Last Updated : 05 Jul, 2017 08:30 AM

 

Published : 05 Jul 2017 08:30 AM
Last Updated : 05 Jul 2017 08:30 AM

வயலுக்குள் முளைக்கும் டாஸ்மாக் க(டை)ளைகள்

விளை நிலங்களை வீட்டுமனைகளாகத் தானே மாற்றக் கூடாது.. அங்கே, மதிமயக்கும் மதுபானக் கடைகளைத் திறந்தால்..? தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் இப்போது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

மதுபானக் கடைகளுக்கு எதிரான மக்களின் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிதாகவோ பதிலி யாகவோ டாஸ்மாக் மதுபானக் கடை களை திறக்கமுடியவில்லை; மீறித் திறந் தால் அடியும் உதையும் சேர்ந்தே விழு கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டி ருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

கட்டிடம் எழுப்பி.. கடைகளை திறந்து..

இந்த நிலையில், தமிழகத்தின் பெரு வாரியான இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாக வயல்களில் புதிதாக கட்டிடம் கட்டி மதுபானக் கடை களை திறந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, காய்ந்து கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இப்படி வயல்களில் மதுபானக் கடைகளை திறப்பது அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் குடியிருப்புகளைவிட நிலப்பரப்பு பலமடங்கு அதிகம் என்பதால் விளை நிலங்களின் உரிமையாளர்களை சரிக்கட்டி சின்னதாய் ஒரு கட்டிடம் எழுப்பி, அதில் கடைகளை திறக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். இது, ஏற்கெனவே காவிரி தண்ணீர் கிடைக்காமல் கட்டாந்தரைகளாய் வறண்டு கிடக்கும் வயல்வெளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வேலை என புலம்புகிறார்கள் சம்சாரிகள்.

கதிராமங்கலம் ‘கஸ்டமர் சேவை’

பிரசித்திபெற்ற வழிபாட்டுத்தலமான வைத்தீஸ்வரன் கோயில் நகரில் இருந்த டாஸ்மாக் கடைகள் இரண்டும் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் அடுத் தடுத்து மூடப்பட்டுவிட்டன. இதனால், ’குடிமக்களுக்கு’ ஏற்பட்ட சிரமம் தவிர்க்க(!) அருகில் உள்ள கதிராமங்கலத்தில் வயல் வெளியில் கடையைத் திறந்து ’கஸ்டமர் சேவை’யைத் தொடங்கியது டாஸ்மாக்!

இந்தக் கடைக்கு வலதுபுறம் இப்போது, குறுவைச் சாகுபடிகான நடவு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நடப்பட்ட இடதுபுறத்து வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் கசிந்தோடிக் கொண்டிருக்கும் வரப்பைக் கடந்து டாஸ்மாக்கில் சரக்கு வாங்க மதியம் 12 மணிக்கே நூறு பேருக்கு மேல் இங்கே வரிசைகட்டி நிற்கிறார்கள். சர்வ சுதந்திரமாய் வயலில் வேலைபார்த்துப் பழகிப்போன பெண்கள் இப்போது, குடிகாரர்கள் குறுக்கும் நெடுக்குமாக போடும் கோலத்தைப் பார்த்து கதிகலங்கிக் கிடக்கிறார்கள்.

இதேபோல், சீர்காழியில் இருந்த ஏழு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் நாகப்பட்டினம் சாலையில் தென்னலக்குடி என்ற ஊரில் பருத்தி வயல்களுக்கு இடையே டாஸ்மாக் கடையை பதியன் போட்டுவிட்டார்கள். சாலையில் இருந்து பார்த்தாலே ஜோராய் தெரியும்படி (யாரும் விலாசம் தெரியாம தடுமாறிடக் கூடாதுல்ல..!) இந்தக் கடையைத் திறந்தி ருக்கிறார்கள்.

ஊருக்குள் புதிதாக டாஸ்மாக் கடை களை திறக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பொதுமக்கள், இப்படி வயல் வெளிகளில் முளைக்கும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பெரிய அளவில் இன்னமும் கொந்தளிக்கவில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு வயல்களை வளைத்து வேக வேகமாக கடைகளை திறந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தை அவமதிக்கும் செயல்

இதுகுறித்துப் பேசிய பாமக-வின் மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி, ‘‘விளைச்சல் வயல்களில் மதுக்கடைகளை திறப்பது விவசாயத்தை அவமதிக்கும் செயல். வயல்வெளி மதுக்கடைகளில் மதுவை வாங்கு பவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மற்ற வயல்களிலும் சுதந்திரமாக உட்கார்ந்து மது அருந்துவார்கள். இவர்கள் பாட்டில்களை உடைத்து கண்டபடி வயல் களில் போடுவார்கள். இதனால், இனி யாருமே அந்த வயலில் கால்பதிக்க முடியாது. காலியாகி வீசப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள் நிலத்தை மலடாக்கி நிலத்தடி நீரையும் அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இதனால், மதுக் கடைகள் அமைந்தி ருக்கும் வயல்களைச் சுற்றியுள்ள 10, 15 ஏக்கர் வரைக்கும் இனிமேல் சாகுபடி செய்யமுடியாது.

மதுக்கடைக்காக எங்கே புதிய கட்டிடம் கட்ட தலைப்பட்டாலும் அதுகுறித்து தாசில் தார், கோட்டாட்சியரிடம் நாங்கள் மனு கொடுத்து விடுகிறோம். அதன்பிறகுதான் அவர்களுக்கே அங்கு கடை வரப்போகும் விவரம் தெரியவருகிறது. அதன் பிறகும் மதுக்கடை அமைந்தால் மக்களை திரட்டிப் போராட்டம் நடத்துகிறோம். ஆனால், அதையும் மீறி கடைகளைத் திறக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இப்போது, வயல்களை நாசப்படுத்தக் கிளம்பி இருக்கிறது. இதைத் தடுக்க விரைவில் போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால் இதற்காகவும் நீதிமன்றத்தில் தனியாக வழக்குத் தொடுப்போம்.’’ என்றார்.

அங்கு தான் இடம் கிடைக்கிறது

வயல்களில் மதுபானக் கடைகளை திறப்பது சரிதானா? என்று நாகை மாவட்ட டாஸ்மாக் பொதுமேலாளர் பால கிருஷ்ணனிடம் கேட்டோம். ’’பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங் களுக்கு அருகே மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்பது விதி. இதைப் ஸ்டிரிக்டாக பின்பற்றும்போது ஊருக்கு வெளியில் தான் கடைகளை திறக்க வேண்டி இருக்கிறது. அங்குமட்டுமே நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் உரிமையாளர்களிடம் எளிதில் அனுமதி கிடைக்கிறது. அதனால் தான் ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை’’ என்று சொன்னார் அவர்.

விவசாயம் பொய்த்துப்போன வேதனை யோடு இந்த வலியும் சேர்ந்தால்.. பாவம், என்னதான் செய்வான் பரிதாபத்துக்குரிய தமிழக விவசாயி?

நாங்கள் என்ன செய்வது? - டாஸ்மாக் ஊழியர்கள்

சீர்காழி அருகே கொண்டல் என்ற இடத்தில் வயல்வெளியில் பள்ளிக்கூடம் அருகே கடைதிறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டம் நடத்தியது. இதற்கு போட்டியாக, ’மது அருந்துவோர் நலச்சங்கம்’ என்ற பெயரில், மதுக்கடை திறப்பதற்கு நன்றி தெரிவித்து நோட்டீஸ் விநியோகித்தது ஒரு குழு. இந்த ’நன்றி’ டிராமாவை பின்னிருந்து இயக்கியது டாஸ்மாக் ஊழியர்கள் என்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய டாஸ்மாக் பணியாளர்கள் சிலர், ’’நாங்கள் என்ன செய்வது? கடையை எப்படியாவது திறக்க வேண்டும் என அதிகாரிகள் எங்களுக்குத்தான் அழுத்தம் கொடுக்கிறார்கள். வேறு வழியில்லாமல், மதுக்கடைக்கு நாங்கள் தான் இடம் பார்க்க வேண்டி இருக்கிறது. நிலத்து உரிமையாளர்களை எப்படியாவது சம்மதிக்க வைத்து இடத்தைப் பிடிக்கிறோம். சில இடங்களில் மக்கள் போராட்டங்களைச் சமாளிக்க வேண்டிய சங்கடமும் எங்கள் தலையில்தான் விடிகிறது’’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x