Published : 27 Jul 2017 09:17 AM
Last Updated : 27 Jul 2017 09:17 AM

பைபாஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதி 3 பெண்கள் பலி: படுகாயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 பெண்கள் பலியாயினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். சொந்தமாக மினி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அப்பகுதியில் உள்ள கோயிலில் பூ விற்கும் பெண்கள் தினமும் இந்த வேனில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று பூ வாங்கி வருவது வழக்கம்.

ரத்தினமங்கலத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 9 பெண்கள் வேனில் கோயம்பேடு சென்றனர். வேனை ராஜசேகர் (34) என்பவர் ஓட்டினார். வேனின் முன்பகுதியில் மணிகண்டன், பூ விற்கும் பெண் சுஜாதா ஆகியோர் இருந்தனர். மற்ற பெண்கள் பின் பகுதியில் இருந்தனர்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் தரப்பாக்கம் அருகே சாலையோரத்தில் சிமென்ட் கலவை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் லாரி மீது மோதினார். இதில் சுஜாதா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் வசந்தி (40), தமிழரசி (36), ஆகியோர் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். வேன் உரிமையாளர் மணிகண்டன், பொன்மதி, டில்லிமா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, முத்தழகி, அமுலு ஆகியோர் படுகாயத்துடன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மணிகண்டனுக்கு 2 காலிலும் எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநர் ராஜசேகர், சிமென்ட் கலவை லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x