Last Updated : 06 Jul, 2017 09:44 AM

 

Published : 06 Jul 2017 09:44 AM
Last Updated : 06 Jul 2017 09:44 AM

கதவு வெச்சு வீடு கட்டாதே..!- கண்டிஷன் போட்ட கன்னி தெய்வம்

பாகிஸ்தான் பார்டரில் இருப்பதுபோல் கதவுக்கு மேல் கதவு போட்டு அதுவும் போதாதென்று கண் காணிப்பு கேமரா வைக்கிறார்கள். அதிலும் சந்தேகப்பட்டு, கதவு, ஜன்னலுக்கு எல்லாம் அலாரம் வைக்கிறார்கள். இத்தனை ஏற்பாடுகளை செய்தும் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு கிராமத்தில் வீடுகளுக்கு கதவுகளே இல்லாமல் நிம்மதியாய் வாழ் கிறார்கள் - கேட்டால் தெய்வத்தின் கட்டளை என்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது அன்னகாரன் குப்பம். வன்னியர் சமூகத்து மக்கள் பெரும்பான்மையாக வாழும் இக்கிராமத்தில் பெரியவீட்டு வகையறா என்றழைக்கப்படும் ஒரு பிரிவினரின் வீடு களுக்கு கதவுகளே இல்லை. ஊரின் இரண்டு தெருக்கள் முழுக்க வசிக்கும் இவர்களின் வீடுகளில் பெரும்பகுதி கதவுகளைத் தொலைத்துவிட்டுத்தான் நிற்கின்றன.

கதவு போட்டது குத்தம்

பல தலைமுறையாவே எங்க வீடுகளூக்கு கதவு போடுறதில்ல. காட்டுக்கு போய் மரம் வெட்டிகிட்டு வந்து அதுல படல் செஞ்சு அடைக்கிறதுதான் வழக்கம். என்னை கட்டிக்குடுத்த புதுசுல எங்க வீட்டுல புது வீடுகட்டி நாலு கதவு போட்டாங்க. அதுலருந்து வீட்ல ஒருத்தர் மாத்தி ஒருத் தருக்கு உடம்புக்கு முடியாம போச்சு. சாமி பார்த்தப்ப, ‘கதவு போட்டதுதான் குத்தம்’னுச்சு.

உடனே கதவையெல்லாம் கழட்டிட் டோம். ஆனாலும், நெலம சரியாகல. ‘மோட்டார் கொட்டாய்ல போட்டிருக்க கதவையும் கழட்டு’ன்னுச்சு. ‘இப்புடி கதவுகள் எல்லாம் கழட்டிட்டா காவல் யாரு?’ன்னு கேட்டதுக்கு நானாச்சுன்னு சாமி சொல்லுச்சு. அதுல ருந்து இதுவரைக்கும் மோட்டார் கொட்டகையும் தொறந்துதான் கிடக்கு’’ என்கிறார் நடுத்தெருவைச் சேர்ந்த காளியம்மாள்.

படலும், துணியும் பாதுகாப்பு

இவ்விரண்டு தெருக்களிலும் சில வீடுகளில் படலும், பல வீடுகளில் துணியும் தான் வீட்டுவாசலை மறைக்கின்றன. கிராமமாக இருந்தாலும் அனைத்து வீடுகளிலும் டிவி, ஃபிரிட்ஜ், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர் என சகலத்தும் இருக்கின்றன. ஆனால், வீடுகள் திறந்தே கிடந்தாலும் சாமிக்குப் பயந்து இங்கே எந்தப் பொருளையும் யாரும் திருடத் துணிய மாட்டார்களாம்!

இந்தத் தெருக்களைவிட்டு வேறிடம் போய் வீடு கட்டிக் கொண்டவர்களில் சிலர் வீடுகளுக்கு கதவு போட்டிருந்தாலும் கதவின் மேல்புறத்தில் ஜன்னல் போல திறப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜன்னல் வெச்ச கதவு

இதுகுறித்துப் பேசும் அமுதா, ‘‘மெயின் ரோட்டுக்கு வந்துட்டமேன்னு, நாங்க கட்டுன மச்சுவீட்டுக்கு கதவு போட்டோம். ஆனா, ராத்திரியில நிம்மதியா தூங்க முடியல. படபடன்னு கதவை யாரோ உடைக்கிற மாதிரியா சத்தம் கேட்கும், வெளியே வந்து பார்த்தா யாருமே இருக்க மாட்டாங்க. இப்புடியே ராமுச்சூடும் நடக்கும். கதவை எடுத்துட்டு இப்புடி ஜன்னல் வைச்ச கதவு போட்டப்புறம்தான் சத்தம் ஓய்ஞ்சு நிம்மதியா தூங்கமுடியுது’’ என்கிறார்.

‘கதவுக்கு தடா போட்ட சாமி எது?’ பெரியவர் வைசிராய் விளக்கம் சொன்னார். ‘‘எங்க முன் னோர்கள் காலத்துல எல்லா வீட்டுக்கும் கதவு இருந்துச்சு. எங்க வகையறா கன்னிப் பொண்ணு ஒண்ணை ஏதோ காரணத்துக்காக கதவுல வச்சி நெறிச்சுக் கொன்னுட்டாங்களாம். அந்தப் பொண்ணு ஆவியா வந்து ஊரையே ஆட்டிப் படைச்சிருக்கு.

பூவாடைக்காரி சொன்ன பரிகாரம்

இதுக்குப் பரிகாரம் கேட்டப்ப, ‘என்னோட கதி இன்னொரு பொண்ணுக்கு வரக்கூடாது. அதனால, நீங்க யாரும் கதவு வெச்சு வீடு கட்டக்கூடாது. நான் கதவா இருந்து காவல் காப்பேன்’னு அந்தப் பொண்ணு சொன்னுச்சாம். அன்னைக்கிக் கழட்டுன கதவுதான்; இதுவரைக்கும் போடல. எங்களைக் காக்குற அந்தப் பொண்ண நாங்க பூவாடைக்காரின்னு கும்பிட்டுட்டு வர்றோம்’’ என்று முடித்தார் வைசிராய்.

ஊரைக்காக்கும் பூவாடைக்காரிக்கும், குலதெய்வமான குருசாமிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை பங்காளிகள் ஒன்றுகூடி ஒரே வீட்டில் படையல் போடுகிறார்கள். தங்களின் படையலை ஏற்றுக்கொண்டு வீடுகளுக்கு கதவாகவும் தங்களுக்கு தெய்வமாகவும் நிற்கிறாள் பூவாடைக்காரி என்று அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அன்னகாரன் குப்பத்தின் இந்த மக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x