Last Updated : 14 Jul, 2017 10:43 AM

Published : 14 Jul 2017 10:43 AM
Last Updated : 14 Jul 2017 10:43 AM

மவுசு குறையாத மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதலாவது கருவாட்டுச் சந்தை மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை. நூற்றாண்டு கண்ட இச்சந்தை இன்னமும் தன் இயல்பைத் தொலைக்காமல் கருவாட்டுப் பிரியர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கிறது.

வற்றலும் வடகமும் மேல்தட்டு மக்களுக்கு எப்படியோ அதுபோல கஞ்சியும் கருவாடும் உடல் உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழன். சுட்டுப்போட்ட ஒரு கருவாடு இருந்தால் போதும், கவளம் கவளமாக உள்ளே போகும் பழைய சோறு. ஆனால், இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் ‘கருவாடு’ என்று சொன்னால் கூகுளைத் தேடுவார்கள். அந்தளவுக்குக் கருவாட்டுத் தேடல் இப்போது குறைந்துவிட்டது. என்றாலும், மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு இன்னும் மவுசு குறையவில்லை.

நூறு வருடங்களுக்கு முன் தொடக்கம்

135 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்ட கடற் கரையைக் கொண்டது நாகை மாவட்டம். இங்கே, பழையாறு, திருமுல்லைவாசல், தென்னாம் பட்டினம், கோணயாம்பட்டினம், வாணகிரி, பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம், செருதூர், வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், கோடியக்கரை என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தளங்கள் உள்ளன. மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு வரும் பெரும்பகுதி கருவாடுகளின் காய்ச்சல் தளமும் இவைதான்.

கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கிறது மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை. அனைத்து மீனவர்களுக்கும் பொது வான ஒரு இடமாகவும் வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நூறு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் இந்தச் சந்தையைத் தொடங்கி யிருக்கிறார்கள்.

ரூ.5 லட்சத்துக்கு வியாபாரம்

ரயிலடிக்கு பக்கத்திலேயே சித்தர்காட்டில் அமைந்திருக்கும் இந்தச் சந்தை ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் மட்டுமே கூடுகிறது. அன்று மட்டும் சர்வசாதாரணமாய் ஐயாயிரம் பேர் இந்தச் சந்தையைக் கடக்கிறார்கள்; சுமார் 5 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.சனிக்கிழமை பின் னிரவு இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கி விடும் என்பதால் சனிக்கிழமை மாலையே வியாபாரிகள் இங்கு வந்துவிடுகிறார்கள்.


மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங் களைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரிகள் இங்கு வியாபாரத்துக்கு வருகிறார்கள். கோவை, கருர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருவாட்டுக் கொள்முதலுக்காக இங்கு குவிகிறார்கள். இரண்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை ஆறு மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெரிய வியாபாரிகள் மூட்டையைக் கட்டிவிடுகிறார்கள்.

அடுத்தகட்ட சிறு வியாபாரிகள் காலை ஐந்து மணிக்கு கடை விரித்து காலை பத்து மணிவரை முட்டி மோதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வாடிக்கையாளர்கள் இருப்பதால் பேரம் பேசி இழுத்துக் கொண்டிருக்காமல் நிமிடங்களில் கருவாட்டை விற்றுக் காசை எண்ணுகிறார்கள். இதற்குப் பிறகுதான் சில்லறை வியாபாரம். மாலை வரைக்கும் சில்லறை வர்த்தகம் களைகட்டுகிறது இங்கே!

அத்தனை வகைகளும் உண்டு

நெத்திலியில் ஆரம்பித்து வாளை, கொண்டா, கெழுத்தி, வஞ்சிரம் என அனைத்துவகைக் கடுவாடுகளையும் இங்கே தேடிப் பிடிக்கலாம். பாறை, வாளை உள்ளிட்ட கருவாடுகள் கிலோ ரூபாய் நூறுக்கும் மற்ற இடங்களில் காஸ்ட்லி யாக விற்கப்படும் வஞ்சிரம் கிலோ 150 ரூபாய்க் கும் இங்கு சில்லறை வியாபாரத்திலேயே கிடைக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கருவாடு வியாபாரம் பார்க்கிறார் ஜெகதாபட்டினம் ரங்கத்தார். இங்குள்ள கருவாடு வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான இவர், ‘‘அஞ்சு வயசுப் பையனா இருக்கும் போதிருந்தே எங்கம்மாகூட இந்த சந்தைக்கு வந்துட்டுருக்கேன். எங்கம்மா சின்னப் புள்ளையா இருந்தப்ப அவங்க அம்மா கூட வருவாங்களாம். அப்பட்டின்னா இந்த சந்தை 150 வருசத்துக்கு முன்னாடியே வந்து ருக்கணும்.

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமே சேர்த்து அப்ப இதுதான் பெரிய சந்தையா இருந்திருக்கு. இலங்கை, கேரளாவுல இருந்தெல்லாம் வியாபாரிங்க வந்து இங்க தங்கியிருந்து கருவாடு வாங்கிட்டுப் போயிருக்காங்க. இந்தச் சந்தையால மாயவரத்துக்கும் பேரு. முன்ன இந்த சந்தை முழுக்க, குவியல் குவியலா கருவாட்டை பட்டறை போட்டு வெச்சு விற்பாங்க. இப்ப, பல இடங்கள்ல சந்தை வந்துட்டதால வரத்துக் கொஞ்சம் குறைஞ்சிருச்சு. ஆனாலும் தலைமுறை தலைமுறையா இங்க வந்து வியாபாரம் பார்க்குறவங்களுக்கும் இருக்கத்தான் செய்யுறாங்க” என்கிறார்.

அடிப்படை வசதிகள் இல்லை

சந்தைகூடும் இடமானது அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அவர்களால் ஆண்டுக் குத்தகைக்கு விடப்படுகிறது. இங்கே சந்தை நடத்த நகராட்சிக்கும் தனியாக வரி செலுத்த வேண்டும். அறநிலையத் துறையும் நகராட்சியும் இதையெல்லாம் கணக்குப் போட்டு வசூலித்துக் கொண்டாலும் சந்தைக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க வில்லை.

அதுகுறித்துப் பேசினார் நாகையைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரி தாமரைச்செல்வி. “கருவாட்டை எடுத்துக்கிட்டு ராத்திரியே இங்கே வந்துடுறோம். ஆனா, இங்க தங்குறதுக்கு எந்த வசதியும் இல்ல. ரயில்வே ஸ்டேஷன்லதான் படுத்துக்க வேண்டியிருக்கு. வியாபாரிங்க முதல் நாள் ராத்திரி வந்து மறுநாள் சாயந்தரம்தான் வீட்டுக்குப் போறோம். அதுக்கு நடுவுல அவசர ஆத்தரத்துக்கு ஒதுங்கக்கூட இடமில்லாம படாதபாடு பட்டுப்போறோம்யா.” என்கிறார்.

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட மயிலாடு துறை கருவாட்டுச் சந்தையில் கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். பொறுமையாக கேட்டவர், “சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் சந்தையைப் பார்வையிட்டு, தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

சீக்கிரம் எடுங்க சார்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x