Last Updated : 27 Jul, 2017 03:48 PM

 

Published : 27 Jul 2017 03:48 PM
Last Updated : 27 Jul 2017 03:48 PM

கலாம் நினைவு: புதுமையாக அசத்திய நெல்லை ஓவியர்

அப்துல் கலாம் அனுப்பிய ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டு கடிதம் ஆகியவற்றின் நகல்களை லேமினேட் செய்து தனது கலைக்கூடத்தில் மாட்டியுள்ளது மட்டுமில்லாமல், அதையே தன் மனமெங்கும் நிரப்பியிருக்கிறார் ஓவியர் எம். கணேசன். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை பூர்வீகமாக கொண்ட இந்த ஓவியர், தனது கைவண்ணத்தால் அப்துல் கலாமையே அசத்தியிருக்கிறார்.

nellaijpg

மொத்தம் 32 ஓவியங்களை கணேசன் வரைந்திருக்கிறார்.  அத்தனையும் அப்துல் கலாம் புன்னகைக்கும் ஒரே தோற்றத்தில்தான் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றையும் வெவ்வேறு பொருட்களை கொண்டு வரைந்து காட்டியதில்தான் கணேசனின் திறமை பளிச்சிடுகிறது.

பென்சில், கிரேயான், ஆயில் பெயிண்ட் போன்றவற்றால்  வழக்கமான முறையில் மட்டுமல்லாமல் மசாலா பவுடர், தையல் நூல், வளையல்கள், தீக்குச்சிகள், ஜிமிக்கி, பயன்படாத துணிகள் போன்றவற்றால் கலாமின் ஓவியங்களை உருவாக்கி வித்தியாசம் காட்டியிருக்கிறார் கணேசன்.

பள்ளி முதல் கலைக்கூடம் வரை

பத்தமடை பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும்போது ஓவியம் வரையத் தொடங்கிய இவர்,  கடந்த 7 ஆண்டுகளாக திருநெல்வேலி பெருமாள்புரத்தில் சிவராம் கலைக்கூடத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் பல இளம் ஓவியர்களை உருவாக்கி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தற்போது  ஓவிய ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் என்று அநேக பிரபலங்களை ஓவியமாக வரைந்து, அவர்களையே பிரமிக்க வைத்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் வெவ்வேறு விதங்களில், வண்ணங்களில் ஓவியங்களை வரைந்திருக்கும் கணேசனின் மனத்திரையில், அப்துல்கலாமின் ஓவியங்களும், தொலைபேசியில் அவர் பாராட்டியதும், வெகுமதியாக பாராட்டு சான்றிதழுடன், ரூ.10 ஆயிரம் காசோலையை அனுப்பியதும் அழிக்க முடியாத ஓவியங்களாக பதிந்திருக்கின்றன.

valayaljpgமார்க்கர் ஓவியம்

உள்ளம் பூரித்தது

“பாளையங்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தபோது பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அந்த கண்காட்சி அரங்கில் அப்துல் கலாம் படத்தை வரைந்தபோது, என்னை சுற்றிலும் மாணவர்கள் கூட்டம். அது முதல் அவரது படங்களை தொடர்ச்சியாக வரையத் தொடங்கினேன். 2008-ம் ஆண்டில் பலபொருட்களை கொண்டு அவரது ஓவியங்களை உருவாக்கி எனது கலைக் கூடத்திலும், ஒருசில கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தியிருந்தேன்.

எனது கலைக்கூடத்துக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் இந்த ஓவியங்களை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

markerjpgமார்க்கர் ஓவியம்

2015-ம் ஆண்டு தொடக்கத்தில் நான் வரைந்திருந்த அப்துல் கலாமின் 32 ஓவியங்களை வீடியோவாகப் பதிவு செய்து, அவருக்கு அனுப்பி வைத்தேன். இந்த படங்களை அனுப்பிய 3-வது நாளில் அப்துல் கலாம் ஐயாவே என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். உங்கள் பெயர் என்ன, என்ன வேலை செய்கிறீர்கள், ஏன் எனது படத்தை வரைந்தீர்கள் என்றெல்லாம் நெருங்கிய உறவினர் பேசுவதுபோல் கேட்டார்.

குழந்தைகள் மத்தியில் உங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் உங்கள் படங்களை விதவிதமாக வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன் என்று கூறியதும், ‘நன்றி’ என்று அவர் தெரிவித்தபோது எனது உள்ளம் பூரித்தது. ஓவியங்களை வரைய என்ன செலவானது என்று அவர் கேட்டபோது, நான் அதைச் சொல்லவில்லை.

தங்களை நேரில் பார்த்து ஓவியங்களை காட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தபோது, மதுரை, திருநெல்வேலிக்கு வரும்போது கண்டிப்பாக சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.  அதற்கு அடுத்த நாள் அவரது உதவியாளர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்கள் பெயருக்கு ரூ.10 ஆயிரம் காசோலையும், பாராட்டுக் கடிதத்தையும் அனுப்பியிருப்பதையும் தெரிவித்தார். காசோலை கையில் கிடைத்தபோது மிகப்பெரிய விருதாக அதை நினைத்தேன். அத் தொகையை எனது பிள்ளைகள் பெயரில் டெபாசிட் செய்திருக்கிறேன்.

nooljpgநூல் ஓவியம்

மனநிறைவு

அப்துல் கலாமின் மறைவை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவரை நேரில் சந்திக்க முடியாமல்போனது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது. எனது கலைக்கூடத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு அப்துல்கலாமின் படங்களை வரைய சிறப்பு பயிற்சி அளித்து வருகிறேன். அதில் எனக்கு மனநிறைவு என்று முடித்து கொண்டார் கணேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x