

சக விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நெகிழ்ச்சி
கலாம் வாழ்ந்த காலத்தில், அவரோடு பணி செய்து, அவரோடு வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டதை, என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களாகக் கருதுகிறேன். ஆனால், இந்த நொடிவரையிலும் அவர் இறந்து விட்டார் என்ற உணர்வு இல்லை.
கோடான கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவராக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு அவர் பெயரை தினமும் ஒருவரேனும் உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்,” என்கிறார் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை.
ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பை கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர் சிவதாணுபிள்ளை. பத்ம, பத்ம பூஷண் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியதால் ‘பிரம்மோஸின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். தற்போது ஐ.எஸ்.ஆர்.ஓவில் மேதகு விஞ்ஞானியாக உள்ளார் சிவதாணு பிள்ளை.
இந்திய விண்வெளி ஆய்வு மையம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என இரண்டிலும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோடு இணைந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இவர், அப்துல் கலாமோடு இணைந்து இரு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் ஒன்று அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது வெளியானது. அப்துல் கலாம் உடனான தனது நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
ஜனநாயகவாதி
1970-ல் தொடங்கி, 2000 வரைக்கும் இருவரும் இணைந்து பணி செய்தோம். உடன் பணிபுரிந்தவர் என்பதைக் கடந்து, நல்ல நட்புறவு எங்களுக்குள் மலர்ந்தது. பொதுவாக விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானிகள் ஒவ்வொரு கண்டுபிடிப்பின்போதும், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்து வோம். அவர் அதில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“இதில் என்ன மாதிரியான தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது?” என அனைவர் மத்தியிலும் கேட்பார். ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்பார். அந்த வகையில் அப்துல்கலாம் மிகச் சிறந்த ஜனநாயகவாதி. இதில் ஏதாவது தவறு நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து, பேசாமல் இருப்பவர் அல்ல. வரும் முன் காக்க வேண்டும் என்று சிந்திக்கும் தீர்க்கதரிசி.
இப்படி நடைபெறும் விவாதத்தில் சீனியர், ஜூனியர் பாகுபாடு பார்க்கும் பழக்கமெல்லாம் அவருக்கு கிடையாது. ஜூனியர்கள் சொல்லும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நியாயம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். எஸ்.எல்.வி. 3 ராக்கெட் அவர் காலத்தில் வெற்றிகரமானதற்குக் காரணமே, அவரது இந்த அணுகுமுறைதான். இதை கிரியேட்டிவ் லீடர்ஷிப் ஆக பார்ப்போம். ‘அனைவருமே சுயமுடிவு எடுப்பது, தலைமை பண்புக்கு தகுதியை வளர்த்துகொள்வதற்கு உதவும்’ என்பார். எஸ்.எல்.வி 3 ராக்கெட் உருவாக்கத் தின் போதே அக்னி குறித்து அவர் கனவு கண்டார்.
நாட்டுக்கு எது முக்கியம்
தொடர்ந்து ஐ.எஸ்.ஆர்.ஓவில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு வந்தார். பொதுவாகவே ஒரு தகவலை பாதுகாப்பதை ராணுவ ரகசியம்போல் காப்பாற்றியதாகக் கூறுவார்கள். அப்படிப்பட்டது பாதுகாப்புத் துறை. அங்கே அவர் தலைமை பொறுப்புக்கு வந்தார். அவர் நினைத்த காரியங்களை செயல்படுத்தவும், முடிவு எடுக்கவும் அதிகாரமுள்ள இடம்.
ஆனால், அங்கும் ஐ.எஸ்.ஆர்.ஓவைப் போலவே ஜனநாயகத்தை அவர் மலர வைத்தார். அனைவரிடமும் கருத்து கேட்டார். அந்த வகையில் இந்திய பாதுகாப்புத் துறை விஞ்ஞானத்தில் ஒரு புதிய அத்தியாயம் அவரால் எழுதப்பட்டது.
அப்துல் கலாம் இந்தியாவின் வலிமையை
உணர்த்த அணு சக்தியை நிரூபித்துக் காட்ட முயன்றார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அதற்கான சூழல் வந்தது. பின்பு வெளிநாடுகளின் செயற்கைகோள் உதவியுடன் அதைக் கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் தள்ளிப்போனது. தொடர்ந்து வாஜ்பாய் முதல்முறை பிரதமரானதும், கலாம் இதை தெரியப்படுத்தினார். அவரும் சம்மதித்த நிலையில், இரண்டு வாரங்களுக்குள் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
மீண்டும் வெற்றி பெற்று வாஜ்பாய் பிரதமர் ஆன தருணம். அப்போது இந்தியாவை உலக அரங்கில் நிறுத்த அணுசக்தியை காட்ட விரும்பிய அப்துல் கலாமின் நாட்டுப்பற்று வாஜ்பாயை ரொம்பவும் ஈர்த்தது. திடீரென ஒரு நாள், ‘நாளை அமைச்சரவை அமைக்கிறேன். நீங்கள் ஏதாவது ஒரு துறைக்கு கேபினட் அமைச்சராகிறீர்களா?’ என்று கேட்டார். ‘நான் அமைச்சராவதைவிட நியூக்ளியர் சோதனை தானே இப்போது நாட்டுக்கு முக்கியம்’ என்றார் கலாம். வாஜ்பாயே ஆச்சரியமடைந்தார்.
மாணவர்களை நாடியவர்
இசை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். திருக்குறளை பெரிதும் மதித்தவர். திருக்குறள் எந்த சாதிக்குள்ளும், மதத்துக்குள்ளும் அடங்காத எக்காலத்துக்கும் பொருந்தும் நூல் என்பார். இருபது குறள்களுக்கு அவரே விளக்கம் எழுதி குடியரசுத் தலைவராக இருந்தபோது வைத்திருந்தார். (இது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பின்னர் தொடராக வெளியாகி, புத்தகமாகவும் வெளிவந்துள்ளது) கடந்த 1994-ம் ஆண்டிலேயே இந்தியா 2020 என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த தொடங்கியவர்.
வளர்ந்த நாடுகள் ஒன்று சேர்ந்து ஜி 7 நாடுகள் என வைத்துள்ளார்களே, அந்த நிலைக்கு சகலத் துறையிலும் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என செயல்பட்டவர் கலாம். அதற்கு அவர் தேர்ந்தெடுத்ததுதான் இளைய தலைமுறை. வேறு எந்த குடியரசுத் தலைவரும் இத்தனை மாணவர்களோடு உரையாடி இருக்க மாட்டார்கள்.” என்றார் சிவதாணு பிள்ளை.