Published : 24 Jul 2017 09:29 AM
Last Updated : 24 Jul 2017 09:29 AM

பாலாற்றில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தி வாயலூர் மேம்பாலத்தில் மனித சங்கிலி

பாலாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்திலிருந்து ஆற்றுப் படுகையில் கடல் நீர் உட்புகுவதால், பாலாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் மகசூல் இயக்கம் சார்பில் வாயலூர் மேம்பாலத்தின் மீது மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற் றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள், ஏரிகள் மற்றும் விவசாயிகளின் பாசனத் தேவைக்கான முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக பாலாறு விளங்கி வருகிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது. இவ்வாறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில், எங்கும் தமிழக அரசு சார்பில் தடுப்பணை அமைக்கப்படவில்லை. இதனால், பாலாற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலாறு கடலில் கலக்கும் வாயலூர் பகுதியில் முகத்துவாரத்தின் வழியாக, உப்பு தண்ணீர் ஊடுருவி வருகிறது. இதனால், கடலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பாலாற்றங்கரையோர கிராமங்களான ஆயப்பாக்கம், நல்லாத்தூர், வேப்பஞ்சேரி, பரமேஸ்வரமங்களம், கடலூர் நத்தம், கூலியாமேடு உள்பட 20 கிராமங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாலாற்று படுகையில் கடல்நீர் ஊடுருவலை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, வாயலூர் பாலாறு மேம்பாலத்தின் மீது விவசாயிகள் மற்றும் மகசூல் இயக்கம் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில், விவசாயிகள் பாதிப்பு மற்றும் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டிய அவசியம் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப் பட்டன.

பல்வேறு அமைப்பினர்

இந்நிகழ்ச்சியில், விவசாயிகள் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கங் கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், கிராம மக்கள், இளைஞர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன், மகசூல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x