Published : 25 Jul 2017 09:24 AM
Last Updated : 25 Jul 2017 09:24 AM

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோகெமிக்கல் பூங்கா அமைய விடமாட்டோம்: அன்புமணி ராமதாஸ் உறுதி

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோகெமிக்கல் பூங்கா அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமகவைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் அரங்க.வேலு எழுதிய ‘என் வாழ்க்கைப் பயணம்’ நூல் வெளி யீட்டு விழா, சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடந்தது. நூலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ராமதாஸ் பேசும் போது, ‘‘ரயில்வே இணை அமைச்ச ராக வேலு இருந்தபோது அகல ரயில் பாதை திட்டம், சேலம் ரயில்வே கோட்டம் உட்பட தமிழ கத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அவரு டைய ஆளுமைதான் ரயில்வே துறை சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. தமிழ் மொழியை நாம் தற்போது மறந்து விட்டோம். ஆங்கிலம் கலவாத தமிழில் யாரும் பேசுவதில்லை. ஆங்கிலம் கலக்காத தமிழில் அனைவரும் பேச வேண்டும்’’ என்றார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, ‘‘நஷ்டத்தில் இயங்கி வந்த ரயில்வே துறையை லாபத்தில் இயங்க வைத்தவர் வேலு. இப்படி பல சாதனைகளை செய்துள்ளார். நாம் ஒவ்வொரு நாளும், ஒவ் வொரு நொடியும் நமது உரிமை களை இழந்து வருகிறோம். இப்போது ஆட்சியில் இருப்பவர் கள் இனிமேல் கவுன்சிலராகக்கூட வர முடியாது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும்’’ என்றார்.

விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் வேலு, எழுத்தாளர் சா.கந்தசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் பூங்கா அமைக் கப்படும் என்று அறிவித்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இந்த பெட்ரோகெமிக்கல் பூங்காவை பாமக வரவிடாது. விவசாயிகளைத் திரட்டி கடுமையாக ஏதிர்த்து போராடுவோம். சமூக நீதிக்கும் ஏழை கிராமப்புற மாணவர்களுக் கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x