Published : 13 Jul 2017 10:52 AM
Last Updated : 13 Jul 2017 10:52 AM

நல்லது சொல்லும் நகரத்தார் படைப்பு வீடு

‘ஆறேழு தலைமுறைக்கு முந்தி எங்க வீட்டுப் பொண்ணு ஒருத்தி தலப் பிரசவத் துக்காக ஆம்பளையாம் வீட்டுலருந்து வந்தாளாம். வர்ற வழியில இடி இடிச்சு தாயும் புள்ளயும் தவறிப் (இறந்து) போனாகலாம். சாமி யோட சாமியா இருக்குற அவுகளுக்காகத்தான் படைப்புப் போடுறோம்.’ - செட்டிநாட்டுப் பக்கம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் (நகரத்தார்) வீடு களில் கட்டாயம் இப்படியொரு கதை இருக்கும்.

வாழும் காலத்திலேயே உறவுகளை உதாசீனப்படுத்தி விடும் காலம் இது. எதிர்காலத்தில் இப்படியெல்லாம் வரும் என்று நினைத்துத்தானோ என்னவோ ஆறேழு தலைமுறைக்கு முன்பே, ஆண்டுக்கு ஒருமுறை முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் நகரத்தார்கள். இதற்காக உருவானது தான் படைப்பு வீடு.

நகரத்தார் குடித்தனங்கள்

நகரத்தார் சமூகத்தில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் பிள்ளைக்கு திருமணமானால் ‘வேறு வைத்து’ (தனிக் குடித்தனம்) விடுவார்கள். இந்த வழக்கத்தால் செட்டிநாட்டின் மாளிகை வீடுகளில் ஒரு வீட்டுக்குள்ளேயே பல குடித்தனங்கள் இருப்பதை இன்றைக்கும் பார்க்கமுடியும். தொழில் நிமித்தமாக வெளியூர்களில் செட்டிலானவர்கள், பிறந்த வீட்டில் தங்களுக்கான பங்குப் பகுதியை பூட்டி வைத்திருப்பார்கள். நல்ல நாள் பெரிய நாளுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து போவார்கள்.

முன்னோரை நினைத்து..

எந்த ஊரில் இருந்தாலும், வாழ்ந்து செழித்த முன்னோர்களை வருங்கால சந்ததிகள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே நகரத்தார் இல்லங்களில் ஆண்டுக்கு ஒருமுறை ‘படைப்பு’ போடுகிறார்கள். ஒரு வீட்டில் படைப்பு என்றால் அந்தக் குடும்பத்தின் அத்தனை கிளைகளும் எந்த தேசத்தில் இருந்தாலும் தவறாமல் ஆஜராகி விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பனை நார் பேழை (இப்போது வயர் கூடையாகிவிட்டது) ஒன்று இருக்கும். அதனுள்ளே முந்தைய ஆண்டு முன்னோருக்கு வைத்துப் படைத்த துணிமணிகள் இருக்கும்.

படைப்பு நாளில் அந்த வீட்டின் ஆண்கள் இந்தப் பேழையை எடுத்துக் கொண்டு அந்த ஊரின் நல்ல தண்ணீர் ஊருணிக்கு செல்வார்கள். அங்கே, முன்னோர்களின் துணிமணிகளை துவைத்து அங்கேயே காய வைத்து மடித்து பேழையில் வைத்து எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார்கள். அந்த வருட படையலுக்காக எடுத்திருக்கும் புதுத் துணிகளையும் ஊருணியில் நனைத்துச் செல்வதுண்டு.

பணியாரமும் பால் சோறும்

மாலையில், கருப்பட்டி பணியாரம் சுட்டு, பால் சோறும் வடையும் வைத்து முன்னோருக்கு படையல் தயாராகும். வாழைக்காயும் கத்தரிக்காயும் படையலில் கட்டாயம் இருக்கும். இத்துடன் தங்களுக்குப் பிடித்தமான பதார்த்தங்கள், வேட்டி - சேலை, உள்ளிட்டவைகளை அந்தக் குடும்பத்தின் வாழும் தலைமுறை பிள்ளைகள் வாங்கி வைப்பதுண்டு. பிள்ளைகளுக்கு படிப்பு வரவேண்டும் என்பதற்காக நோட்டுப் புத்தகங்களையும் வாங்கி வைக்கிறார்கள்.

3 அல்லது 5 இலையில் படையல் போடு கிறார்கள். பூஜை முடிந்ததும் இந்த இலைகளில் யார் சாப்பிடுவது என்பதிலும் ஒரு கணக்கு இருக்கும். ஒரு இலையை படைப்பு வீட்டாருக்கு ஒதுக்கிவிட்டு மீதி இலைகளில் யார் யார் சாப்பிடப் போகிறோம் என்பதை முன்கூட்டிய தங்களுக்குள் பேசிவைத்துக் கொள்கிறார்கள் கட்டுச் செட்டான செட்டிமார்கள்.

வழித்துணைக்கு நீர்சோறு

படையல் முடிந்ததும் இரவுச் சாப்பாடு. பெரும்பாலும் அரிசிச் சோறுதான். அனைவரும் சாப்பிட்டது போக மிஞ்சும் சோற்றை அப்படியே தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். மறுநாள் காலையில் அனைவருக்கும் அந்த நீர் சோறுதான் பசியாற்றி. கார், வண்டி இல்லாத அந்தக் காலத்தில் வழித்துணைக்கு நீர் சோற்றைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்களாம். ஆனால் இப்போது, நாகரிகம் பெருத்துவிட்டதால் இந்த வழக்கமெல்லாம் மாறி எல்லாம் பலகாரம் மயமாகிவிட்டது.

நெகிழும் உறவுகள்

எந்தக் கட்டத்திலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்காத நகரத்தார்கள், சிறு விஷயத்துக்கும் மனத்தாபம் கொள்வார்கள். படைப்பு வீடுகளில் அனைவரும் ஒன்றுகூடும்போது இந்த மனத்தாபங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்துபோய் விடுகிறது. ‘அம்மான், அயித்தே, ஆச்சி, பெரியப்சி, சின்னப்சி’ என்று உறவுகளை நேரில் பார்த்ததும் நெகிழ்ந்துவிடும் இவர்கள், யாருக்காக இங்கே வந்திருக்கிறோம் என்பதை வளரும் பிள்ளைகளுக்குப் படைப்பு வீட்டில் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார்கள். வளர்ந்த பிள்ளைகள், ‘ஃபேமிலி ட்ரீ’ வரைந்து, வளரும் பிள்ளைகளுக்கு குடும்பத்தின் பாரம்பரியம் படிக்கிறார்கள்.

ஒதுங்கி நின்ற உறவுகளோடு படைப்பு வீட்டில் ஒன்றாய் கலந்து பேசிவிட்டுக் கலையும் போது தங்களையும் அறியாமல் கண்கலங்கிப் போகிறார்கள் ஆச்சிமார்கள். பிரியாவிடைக்கு முன்பாக, படைப்பு வீட்டில் மீந்து போகும் உப்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களையும் முன்னோர்களுக்காக வாங்கிப் படைத்த இதர துணிமணிகளையும் மறக்காமல் ஏலம் போடுகிறார்கள். வீட்டில் வாங்கி வைத்தால் குடும்பம் செழிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் இவற்றை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும். ஒரு கிலோ உப்பு 25 ஆயிரம் ரூபாய்க்குக்கூட ஏலம் போவதுண்டு.

படைப்பு முடிந்ததும் முன்னோருக்காக படைக்கப்பட்ட வேட்டி - சேலையை மீண்டும் நார் பேழையில் வைத்து பூஜை அறையில் வைத்துவிடுகிறார்கள். வருடப் படைப்பு தவிர, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்குத் திருமணம் என்றால், குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணத்துக்கு முதல் நாளும், தீர்த்தம் கொடுப்பதற்கு (வளைகாப்பு) முன்னரும் முன்னோருக்கு படைப்புப் போடுவதுண்டு.

படைப்புக்கு தனி வீடு

“முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு படைப்பு போட்டாங்க. ஆனா, ஒருகாலத்துல அரண்மனை கட்டி வாழ்ந்த நகரத்தார் குடிகளில் பலருக்கு இப்ப சொந்த ஊரில் வீடுவாசல் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பெரிய வீடா இருக்காது. இதனால, பங்காளிகள் சேர்ந்து பொது இடத்தில் படைப்பு வீடு கட்டிக்கிறாங்க. அந்தக் கிளையில் யார் படைப்புப் போட்டாலும் அங்குதான் போடுவாங்க. படைப்பு முடிஞ்சதும் அடுத்த வருசம் படைப்புப் போடுறவங்கட்ட பேழையையும் கணக்கு - வழக்குகளையும் ஒப்படைச்சுருவாங்க.

படைப்பு இல்லாத நாட்கள்ல திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு படைப்பு வீட்டை வாடகைக்கு விட்டு வருமானத்தைப் படைப்பு வீட்டு பராமரிப்புக்கு வெச்சுக்கிறாங்க.’’ என்று சொல்லும் நகரத்தாரியல் ஆய்வாளர் பேராசிரியை வள்ளி சொக்கலிங்கம், ‘‘பெரும்பாலும் பொதுப் படைப்பு போடுறவங்க, ‘செட்டியய்யா படைப்பு, மெய்யாத்தாள் படைப்பு’ என்று தான் சொல்றாங்க. சிலபேர் கருப்பர் படைப்புன்னும் போடுறதுண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேருல படைப்புப் போட்டாலும் அனைத்திலுமே போற்றப்படு வது முன்னோர்கள்தான்’’ என்கிறார்.

நகரத்தார்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது - முன்னோரை மறக்காமல் நினைத்துப் போற்றும் இந்த மாண்பையும் சேர்த்துத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x