Published : 31 Jul 2017 11:01 am

Updated : 31 Jul 2017 11:05 am

 

Published : 31 Jul 2017 11:01 AM
Last Updated : 31 Jul 2017 11:05 AM

கல்வி, கலை, விளையாட்டு என பசுமைச் சூழலில் பன்முகத் திறன்கள் வளர்ப்பு: சாதனைகளை நிகழ்த்தும் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

 

பரந்து விரிந்த விசாலமான பள்ளி வளாகம்; நூற்றுக்கணக்கான மரங்கள்; பச்சை வண்ண சுவர்களுடன் அழகான வகுப்பறைகள்; திரும்பிய பக்கமெல்லாம் கண்ணைக் கவரும் பசுமை; மிகப் பெரிய விளையாட்டு மைதானம்; ஸ்மார்ட் வகுப்பு வசதி… சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் முறையாக செல்வோருக்கு இது அரசு பள்ளிதானா என்ற சந்தேகம் எழுவது நிச்சயம்.


பாடப் புத்தகக் கல்விக்கு தரப்படும் அதே முக்கியத்துவம் விளையாட்டு கல்விக்கும் தரப்படுகிறது. கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகளப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவி பி.எம்.தபிதா 100 மீட்டர் ஓட்டப் போட்டியிலும், உயரம் தாண்டுதல் போட்டியிலும் தேசிய அளவில் சாதனை படைத்தார். மாநில, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பள்ளியின் மாணவிகள் நூற்றுக்கணக்கான பரிசுகளை அள்ளுகிறார்கள். தலைமை ஆசிரியர் அறையில் இனி வைப்பதற்கு இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு பரிசுகளும், கோப்பைகளும் நிறைந்துள்ளன.

அழகான ஓவியங்கள்

பள்ளிக் கட்டிட சுவர்களில் உள்ள அழகான சுவரோவியங்கள் பார்ப்போரை பரவசப்படுத்துகின்றன. அத்தனை ஓவியங்களும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகளின் படைப்புகள் என்பதை அறியும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் கல்வி

மண்ணையும், மரங்களையும், தண்ணீரையும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்பது மாணவிகளிடம் திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது. தங்கள் சொந்த முயற்சியில் மாணவிகள் நாற்றங்கால் உருவாக்கியுள்ளனர்.

கடந்த மாதம் உலக சுற்றுச் சூழல் தினத்தின்போது தன்னார்வ அமைப்புக்கு 2,500 மரக் கன்று களை வழங்கியுள்ளனர். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அமைக் கப்பட்டுள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகள் சத்துணவு சமைக்க வழங்கப்படுகின்றன. இவை மட்டு மின்றி இசை, நடனம், யோகா என மாணவிகளிடம் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஏராளமான பயிற்சிகள் தரப்படுகின்றன.

கடந்த ஆண்டில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 353 மாணவிகள் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். அவர்களில் 99.3 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். 475 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 450-க்கு மேல் 37 பேரும் பெற்றனர். அதேபோல் 548 மாணவிகள் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதியதில், 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். எஸ். இளவரசி என்ற மாணவி 1177 மதிப்பெண்கள் பெற்றார். கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம், வணிகவியல் ஆகிய மூன்று பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களும், பொருளாதாரத்தில் 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் இளவரசி பி.காம். சேர்ந்துள்ளார்.

அதேபோல் 1174 மதிப்பெண்கள் பெற்ற டி.அர்ச்சனா, கணிதம், உயிரியல் ஆகிய இரண்டு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில், புகழ்பெற்ற குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்ற பல மேதைகள் பயின்ற எம்.ஐ.டி. கல்லூரியில் இப்போது அர்ச்சனாவும் சேர்ந்துள்ளார்.

“காலை 8 மணிக்கு முன்பே பள்ளிக்கு வந்துவிடும் ஆசிரியர்கள், 5 மணிக்குப் பிறகும் ஆர்வத்துடன் வகுப்பெடுப்பார்கள். விடுமுறை நாட்களிலும்கூட ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்துவார்கள். ஆசிரியர்களின் இந்த ஈடுபாடும், கடின உழைப்பும்தான் எங்கள் வெற்றிக்கு காரணம். குறிப்பாக ஒவ்வொரு மாணவி நலனிலும் தலைமை ஆசிரியர் செலுத்தும் அக்கறையால் பள்ளி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சேவை அமைப்பின் மூலம் எங்களைப் போன்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார்” என்கின்றனர் அந்த மாணவிகள்.

smartjpg100

சென்னை விருகம்பாக்கத்தில் பசுமையாக காணப்படும் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம். | பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறை. படங்கள்: க. ஸ்ரீபரத்.

3 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக முனைவர் ஷஷி சுவரன்சிங் பொறுப்பேற்றார். அவரது பல்வேறு தொடர் முயற்சிகளின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

பள்ளியை மேம்படுத்திய விதம் பற்றி அவர் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளியில் பொறுப்பேற்ற போது போதிய வகுப்பறைகள் கிடை யாது. மாணவிகள் மரத்தடியில் படிக்க வேண்டிய நிலை. பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே முதல் பணி என தீர்மானித்தேன்.

பலகட்ட முயற்சிகளின் பலனாக 17 புதிய வகுப்பறைகள் கிடைத்தன. எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட நிதியில் 13 வகுப்பறைகளும், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் நிதியுதவியில் 4 வகுப்பறைகளும் கட்டப் பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள், சேவை சங்கங்களின் உதவியால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிவறை வசதிகளை உருவாக்கினோம். அழகான பச்சை வண்ணத்தில் சுவர்களை பளிச்சிட செய்தோம். ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. மூலிகை பூங்கா உருவாக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகள் அதிகம் நடத்தினோம்.

மாணவிகளிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் ஏராளமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், திரைப்படக் கலைஞர்களை அழைத்து வந்து பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஓவியம், நடனம், யோகா, தியானம் என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்தோம். அத்தனை முயற்சிகளுக்கும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் உடனிருந்ததால்தான் வெற்றி பெற முடிந்தது. எங்களின் தேவையை உணர்ந்து தேவையான வசதிகளை தமிழக அரசு அதிகாரிகளும், சேவை சங்க நிர்வாகிகளும் உடனுக்குடன் செய்து கொடுத்ததால் பள்ளியின் தோற்றத்தில் புதிய பொலிவை உருவாக் கியுள்ளோம். இதனால் தற்போது ஆண் டுக்கு ஆண்டு பள்ளியில் பயிலும் மாணவி களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இவ்வாறு பள்ளி வளர்ந்த கதையை சொல்லிக் கொண்டே போகிறார் ஷஷி.

மாணவிகளிடத்தில் பன்முகத் திறன்களை வளர்க்கும் இந்தப் பள்ளியில் தற்போது 2,822 பேர் படிக்கின்றனர். 85 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டின் முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் ஒன்றான சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த பள்ளி மேலும் பல சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கிறது.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 98844 93639.

 


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author