Published : 06 Jul 2017 09:48 AM
Last Updated : 06 Jul 2017 09:48 AM

அத்தனையும் கலைப் பொக்கிஷம்.. அசத்தும் சிற்றரசரின் வாரிசு..!

விழுந்த யானை தந்தம், உதிர்ந்த மான் கொம்பு, மிருகங்களின் முடி, தோல், ஈட்டி, தேக்கு மரங்கள், தென்னை ஓலை, கொட்டாங்குச்சி - இப்படி தனது கைக்கு எது கிடைத்தாலும் அதைக் அற்புதமான கலைப் பொக்கிஷமாக்குவதில் கெட்டிக்காரர் முரளிக்குமார்.

முப்பரிமாணத்தில்..

தான் வரையும் அவுட்லைன் ஓவியங்கள் மீது ‘எம் - சீல்’ பிசினை ஒட்டி சிறிய உளி, ஊசி, கத்தி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு செதுக்குகிறார், நகத்தால் கீறுகிறார். பிசின் காய்ந்ததும் செதுக்கி அதன் மீது வர்ணம் தீட்டுகிறார். அது சில ரசவாத வித்தைகளுக்குப் பிறகு, பூ என்றால் மகரந்தத் தூளுடன் இருக்கும் பூக்கள் போலவும், சிங்கம் என்றால் முடியும் தசைகளும் சிலிர்த்து நிற்பது போலவும் தத்ரூபமான சிற்ப ஓவியங்களாக முப்பரிமாணத்தில் உருவமெடுக்கிறது.

விலங்குகளை மட்டுமல்ல, பறவைகளையும் தத்ரூபமாக வடித்து வைத்திருக்கிறார் முரளிக்குமார். இவரது வீட்டுக் கதவின் நிலைவாயில் முழுக்க தென்னம் பாளைகள் தேக்கில் இழைத்தது போல் மிளிர்கிறது. வீட்டுச் சுவர்கள், பரண், அலமாரி, கட்டில், மேஜை, நாற்காலி என அனைத்திலும் கலை நுணுக்கமான மரச் சிற்பங்கள், ஓவியங்கள் என கலந்து கட்டி வைத்திருக்கும் கோவை செம்மேட்டைச் சேர்ந்த இந்த முரளிக்குமார், தனக்குள் இந்த தனித் திறன் வந்தது குறித்துப் பேசினார்.

‘‘என் அம்மாவோட பெரியப்பா வெள்ளக்கிணறு வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மைசூர் மகாராஜாவின் ஆளுமைக்குள் இருந்த சிற்றரசர். நான் சின்னவனா இருக்கிறப்ப எங்க பாட்டி வாத்து, மயில், கோழி மாதிரி வடிவங்களில் அழகழகா கூடைகளைப் பின்னுவாங்க. அதைப் பார்த்துட்டு அந்த உருவங்கள் மாதிரியே சுவரெல்லாம் கிறுக்குவேன். சிங்க முத்திரைதான் எங்க ஜமீனோட இலச்சினை. அதையும் ஆங்காங்கே வரைவேன்; மரச்சிற்பங்க ளாவும் வடிப்பேன்.

எட்டாம் வகுப்பு படிக்கையில், ஆப்பிரிக்க ஆதி வாசி ஒருவர் சிங்கத்துடன் போராடும் சித்திரம் ஒன்றை ‘ஹன்ட்டர்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பார்த்தேன். என்னை ரொம்பவே கவர்ந்த அந்த ஓவியத்தை அவுட் லைன் வரைந்து ’எம் - சீல்’ கலக்கி சிற்ப ஓவியத்தில் அந்த காட்சியை வடித்தேன். அதைப் பார்த்துவிட்டுப் பாராட்டாதவர்களே இல்லை.’’ பெருமிதம் கொள்கிறார் முரளிக்குமார்.

கண்முன்னே காண்டாமிருகம்

இதுவரை ஆயிரக் கணக்கான கலைப்பொருட் களை செய்திருந்தலும் எம் - சீல் வகை சிற்ப ஓவியங்கள் 32 மட்டுமே செய்திருக்கிறார். அந்த அளவுக்கு அதில் வேலைப்பாடுகள் அதிகம். அண் மையில் இவர் உருவாக்கியிருக்கும் காண்டாமிருக சிற்ப ஓவியத்தை தயாரிக்க இரண்டு மாதங்கள் பிடித்ததாம்!

‘‘எம் - சீல் நாம் இழுக்கும் இழுவைக்கு இஷ்டம் போல் குழைந்து கொடுக்கும். ஆனால், சீக்கிரமே காய்ந்துவிடும். எனவே, அதை தேவைக்கேற்ப அளவோடு கலந்து உடனுக்குடனே பயன்படுத்தி, நினைத்த உருவத்தை உருவாக்க வேண்டும் இல்லாவிட்டால் சேதமாகி விடும். சங்குப்பொடி, பருப்புப்பொடி கோதுமை ரவை இவைகளை எல்லாம் கலந்து அவற்றை காண்டாமிருக ஓவியத்தில் எம் - சீல் கொண்டு ஒட்டுவோம். காய்ந்த பிறகு இதைத் தடவிப் பார்த்தால் காண்டாமிருகத்தை தடவுவது போன்று உணரமுடியும் எட்டி நின்று பார்த்தால் நம் கண்முன்னே நிற்பது போல் முப்பரிமாணத்தில் காண்டாமிருகம் நம்மை மிரளவைக்கும்’’ என்கிறார் கலை வித்தகர் முரளிக்குமார்.

முரளிக்குமார் தனது படைப்புகளுடன்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x