Published : 31 Jul 2017 10:37 am

Updated : 31 Jul 2017 10:40 am

 

Published : 31 Jul 2017 10:37 AM
Last Updated : 31 Jul 2017 10:40 AM

இப்படிக்கு இவர்கள்: மன்னிப்பே அற்ற புறக்கணிப்பு

மன்னிப்பே அற்ற புறக்கணிப்பு

ல ஆண்டுகளாகச் சமுதாயத்தின் கடைக்கோடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகத்தை, எஸ்.சி.நடராஜ் எழுதிய, ‘பழங்குடியினர் குழந்தைகள் மீது ஏன் இந்த பாரபட்சம்’ கட்டுரை (ஜூலை - 26) படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்த அவலத்துக்குத் தீர்வு வேண்டி, ஒரு மலைப் பகுதியில் மக்கள், குறிப்பாக அந்தப் பள்ளிகளின் பாவப்பட்ட குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் ஒன்று திரண்டுள்ளனர் என்று கேள்விப்பட்டு, அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவியர் ஒவ்வொருவராக என்னிடம் பேசினர். ‘எங்க ஊரிலல்லாம் 11-12 வயசுல பொம்பளப் பிள்ளைங்களுக்குக் கல்யாணம் பண்ணிடுவாங்க. ஊருல சண்டை போட்டு ஸ்கூலுக்கு 4-5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வர்றோம். ஆனா, இங்க எங்களுக்கு டீச்சர்களே இல்ல. நாங்களா எதோ படிக்கறோம். ஒரே ஒரு டீச்சரும் ரெண்டு மணி நேரம்தான் இருப்பாங்க. எல்லா கிளாஸுக்கும் அவங்கதான் சொல்லித் தரணும். எங்களுக்கு ஆசிரியர்கள் போடச் சொல்லுங்கம்மா’ என்று அந்தக் குழந்தைகள் பரிதாபமாகக் கெஞ்சியது என் மனதை விட்டு ஒருபோதும் நீங்காது. கட்டுரையாளர் சொல்வது போல், உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆசிரியர்களே அற்ற அற்புதங்கள். உயர் நிலை - மேல்நிலைப் பள்ளிகளில் 30 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பெண் குழந்தைகளுக்கு உறைவிட வசதி இல்லை. சமையல்காரரைத் தவிர, உறைவிடங்களை நிர்வகிப்பதற்கு எவரும் இல்லை. ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளிகள், வருவாய்த் துறையினால் நிர்வகிக்கப்படுகின்றன. கல்விக்கு எந்தத் தொடர்புமே அற்ற வருவாய்த் துறை பள்ளிகளை நிர்வகிக்கும் அதிசயம் இங்கு மட்டுமே காண முடியும். முதலில் செய்ய வேண்டிய மாற்றம் எஸ்.ஸி. எஸ்.டி பள்ளிகள் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தேவையான ஆசிரியர்கள், வகுப்புக்கு ஒருவர், பாடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் கல்வி உரிமைச் சட்டம் விதிக்கும் கல்வி மேம்பாட்டுக் குழு, பெற்றோர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரைக் கொண்டு, இன்று போல் பெயருக்கு இல்லாமல், உண்மையாகவே அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட்டு, பள்ளிகள் அவற்றால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆசிரியரின் குறித்த நேர வரவை உறுதிப்படுத்தும் கைரேகைப் பதிவு முறையை இப்பள்ளிகளில் நிறுவ வேண்டும். இத்தனை காலங்களின் பொறுப்பற்ற புறக்கணிப்புக்கு ஈடுசெய்யும் வண்ணம் இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

- வே.வசந்திதேவி, கல்வியாளர்.

எம்ஜிஆர்: குமரனின் குமரன்!

ம்ஜிஆருக்குத் திருப்பம் தந்த திருப்பூர் கட்டுரை (23.07.17) படித்தேன். எம்ஜிஆருக்கும் திருப்பூருக்குமான தொடர்புகள் பின்னிப்படர்ந்தவை. திருப்பூர் குமரன் மனைவிக்கு எம்ஜிஆர் செய்த உதவி, அவரின் இயல்பான வெளிப்பாடு. சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆரைச் சிறப்பிக்கும் விழா ஒன்றில் பேசிய திருப்பூர் கிருஷ்ணனின் பேச்சிலிருந்து ஒரு பகுதி.. திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர், ‘‘சென்னையில் எனக்கொரு மகன் இருக்கிறார். அவர்தான் எம்ஜிஆர்’’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு நாள் எம்ஜிஆர் அவரது வீட்டுக்குச் சென்று, ‘‘நான் எம்ஜி.ராமச்சந்திரன். என்னை உங்கள் மகனாகப் பாவித்து, இந்த 25 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று கொடுத்திருக்கிறார். மேலும், அந்த அம்மையாருக்கு மத்திய - மாநில அரசு ஓய்வூதியங்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்தவர் எம்ஜிஆர்.

- எஸ்.ராஜகணேஷ், தலைஞாயிறு.

வடிகட்டல் கூடாது

ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் வடிகட்டல் கொணரப்போவதான அறிவிப்பு மிகப் பிற்போக்குத்தனமானது. தண்டனை, வடிகட்டல் ஆகியவை மாணவரிடம் அச்சத்தை உருவாக்கி, படிப்பில் அதிக கவனம் செலுத்துவர் என்ற நம்பிக்கையே இம்முடிவுக்குக் காரணம். தேர்வுகளின் ஆதிக்கம் இல்லாத, அச்சம் தவிர்த்த வகுப்பறையே இளம் வயதினரின் கல்விக்கு உதவும். சொந்தக் குடிசைகூட இல்லாமல், வீட்டில் கற்கும் சூழல் இல்லாத மாணவரது கற்றல் வேகம் குறைவாகவே இருக்கும். ஆனால், எட்டு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்துவிடுவார் என்ற அடிப்படையில்தான், முதல் எட்டு ஆண்டுகளில் வடிகட்டல் கூடாது என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகின்றது. பல கல்விக் குழுக்களும் 10-ம் வகுப்பு வரை வடிகட்டல் கூடாதென்றும் பரிந்துரைத்துள்ளன.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author