Published : 27 Jul 2017 15:26 pm

Updated : 27 Jul 2017 15:59 pm

 

Published : 27 Jul 2017 03:26 PM
Last Updated : 27 Jul 2017 03:59 PM

கலாம் நினைவு: உயிரை பணயம் வைத்த ஆராய்ச்சி

இந்திய ராக்கெட் தொழில்நுட்ப ரகசியத்தைக் கடத்தியதாக முக்கிய விஞ்ஞானியான நம்பி நாராயணன் உள்ளிட்ட சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உடல் மற்றும் மன உளைச்சலும் சிறை வாசமும் அனுபவித்து, பின் நிரபராதி என்று விடுதலையானார் நம்பி நாராயணன். இப்போது அவருடைய கதை கேரளத்தில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தன்னுடன் பணிபுரிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனான நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்:

‘‘திருவனந்தபுரத்தை ஒட்டிய ‘தும்பா ராக்கெட் ஏவும் தள’த்தில் 1966 செப்டம்பர் 12 ம் தேதி பணியில் சேர்ந்தேன்.  RED (ராக்கெட் இன்ஜினீயரிங் டிவிஷன்) என்ற குழுவில் அப்துல் கலாம், வி.சுதாகர், சி.ஆர்.சத்யா, அப்துல் மஜீத் ஆகியோர் கொண்ட குழுவாக இயங்கி வந்தது. இவர்களோடு ஐந்தாவது நபராக நானும் இணைந்து கொண்டேன்.

அகமதாபாதில் இருக்கும் பிஸிகல் ரிசர்ச் லாபரட்டரி நிறுவனத்தின் சேர்மனாக விக்ரம் சாராபாய் இருந்தார். விமான விபத்தில் 1966-ல் ஹோமி பாபா இறந்த பின் அட்டாமிக் எனர்ஜி கமிஷன் தலைவராகவும் சாராபாய் பொறுப்பேற்றார். அவர்தான் தும்பா ராக்கெட் ஏவும் தளத்துக்கும் தலைவர். அவரின் தலைமையின் கீழ்தான் கலாமும், நானும் பணியாற்றி வந்தோம்.

ராக்கெட் கனவு

நாங்கள் தும்பாவில் பணிபுரிந்தபோது கலாம் ஒரு சிறிய ராக்கெட்டைத் தயாரித்ததைப் பார்த்தேன். அது பற்றிக் கேட்டேன். ‘‘நமக்கு எப்போதாவதுதான் அகமதாபாதிலிருந்து வேலை வருகிறது. அதுவரை சும்மா இருக்க என்னால் முடியாது. நானாக இந்த ராக்கெட்டை என் சொந்தப் பொறுப்பில் செய்து வருகிறேன்’’ என்றார். அந்த ராக்கெட்டின் படத்தை எனக்குக் காட்டினார். அதன் பெயர் D-one என வைத்திருந்தார். 

‘‘டி-ஒன் எனப் பெயர் வைத்திருக்கிறீர்களே, ஏ-ஒன், பி-ஒன், சி-ஒன் எல்லாம் தயாரித்து விட்டீர்களா?’’ என்று அவரைக் கேட்டேன். அதற்கு கலாம், ‘‘இல்லை. என் முதல் ராக்கெட்டே டி-ஒன்தான். இதன் விரிவான பெயர் ‘ட்ரீமர்-ஒன்’ என்பதாகும்’’ என்று சொன்னார்.

 அவர் பெரிய பெரிய ராக்கெட்டையெல்லாம் கனவு கண்டதன் அடிப்படை அந்தக் குட்டி ராக்கெட், டி-ஒன்! அதன் விட்டம் மூன்று அங்குலம். தற்போது நாம் அனுப்பும் ராக்கெட்டின் விட்டம் 2.7 மீட்டர். கிட்டத்தட்ட 9 அடி என்றால், அன்று கலாம் தயாரித்த ட்ரீமர்-ஒன் என்ற ராக்கெட்டின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள்!

ஆபத்தான ஆராய்ச்சி

எனக்கு ‘பைரோ டெக்னிக்’ பிரிவில் முதல் அசைன்மென்ட் கொடுத்தார்கள். பைரோ டெக்னிக் சாதனம் மூலம் பூமியில் இருந்தபடி, விண்வெளியில் போய்க் கொண்டிருக்கும் ராக்கெட்டில் செயல்களைச் செய்ய வைக்க முடியும். இதில் வெடிபொருட்கள் கையாளுவதும் அடக்கம். ராக்கெட் 140 கி.மீ. உயரத்தில் மேலே செல்லும்போது அதில் சோடியம் வேப்பரை எரிய வைப்பது குறித்த அசைன்மெண்டை கலாம் எனக்குத் தந்தார்.

சோடியத்தை எரிய வைக்கும்போது அதன் ஜ்வாலைகள் காற்றில் நடனமாடும். இதைவைத்து காற்றின் அழுத்தம் அளவிடப்படும். இதை நான்கு நாடுகளிலிருந்தபடி கண்டு அளவிடுவார்கள். இந்தச் சோதனையை நாங்கள் மேற்கொள்ளும் சமயத்தில் நூலகத்தில் தற்செயலாக நான் ஒரு விஞ்ஞானியின் கட்டுரையைப் படித்தேன். ராக்கெட் உயரப் போகும்போது காற்றின் அழுத்தம் (atmospheric pressure) குறையும். எனவே, தீ பற்றாது என்பது அவருடைய கண்டுபிடிப்பு. இதை நான் கலாமிடம் சொன்னேன். அதை உறுதிப்படுத்த சிறிய அளவில் ஒரு பரிசோதனை செய்து பார்க்குமாறு அவர் கூறினார்.

வசதிகளும் கருவிகளும் அதிகம் இல்லாத காலம் அது. ஒரு மேஜை மீது பெல் ஜார் ஒன்றை வைத்து அதனுள் கன் பவுடர், அதைக் கொளுத்துவதற்கான தீக்குச்சி போன்ற ஒரு பொருள், உள்ளிருக்கும் காற்றை வெளியே அகற்ற ஒரு வேக்குவம் பம்ப் ஆகியவற்றைத் தயார் செய்தோம். அதைப் பரீட்சார்த்தமாக இயக்கிப் பலமுறை பார்த்தபோது அது தீப்பற்றவில்லை. காரணம் காற்றின் அழுத்தம் குறைவாகிப் போனதுதான். இதை கலாமிடம் சொன்னோம். அவர் வந்து ஜாடியின் மிக அருகில் நின்று பலமுறை சோதித்துப் பார்த்தார்.

கலாமை காப்பாற்றினேன்

கடைசிமுறை சோதிக்கிறபோது ஜாடியின் உள்ளே இருக்கும் காற்றை வெளியே இழுக்கும் பைப்புடன் இணைத்திருந்த வால்வைத் தவறுதலாக இயக்காமல்  விட்டிருக்கிறார். அது என் கவனத்தில் பட்டது. இதனால் உள்ளே இருக்கும் கன் பவுடர் இன்னும் ஐந்து விநாடியில் வெடிக்கப் போகிறது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

யாரையும் எச்சரித்து அறையை விட்டு வெளியேற்ற அவகாசமில்லை. சாதாரணமாக யாரும் உயிர் தப்பி ஓடவே பார்ப்பார்கள். நான் வேகமாகக் கலாம் மீது பாய்ந்து மேஜைக்குக் கீழே அவரைத் தள்ளினேன். கலாம் கீழே, அவர் மீது நான். மேலே ஜார் வெடித்து அறை முழுக்க கண்ணாடித் துகள். கடவுள் அருளால் கலாம் பிழைத்தார் என்றாலும் அவர் முகம், மூக்கு அடிபட்டு ரத்தம் வழிந்தது.

கீழிருந்து எழுந்த கலாம், தனக்கு ஏற்பட்ட காயம், வழிந்த ரத்தம் ஆகியவை பற்றிக் கவலைப்படாமல்,  ‘‘நம்பி, யு ஸீ தட் இட் ஹேஸ் ஒர்க்டு’’ (‘நீங்க ஒர்க் பண்ணாது என்று சொன்னீர்களே, அது வேலை செய்கிறது’ என்கிற அர்த்தத்தில்) என்று கிண்டலாகச் சொல்லிச் சிரித்தார். இறங்கிய காரியத்தில் வெற்றிகண்டதுதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்ததே தவிர, தனக்கு ஏற்பட்ட காயம், இழந்த ரத்தம் பெரிதாகத் தெரியவில்லை. அதுதான் கலாம்!

சாதித்த ஆராய்ச்சி

அப்துல் கலாம் திட எரிபொருள் இன்ஜினிலும் நான் திரவ எரிபொருள் இன்ஜினிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டோம். பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் திடம், திரவம் இரண்டும் பயன்படுத்தப் படுகின்றன. இதுவரை 40 முறை ஏவப்பட்டும் ஒருதடவை கூடத் தோல்வி காணாத ராக்கெட்தான் பி.எஸ்.எல்.வி.

nambi narayananjpgநம்பி நாராயணன்

2.7 மீட்டர் விட்டமுள்ள பெரிய சைஸ் திட எரிபொருள் இன்ஜின் ராக்கெட் இன்றைக்கு உலகில் இரண்டு நாடுகளிடம்தான் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று இந்தியா.

திட எரிபொருள் இன்ஜின்  ராக்கெட் இந்தியாவிடம் உள்ளதற்கான முழுப் பெருமையும் கலாம் அவர்களையே சேரும்.

திட எரிபொருள் இன்ஜின் ராக்கெட்டில் கலாம் சாதித்தார். விண்வெளித் துறையில் இந்திய சாதனைகளுக்கு திடம்,  மற்றும் திரவ எரிபொருள் இன்ஜின்கள் இரண்டும்தான் காரணம்.

இஸ்ரோவின் எஸ்எல்வி-3 விண்கலம் 1980 ஜூனில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைக்கு உலக நாடுகள் நம்மைப் பார்த்து புருவம் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கும் ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கெல்லாம் அடிப்படை எஸ்.எல்.வி.-3. இதன் வெற்றியில் பெரும்பங்கு கலாமுக்குத்தான் சேரும்.

மக்கள் மதித்த தலைவர்

1966 லிருந்து 1982 வரை கலாம் இஸ்ரோவில் இருந்தார். இரண்டு வருடங்கள் அவர் குழுவில் சேர்ந்து பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்.  அவர் ஜனாதிபதியாக இருந்தபோது ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். எனக்குக் குறித்திருந்த நேரத்துக்கு மேல் அரை மணி நேரம் ஓடியது. எனக்கு வருத்தமாக இருந்தது. அரை மணிக்குப் பின் நான் அழைக்கப்பட்டேன். ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்ட கலாம், ‘‘நம்பி, உங்ககூட நிறைய நேரம் செலவழிக்கணும்னுதான் எல்லோரையும் பேசி அனுப்பினேன். காக்க வைத்ததற்கு மன்னியுங்கள்’’ என்றார் பெருந்தன்மையுடனும், பாசத்துடனும்.

கலாமின் மறைவின்போது இந்தியா முழுவதிலும் மக்கள் காட்டிய பேரன்புக்கு என்ன காரணம் என்று யோசித்தால், மக்கள் மனதின் ஆழத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு வாழ்க்கையை, அம்மாதிரி வாழும் உயர்வான தலைவரை விரும்புகிறார்கள்.. அதுதான் கலாமுக்குக் கிடைத்த அற்புதமான மரியாதைக்கு அடிப்படை என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்திய ராக்கெட் தொழில்நுட்பம்ராக்கெட் ரகசியம்நம்பி நாராயணன்அப்துல் கலாம் நினைவுகள்அப்துல் கலாம் அஞ்சலிராக்கெட் கனவுஆபத்தான ஆராய்ச்சிகலாம் ஆராய்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author