Published : 14 Jul 2017 10:33 am

Updated : 14 Jul 2017 10:34 am

 

Published : 14 Jul 2017 10:33 AM
Last Updated : 14 Jul 2017 10:34 AM

மைலாடி கல்லெடுத்து.. மகத்துவமா சிலை வடித்து..!

தலையாட்டிப் பொம்மைக்கு தஞ்சாவூர் எப்படியோ அதுபோல, கோயில் விக்கிரகங்களுக்கு பேர்போன ஊர் மைலாடி. புதிதாக எழும்பும் கேரளம் மற்றும் தென் தமிழகத்தின் பெரும்பகுதி கோயில்களின் சிலைகள் இங்குதான் பிரசவிக்கின்றன.

குமரி மாவட்டத்தில் உள்ள மைலாடி, பேசும் சிற்பங்களின் ஊர். சிலைகள் வடிப்பது மாத்திரமில்லாமல் கோயில் சிற்பங்கள் மற்றும் சுதை வேலைகளைச் செய்வதிலும் இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் கைதேர்ந்தவர்கள். இங்குள்ள முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில் காலை 9 மணிக்குத் தொடங்கும் உளிச் சத்தம் பொழுது சாய்ந்தாலும் ஓய்வதில்லை. இங்கு, சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர்.


எண்ணப்படி சிலைகளை வடிக்க..

கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை தொடங்கி, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை வரைக்கும் எல்லாமே மைலாடி தொழிலாளர்களின் கைவண்ணம்தான். தமிழகம் முழுவதுமிருக்கும் அரசியல் தலைவர்களின் சிலைகளை செதுக்கித் தந்ததிலும் மைலாடிக்கு பெரும்பங்கி ருக்கிறது. மைலாடி சிலைகள் இவ்வளவு மகத்துவம் பெறக் காரணமே, எண்ணப்படி சிலைகளை வடிக்க ஏதுவாக இங்கு கிடைக்கும் விசேஷமான கல்தான்.

முன்பு, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் கட்டுமானத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையிலிருந்து சிற்பக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்படி வந்தவர்கள் மைலாடியில் உள்ள தெங்கன் பொற்றை மலையின் கல் வளத்தைப் பார்த்துவிட்டு, நிரந்தரமாக மைலாடியிலேயே தங்கிப்போனார்கள். அவர்களின் வாரிசுகளே இப்போதும் இங்கே சிற்பங்களைப் படைக்கிறார்கள்.

அனுபவப் பாடம்தான்

இதுகுறித்துப் பேசிய மைலாடி கல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாணிக்கம், “இங்கு, முற்றிலும் ஆகம விதிப்படி கல் சிற்பப் பணிகள், சுதை பணிகள், கொடிமரப் பணியுடன் கூடிய பீடத் திருப்பணிகள், திருக் கோயில் கட்டுமானப் பணிகள் உள் ளிட்டவைகளைச் செய்ய சிற்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில்லாமல், கோபுரங்கள், ஸ்தூபி பணிகள் தொடங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் செய்தல், கல்வெட்டு வடித்தல் என அனைத்துவிதமான கல் வேலைகளைச் செய்யவும் ஆள் இருக்கு. முறைப்படி சிற்பக் கல்லூரியில படித்த சிலர் இங்கே இருந்தாலும் பெரும்பாலானவங்களுக்கு அனுபவமே பாடம்.” என்கிறார்.

அவரே தொடர்ந்தும் பேசுகையில், ‘‘முன்னாடி இதே பகுதியில் உள்ள தெங்கன் பொற்றை மலையில் இருந்து தான் சிற்பங்களுக்கு கல் எடுத்தோம். ஆனா, கடந்த ஏழெட்டு வருசமா இங்கே கல் எடுக்க அரசு அனுமதி தரல. இப்ப, வெளியூர்களில் இருந்துதான் கல் வந்துட்டு இருக்கு. மைலாடி கல்லுதான் சிலைகளுக்கு ஏற்ற கல். துவாரங்கள், வெடிப்புகள் இருக்காது. அடிக்கும்போது எழும் நாதமே மைலாடி கல்லின் தரத்தைச் சொல்லிவிடும்.

அடர் கருப்பாகவும், மென்மை தன்மை உடையதாகவும் இருக்கும். மைலாடி கல்லில் உளி இஷ்டம் போல் விளையாடும். வெளியிலிருந்து வரும் கற்களில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இதனாலேயே மைலாடி சிற்பக் கலையில் இப்ப சின்னதா ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கு. பழையபடி அரசு தெங்கன் பொற்றையில் சிற்பங்களுக்குக் கல் எடுக்க அனுமதித்தால் இங்கே சிற்பத் தொழில் இன்னும் சிறப்படையும்.” என்றும் சொன்னார்.

ஜெயலலிதா சிலைக்கும் ஆர்டர்கள் வந்தாச்சு!

தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் பெரும்பாலானவை மைலாடியில் வடிக்கப்பட்டவையே. அமெரிக்காவில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இங்கு தயாரானதுதான். அண்மையில், ஜெயலலிதாவுக்கும் சிலைகள் செய்ய இங்கே ஆர்டர்கள் வந்திருக்கின்றன. அப்படி ஆர்டர் கொடுத்தவர்களில் சிலர், ‘கட்சிக் குழப்பங்கள் தீரட்டும் அதுவரை பொறுத்திருங்கள்’ என்று சொல்லி ஆர்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்!
கோயில் விக்கிரகம்மைலாடி சிலைகள்மைலாடி கல்கடவுள் சிலைகள்சிற்பத் தொழில்சிற்புகள்< கல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம்ஜெயலலிதா சிலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x