Published : 29 Jul 2017 12:26 PM
Last Updated : 29 Jul 2017 12:26 PM

புத்தகங்களைக் கொண்டாடும் சேலம்!

சேலம் புத்தகத் திருவிழா! 2001முதல் ஆண்டுதோறும் இருமுறை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சி, கடந்த 21 அன்று தெய்வீகம் திருமண மண்டபத்தில் தொடங்கியது.

வார நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடக்கிறது. கடந்த முறையைவிட இப்போது நல்ல கூட்டம்!

மொத்தமே 50 அரங்குகள்தான் என்றாலும், முக்கியமான பதிப்பகங்கள் பலவும் கடை விரித்திருந்தன. அரங்கு அமைக்காத பதிப்பாளர்களின் புத்தகங்களையும்கூட மற்ற கடைக்காரர்கள் விற்பனைக்கு வைத்திருந்தால், வாசகர்களிடம் புத்தகம் கிடைக்கவில்லை என்ற அங்கலாய்ப்பே இல்லை.

அரங்கு, தங்குமிடம் என்று 10 நாட்களுக்கும் சேர்த்து வெறுமனே 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை என்பதால், மாதக் கடைசியிலும்கூட விற்பனையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இன்றும், புத்தகக் காட்சியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் வரவிருக்கும் கூட்டம் விற்பனையாளர்களுக்கு லாபத்தை உறுதியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர் கருத்து

வலசையூர் அரசு பள்ளி ஆசிரியர் ஆர். பலராமன்:

ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் புத்தகக் கண்காட்சியை நான் எப்போதும் தவற விடுவது கிடையாது. இந்த முறை எனக்கான புத்தகங்கள் மட்டுமின்றி மாணவர்களுக்காகச் சிறார் புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். புத்தக வாசிப்பின் அவசியத்தைக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் உணர்த்துவது அவசியம்.

திவ்யா, சேலம்:

தொலைக்காட்சி, கைபேசி, இணையதளம் என தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும், புத்தகத்தைத் தொட்டு வாசிக்கிற உணர்வே தனி. இந்த ஆண்டு ‘ நமது குழந்தைகளே; நமது மகிழ்ச்சியின் ஆதாரம்,’ ‘சுவாமி விவேகானந்தர் வாழ்வும் செய்தியும்’ முதலான நூல்களை வாங்கியுள்ளேன். பெண்கள் பலர் குடும்பத்துடன் வந்து புத்தகக் காட்சியைப் பார்த்துச் சென்றது மகிழ்ச்சி தருகிறது. புத்தகம் மட்டும் வாங்கி செல்லாமல் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்று விற்பனை செய்யும் அரங்கமும் இருந்தது என்னைக் கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x