Published : 27 Jul 2017 15:28 pm

Updated : 27 Jul 2017 15:58 pm

 

Published : 27 Jul 2017 03:28 PM
Last Updated : 27 Jul 2017 03:58 PM

கலாம் நினைவு: முப்பாட்டன் தொடங்கி முதல் மரியாதை!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய ‘எனது பயணம்' என்னும் நூலில் தமது குடும்பத்தினருக்கு  ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் கிடைத்த முதல் மரியாதை பற்றி எழுதியுள்ளார்.

‘எனது பயணம்' நூலில் கலாம் எழுதியி ருப்பதாவது, ‘‘எங்கள் ஊரின் சிறிய மக்கள் தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர் களும் கிறித்துவர்களும் குறைவான எண் ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

குளத்தில் விழுந்த சிலை

ஒரு குறிப்பிட்ட திருவிழா நாளன்று, ராமநாதசுவாமி விக்கிரகம் கருவறையை விட்டு வெளியே எடுக்கப்பட்டு, ஊரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்படும். கோயிலைச் சுற்றிலும் பல குளங்கள் இருந்தன. கோயில் சிலை இந்தக் குளங்களைச் சுற்றியும் ஊர்வல மாகக் கொண்டு செல்லப்படும். அப்படிப்பட்ட ஓர் ஊர்வலத்தின்போது, சுவாமி விக்கிரகம் திடீரென்று குளத்துக்குள் விழுந்துவிட்டது.

சிலை குளத்துக்குள் விழுவதற்கு முன்பு கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்தடுத்துப் பல விஷயங்கள் நடந்துவிட்டிருந்ததால், துல்லியமாக என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் இப்போது தெளிவாக நினைவி ருக்கவில்லை. ஒரு பெரும் குழப்பம் உருவா னது. கடவுள்களின் சீற்றத்துக்கு விரைவில் தாங்கள் ஆளாகப் போவதாகக் கற்பனை செய்தபடி மக்கள் பீதியோடு அசைவின்றி நின்றனர்.

ஆனால் அக்கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் நிதானமாக இருந்து சமயோசிதமாகச் செயல்பட்டார். எனது முப்பாட்டனார்தான் அவர். அக்குளத் துக்குள் அவர் குதித்து, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அச்சிலையை மீட்டுக் கொண்டு வந்தார்.

பாட்டனாருக்கு முதல் மரியாதை

அது குறித்து அக்கோயில் அர்ச்சகர்களும் கோயிலின் மற்ற அதிகாரிகளும் பெரிதும் நன்றியுடையவர்களாக இருந்தனர். அவர் ஓர் இஸ்லாமியர் என்பது உண்மைதான். கோயிலின் மிகப் புனிதமான விக்கிரகம், அதைக் கையாள்வதற்கு அனுமதிக்கப்படாத ஒருவரால் தொட்டுக் கையாளப்பட்டது குறித்து சாதி மற்றும் மதத் தூய்மைவாதிகள் பெரும் அதிர்ச்சியடைவார்கள் என்றாலும், இத்தகைய எந்த உணர்வுகளும் அங்கு வெளிப்படுத்தப்படவில்லை.

dadjpgகலாமின் தந்தை

மாறாக, என முப்பாட்டனை அவர்கள் ஒரு கதாநாயகனைப் போல நடத்தினர். இனிமேல் அந்தத் திருவிழாவின்போது, கோயிலின் முதல் மரியாதை அவருக்குத்தான் கொடுக்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் பிரகடனம் செய்தனர்.

முற்றிலும் வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு மட்டுமன்றி, எவரொருவருக்கும் அரிதாகவே வழங்கப்படுகின்ற ஒரு மாபெரும் கௌரவம் இது. அதன்படி, ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்டத் திருவிழா நாளன்று, அக்கோயில் என் முப்பாட்டனுக்குத் தொடர்ந்து முதல் மரியாதை கொடுத்து வந்தது.

இந்த சம்பிரதாயம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. பின்னாளில் என் தந்தைக்கும் அந்த மரியாதை கொடுக்கப்பட்டது. இவ்வாறு கலாம் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் மோட்ச தீபம்

இந்நிலையில் பேக்கரும்பில் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்று (30.7.2015) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உயிர் விடுதலை பெற்று  வானுலகம் சென்று  நல்ல கதி கிடைப் பதற்காக ராமநாதசுவாமி கோயில் சார்பாக கோயிலின் நான்கு ரதவீதிகளில் கலாம் உருவ படத்தைக் ஊர்வலமாக எடுத்துச் சென்று ராமநாதசுவாமி கீழவாசலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கலாமின் முன்னோர்களுக்கு கிடைத்த முதல் மரியாதை கலாமின் மறைவுக்குப் பின்னர் மோட்ச தீபம் மூலம் கிடைத்திருப்பது ராமேசுவரம் தீவு மக்களை அன்று நெகிழ வைத்தது.

எனது பயணம் நூல்அப்துல் கலாம் நூல்ராமநாதசுவாமி கோயில்கலாம் குடும்பம்குளத்தில் விழுந்த சிலைகோயில் மரியாதைகோயில் மோட்ச தீபம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author