

விபத்தில் சிக்கிய தன் மகளின் சிகிச்சைக்காக ராஜ்கோட்டில் இருந்து குஜராத், ஆந்திரா, ஹைதராபாத், சென்னை வரை பயணித்த ஒரு மராத்திக் குடும்பத்தின் உணர்ச்சிகரமான உண்மைக் கதை இது.
ஜூன் 7, 2017.
குஜராத்தில் இருந்து தன் மகளின் சிகிச்சைக்காக சென்னை வந்த குடும்பத்தினர் பொருளாதார உதவி வேண்டி 'தி இந்து' (தமிழ்) அலுவலகம் வந்திருந்தனர். ஆட்டோ ஓட்டுநரான கரீம் பாய் என்பவர் அவர்களை அலுவலகத்துக்கு அழைத்து வந்திருந்தார். வைசாலிக்கு எந்த வகையில் உதவலாம் என்பது குறித்து ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஆசிரியர் கேட்டார். ''முகச்சீரமைப்பு நிபுணர் பாலாஜியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''
''இல்லை சார், தெரிந்துகொள்கிறேன்''
கீழே வந்து கூகுளாண்டவரிடம் கேட்டேன். அது இந்தியாவின் சிறந்த முகச்சீரமைப்பு நிபுணர்களில் ஒருவர் பாலாஜி என்றது. சற்றே நிம்மதியுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
மருத்துவர் பாலாஜியின் உதவியாளர் தனலட்சுமியிடம் தொலைபேசினேன்.
''வணக்கம் மேம், எங்க ஆபிஸுக்கு குஜராத்ல இருந்து ஒரு ஃபேமிலி வந்துருக்காங்க...'' எனத் தொடங்கி முழு விவரத்தையும் கூறினேன். பொறுமையாய்க் கேட்டவர் உடனடியாக அடுத்த நாளே மருத்துவமனைக்கு வரச்சொன்னார்.
மதியம் 12 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். வைசாலி நேற்றைக் காட்டிலும் இன்று கொஞ்சம் தெளிவாக இருந்தார். வரவேற்பறையில் காத்திருந்தோம். அங்கு மருத்துவமனை சுவர்கள் முழுவதும் மாட்டப்பட்டிருந்த விருதுகளும், சான்றிதழ்களும் மருத்துவரின் பெருமையைப் பறைசாற்றின.
தனலட்சுமி எங்களை உள்ளே அழைத்தார். வைசாலியைப் பரிசோதித்தவர், ஸ்கேன் எடுத்து வரவேண்டும் என்றார். சற்றே தூரத்தில் இருந்த ஸ்கேன் மையத்தில் வைசாலியின் தலைப்பகுதி முழுமையாக ஆராயப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றோம். ஏற்கெனவே நான் வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனை செல்ல, அவர்கள் ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவுக்கான கட்டணத்தை நான் கொடுக்க, திரும்பக் கொடுக்க எத்தனித்தனர்.
இயலாத நிலையிலும் பணத்தைத் திரும்பக் கொடுக்கத் தோன்றிய அவர்களின் மனசுக்காகவே வைசாலி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
உள்ளே இருந்த மருத்துவர்கள் வைசாலியை நன்கு பரிசோதித்தனர். அவர்களின் மருத்துவ மொழி புரியாவிட்டாலும் சிகிச்சை சிக்கலாகவே இருக்கும் என்பது மட்டும் புரிந்தது.
எதுவும் புரியாமல் வைசாலி குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்தனர். நல்ல வேளையாக இந்தி தெரிந்த மருத்துவர் ஒருவர் அங்கிருந்தார். அவர்களிடம் நிலைமையை விரிவாக விளக்கினார்.
''சிகிச்சையின் முதல்கட்டமான வைசாலியின் வாயைத் திறக்க வேண்டும். அண்ணத்தில் இருக்கும் ஓட்டையை அடைக்க வேண்டும், அதற்குத் தொடையில் இருந்து திசுக்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பின்னரே வைசாலிக்கு முகச் சீரமைப்பைத் தொடங்க வேண்டும்'' என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகுமோ என்ற கவலையின் சாயல் அவர்களின் முகத்தில் படர்ந்தது.
இடையில் குறுக்கிட்ட நான், மருத்துவரிடம் ''அவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. நல்லெண்ண அடிப்படையில் மருத்துவமனையே இலவசமாக சிகிச்சையை மேற்கொள்கிறது. அதையும் மீறி மருந்து, மாத்திரை உள்ளிட்ட செலவுகள் இருந்தால் 'தி இந்து' வாசகர்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பதையும் கூறச் சொன்னேன்
மருத்துவர் சொல்லச் சொல்ல அவர்களின் முகம் தெளிய ஆரம்பித்தது. விரைவில் அறுவை சிகிச்சைக்கான தேதியைத் தெரிவிக்கிறோம் என்று கூறிய மருத்துவர்கள், தேவைப்படும்போது அழைக்கிறோம் என்று எங்களை அனுப்பி வைத்தனர். நம்பிக்கையுடன் வெளியே வந்தோம்.
பாஷை புரியாவிட்டால் என்ன? அன்புக்குத்தான் மொழி தேவையில்லையே...
சைகையாலும், தலையசைப்பாலும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். ஆனாலும் அவர்களிடத்தில் சிறு கவலை மண்டியிருந்தது. என்னவென்று கேட்டபோது,
''ஆயிரம் விளக்கு பகுதியில் நாங்கள் தங்கியிருக்கும் விடுதியின் தினசரி வாடகை ரூ.800 ஆகிறது. இன்னும் எத்தனை நாட்கள் தங்க வேண்டியிருக்குமோ.... கடனாக வாங்கி வந்த காசும் கரைந்துகொண்டிருக்கிறது'' என்று அவர்கள் சொன்னது எனக்குப் புரிந்தது.
சிகிச்சைக்கு வழி செய்தாகிவிட்டது. அவர்கள் உண்ணவும், தங்கவும் என்ன செய்வது?
- பயணம் தொடரும்...
தொடர்புக்கு: 7401297413
உதவ விரும்புவோர்: Acc Name: VAISALI MANOHAR PAWAR
Acc No: 916010031591536,
AXIS BANK (METODA, GIDC), IFSC Code- UTIB0000809.