள் ரவிச்சந்திர னுக்குத் தாவு தீர்ந்துவிடும்.

மனசுக்குப் பிடிச்ச வேலை

’’எங்க அப்பா மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள வளையல் கடையில வேலை பார்த்தவரு. எனக்கும் ஒரு ஆன் மிகத் தலத்திலேயே வேலை பார்க்கிற வாய்ப்பு கெடைச்சிருக்கு’’ என்று ரவிச் சந்திரன் நம்மிடம் நெகிழ்ந்து பேச, ’போயா இவனே..’ என்று ஒரு குரல் நமக்குப் பின்னால் இருந்து.. அதிர்ந்து திரும்பிப் பார்த்தால், தலைக்கு கையை அடை கொடுத்து பாற்கடல் விஷ்ணுபோல படுத்திருந்திருந்தார் ஒரு பெரியவர். ’’தம்பி இந்தாளு இந்த ஒன்றரை வரு சத்துல ஒரு மாசச் சம்பளமாவது வாங்கியி ருக்கானான்னு கேளுப்பா.

பொண்டாட்டி தனியார் ஆஸ்பத்திரியில துப்புரவு தொழிலாளியா இருக்கு. உடம்பு சரியில்லாத பொம்பள உழைச்சி, வீட்டு வாடகைக்கும், பிள்ளைக படிப்புக்கும் குடுக்குது. இந்தாளு என்னமோ, சமணச் சாமியாராட்டம் மலையே கதின்னு கெடக்யான். கேட்டா, ’மனசுக்குப் பிடிச்ச வேலை’ன்னு தத்துவம் பேசுதி யான். ‘அப்படின்னா சம்பளம் கேட்டு கலெக்டர்கிட்ட மனு குடுய்யா’ன் னோம். கலெக்டர்ட குடுத்த மனு தொல்லி யல்துறைக்கு போச்சு. அவங்க, ‘ரவி உன்னைய மாதிரி ஆளு கெடைக்கு மாய்யா. சீக்கிரமே ஏற்பாடு செஞ்சிடு வோம்’னு தாஜா பண்ணி அனுப்பிட் டாய்ங்க. இவனும் கொண்டிமாடு கணக்கா தலைய ஆட்டிட்டு வந்துட்டியான்” என்று கோபப்பட்டார் அந்தப் பெரியவர்.

இது புதிதல்ல.. இப்படி எத்தனையோ பேர் ரவிச்சந்திரனுக்கு புத்திமதி சொல்லி இருப்பார்கள். வில்லங்கப் பேர்வழிகளின் விவகாரத்தை இழுத்தி ருப்பார்கள். ஆனாலும், எதைப்பற்றியும் கவலைப் படாமல் சமணர் குகையே பழி என கிடக்கிறார் இந்த ரவிச்சந்திர பாகுபலி!


மதுரைசமண குகைரவிச்சந்திரன்துறவிதொல்லியல் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author